This article is from Jun 12, 2021

வடபழனி கோவிலின் நிலத்தை மீட்ட நடவடிக்கை செட்டப்பா ? ஆக்கிரமிப்பே இல்லையா ?

பரவிய செய்தி

சென்னை சாலிகிராம் பகுதியில் பழைய சர்வே எண் 21,23, 25 மற்றும் 26 ஆகியவற்றின்படி மொத்த பரப்பளவு 5.38 ஏக்கர் வடபழனி கோயில் பெயரில் உள்ள பட்டா நிலத்தை மீட்டதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவுக்கு பாராட்டுகள் குவிவதாக ஒரு செய்தி பரப்பப்பட்டது. உண்மை நிலை என்னவென்றால், கோயில் சொத்து கோயிலின் பெயரிலேயே இருக்கும் போது அதை யாரிடம் இருந்து மீட்டார்கள் என்று கேட்டால் அந்த நிலத்தில் வாடகை கொடுக்காமல் வாகனங்களை பார்க்கிங் செய்திருந்தவர்களிடம் இருந்து மீட்டதாக படம் காண்பித்திருக்கிறது திமுக ஆட்சி.

Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

சில நாட்களுக்கு முன்பு சென்னை வடபழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான சுமார் 250 கோடி மதிப்புள்ள 5.5 ஏக்கர் நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தலைமையில் மீட்கப்பட்டதாக ஊடகங்ளில் செய்திகள் வெளியாகின. இது சமூக வலைதளங்களில் பலரது பாராட்டுகளையும் பெற்றது.

இந்நிலையில், ஆக்கிரமிப்பு செய்யப்படாத நிலத்தை மீட்டது போன்ற செட்டப் ஒன்றை அறநிலையத்துறை அமைச்சர் உள்ளிட்டோர் மேற்கொண்டதாக செய்தித்தாள் ஒன்றில் வெளியான குறுஞ்செய்தி பக்கத்தின் புகைப்படம் ட்விட்டர் உள்ளிட்டவையில் பகிரப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ?

சென்னை காந்திநகர் கருணாநிதி தெருவில் அமைந்துள்ள சுமார் ரூ.250 கோடி மதிப்புள்ள வடபழனி முருகன் கோயிலின் இந்த சொத்தில் (சர்வே எண்கள், 21/2, 23/1, 25/1, 26/1 ) 5.52 ஏக்கரின் ஒரு பகுதியை கடந்த 2008 ஆம் ஆண்டு பணிபுரியும் மகளிர்களுக்கு விடுதி கட்டுவதற்காக, மகளிர் மேம்பாட்டு கழகத்திற்கு மாதம் 1 லட்சம் ரூபாய் வாடகை என்ற அடிப்படையில் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் முறையாக வாடகை தராமல் அதற்கு நிலுவைத்தொகை அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.

அதுபோக மீதமுள்ள காலியிடங்கள் கட்டண வாகன நிறுத்தமாக தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்துள்ளது. அங்கு சினிமா தொழிலாளர் அமைப்பான ஃபெப்சி நிறுவன வாகனங்கள் மற்றும் பல்வேறு தனியார் வாகனங்கள் நிறுத்தும் இடமாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. சுமார் 10 ஆண்டுகளாக முடங்கிக்கிடந்த இந்த இடத்தை மீட்க கோவில் சார்பில் பல முறை மனுக்கள் அளிக்கப்படட்டுள்ளன. ஆனால், நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இது குறித்து ANI செய்திக்கு அப்பகுதியில் வசிக்கும் ஒருவர் கூறியுள்ளதாவது, ” இந்த குறிப்பிட்ட நிலம் 100 ஆண்டுகளுக்கும் மேலாக வடபழனி கோயிலுக்கு சொந்தமானது. குழந்தைகள் இந்த நிலங்களில் விளையாடி வந்தனர். இந்த நிலத்தின் சொத்து மதிப்பு 100 கோடிக்கும் அதிகமாகும். பின்னர் வாகனங்கள் இங்கு சட்டவிரோதமாக நிறுத்தப்பட்டன. முந்தைய அரசாங்கங்கள் இதற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளை நாங்கள் பாராட்டுகிறோம் ” எனக் கூறியுள்ளார்.

இது குறித்து அமைச்சர் சேகர் பாபு அளித்த பேட்டியில், ” இந்த நிலம் தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வாகன நிறுத்தமாக பயன்படுத்தப்பட்டு பல லட்சங்கள் சம்பாரிக்கப்பட்டு வந்துள்ளது. இதனை முதலமைச்சர் கவனத்திற்கு சட்டபேரவை உறுப்பினர்கள் கருணாநிதி அவர்களும், பிரபாகர் ராஜா அவர்களும் கொண்டுவந்தனர். கோவிலுக்கு சொந்தமான நிலத்தை தனியார்கள் பயன்படுத்தி கொள்ளையடிப்பதை தடுக்க காவல்துறை, அறநிலையத்துறை மற்றும் சென்னை மாநகராட்சி மூன்றும் இணைத்து இந்த நிலத்தை மீட்டுள்ளோம். ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஒரு நாள் அவகாசம் கொடுத்துள்ளோம். ” என தெரிவித்துள்ளார்.

வடபழனி கோவில் நிலம் மீட்கப்பட்டது தொடர்பாக ஜூன் 7-ம் தேதி தினமலர்சபாஷ்! சென்னை வடபழநி கோவில் நிலம் மீட்பு ” எனும் தலைப்பில் ஓர் செய்தி வெளியிட்டு இருந்தது. அதில், ” வடபழனி ஆண்டவர் கோவில் சொத்துக்கள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது தொடர்பாக கடந்த ஆட்சியின் போது கோவில் சார்பில் பல முறை மனுக்கள் அளிக்கப்பட்டன. ஆனால், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த விசயத்தில் தங்களின் பொறுப்பை தட்டிக்கழித்து ஆக்கிரமிப்பாளர்களுக்கு துணை போன அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற சொத்து ஆக்கிரமிப்புகள் இன்றோ, நேற்றோ திடீரென முளைத்து விடவில்லை. 10 ஆண்டுகளாக ஊரறிய அரங்கேறி வந்துள்ளன. இதைத் தடுக்க தவறிய அதிகாரிகள் மீது ” சஸ்பெண்ட் ” உள்ளிட்ட துறை சார்ந்த கடு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் ” எனக் கூறப்பட்டுள்ளது.

இங்கு மூடப்பட்ட மகளிர் விடுதியை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. கோவில் பெயரில் உள்ள நிலத்தை ஆவண மாற்றம் செய்தால் மட்டும் ஆக்கிரமிப்பு இல்லை. நிலத்தை தங்கள் அதிகாரக் கட்டுப்பாட்டில் வைத்து பணம் சம்பாரிக்கும் செயலும் ஆக்கிரமிப்பே. எனினும், இதை செய்தவர்களின் விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. கோவில் சொத்துக்களை ஆக்கிரமிப்பு செய்பவர்களை யார் என தெரியப்படுத்துவதும், அதற்கு உதவிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதும் அத்துறையின் கடமை.

முடிவு :

நம் தேடலில், நீண்டகாலமாக கோவிலுக்கு சொந்தமான நிலத்தை தனியாரால் ஆக்கிரமிப்பு செய்து வாகனங்கள் நிறுத்த பயன்படுத்தி வந்த நிலையில் அதை மீட்டு உள்ளனர். கோவில் நிலம் ஆக்கிரமிப்பு குறித்து பலமுறை கோவில் தரப்பிலும் மனுக்கள் அளிக்கப்பட்டு இருக்கிறது. வெறும் வாகனம் நிறுத்தப்பட்ட நிலத்தை மீட்டதாக தவறான தகவலை செய்தித்தாள் வடிவில் பரப்புவதை அறிய முடிகிறது.

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button
loader