வைகோ குடும்பத்துடன் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினாரா ?

பரவிய செய்தி
குடும்பத்துடன் மதம் மாறி விட்டார் வைகோ என மோகன் சி லாசரஸ்..! விளக்கம். கிறிஸ்தவர் வைகோ பிற மதத்தைப் பற்றி கருத்து தெரிவிக்கக் கூடாது.
மதிப்பீடு
விளக்கம்
கிறிஸ்தவ மத போதகர் மோகன் சி லாசரஸ், ” தமிழ்நாட்டில் அரசியல் கட்சித் தலைவர் திரு.வைகோ அவர்கள் இருக்கிறாங்க. அவரது மனைவி, பிள்ளைகள் எல்லோரும் ரச்சிக்கப்பட்டு சர்ச்சில் ஞானஸ்தானம் எடுத்துட்டாங்க. திரு.வைகோ ஒரு கட்சித் தலைவராக இருப்பதால இன்னும் ஓப்பனா அறிவிக்கலை. ஒரு நாளைக்கு இரு முறை பைபிள் வாசிக்கிறார். அவர் என்கிட்ட பேசும் போது, காலையிலும், ராத்திரியும் பைபிள் வாசிப்பேன். எப்படி ஜெபிக்கணும்னு கேட்டாரு ” எனப் பேசும் 1.07 நிமிட வீடியோ பகுதியை இந்து மக்கள் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளனர்.
இதையடுத்து, வைகோ குடும்பத்துடன் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியுள்ளார் என இவ்வீடியோ பகிரப்பட்டு வருகிறது. மோகன் சி லாசரஸ் கூறியது உண்மையா என அறிந்து கொள்ள தகவல்களை தேடிப் பார்த்தோம்.
உண்மை என்ன ?
மோகன் சி லாசரஸ் பேசும் 1.07 நிமிட வீடியோ குறித்து தேடிய பொழுது, 2017-ம் ஆண்டு நவம்பர் மாதமே வைகோ மதம் மாறி விட்டதாக இதே வீடியோவை முகநூல் பதிவு ஒன்றில் வெளியிட்டு இருந்தனர். இதுதொடர்பாக தேடிப் பார்க்கையில், நான் மதம் மாறவில்லை என வைகோ மறுப்பு தெரிவித்த செய்தி 2017-ம் ஆண்டே வெளியாகி இருக்கிறது. 2017-லேயே மோகன் சி லாசரஸ் பேசிய வீடியோ சர்ச்சையாகி விவாதத்திற்கு உள்ளாகி இருந்துள்ளது.
” என்னுடைய சகோதரி கிறிஸ்தவ மதத்தில் நம்பிக்கைக் கொண்டவர். மகள், மருமகன் கிறிஸ்தவ மதத்தில் இருக்கிறார்கள். நான் கிறிஸ்தவ மதத்தில் சேரவில்லை. மனித வாழ்வை நெறிப்படுத்தும் அத்தனை மதப்புத்தகங்களையும் படிப்பேன். தேவாரம், திருவாசகம், பைபிள், திருக்குர்ஆன் போன்றவற்றைப் படிப்பதை வழக்கமாகக் கொண்டவன். அதில், சொல்லப்பட்டுள்ள கருத்துக்களை என் உரையில் மேற்கோள்காட்டிப் பேசுவது வழக்கம்.
தாயார் இருந்தவரை, கலிங்கப்பட்டி வீட்டில் இந்துக் கடவுள்களின் படங்களுக்கு பூஜை செய்து, என் நெற்றியில் திருநீர் இடுவார். இப்போது என் மருமகள் பூஜை செய்கிறார். என்னுடைய மனைவி கிறிஸ்தவ ஆலயத்துக்கு சென்றுவருவார். எந்த மதத்தையும் வழிபாட்டையும் விமர்சித்தோ, புண்படுத்தியோ நான் பேசியதே கிடையாது. நான் கிறிஸ்தவ மதத்தில் சேரவும் இல்லை. திருக்குறளைப் படிப்பதுபோல, பைபிள், திருக்குர்ஆனையும் படிக்கிறேன் ” என விளக்கம் அளித்ததாக விகடன் கட்டுரை வெளியிட்டு இருந்தது.
இந்து தமிழ் உள்ளிட்ட பிற செய்தி இணையதளங்களும் வைகோ மறுப்பு தெரிவித்த செய்தியை வெளியிட்டு உள்ளனர்.
இதுமட்டுமின்றி, வைகோ மதம் மாறவில்லை என மறுப்பு தெரிவித்த நிலையில், மோகன் சி லாசரஸ் இவ்வாறு கூறி அப்பகுதி மக்களை மதமாற்றம் செய்து வருகிறார். எனவே மோகன் சி லாசரஸ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் மற்றும் நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்ததாக 2017-ல் நக்கீரன் செய்தி வெளியிட்டு உள்ளது.
அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.