2000 ரூபாய் நோட்டில் நிறைய குறைபாடுகள் இருப்பதால்தான் செல்லாது என அறிவித்ததாக வானதி சீனிவாசன் கூறினாரா ?

பரவிய செய்தி
2000 ரூபாய் நோட்டில் நிறைய குறைபாடுகள் இருப்பதால் எளிதில் கள்ளநோட்டுகள் அச்சடிக்கப்படுகின்றன. இதை கட்டுப்படுத்தவே 2000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. – பாஜக எம்.எல்.ஏ.வானதி சீனிவாசன்
மதிப்பீடு
விளக்கம்
இந்திய ரிசர்வ் வங்கியானது கடந்த மே 19 அன்று 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாகவும், அனைத்து வங்கிகளும் இனி ₹2000 ரூபாய் நோட்டுகளை வெளியிடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி வரும் மே 23-ஆம் தேதி முதல் பொதுமக்கள் தங்களுக்கு அருகிலுள்ள வங்கிகள் மூலமாக பணத்தை மாற்றி கொள்ளலாம் எனவும் அறிவித்தது.
மேலும் அந்த அறிவிப்பில் ஒரு தனிநபர் 2000 ரூபாய் நோட்டுகளை நாள் ஒன்றுக்கு 20,000/- ரூபாய் வரை மட்டுமே மாற்றிக் கொள்ள முடியும் எனவும், இவ்வாறு மாற்றிக் கொள்ள செப்டம்பர் 30 வரை அவகாசம் வழங்கியுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது “2000 ரூபாய் நோட்டில் நிறைய குறைபாடுகள் இருப்பதால் எளிதில் கள்ளநோட்டுகள் அச்சடிக்கப்படுகின்றன. இதை கட்டுப்படுத்தவே 2000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது” என பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கூறியதாக தந்தி டிவியின் நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் பரவலாகப் பரவி வருகிறது.
தமிழ் தாய் வாழ்த்தை ஏன்டா பாதியில நிறுத்துனிங்க ?? அதோட மெட்டு சரியில்லை..
ரெண்டாயிரம் ரூவாயை ஏன்டா நிறுத்துனிங்க ?? அந்த நோட்டு சரியில்லை..
😁😁😁😁😁 pic.twitter.com/fOmHrs9N7o— ஜோக்கர் ஃபீனிக்ஸ் (@Jokerphoenix14) May 21, 2023
சிறப்பு 👌 pic.twitter.com/jquD1bOExB
— நிதன் சிற்றரசு (@srinileaks) May 21, 2023
உண்மை என்ன?
பரவி வரும் நியூஸ் கார்டு குறித்து, தந்தி டிவி செய்தியின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களில் தேடியதில், இதுகுறித்து எந்த செய்திகளும் வெளியிடப்படவில்லை என்பதை அறிய முடிந்தது.
மேலும் பாஜக எம்.எல்.ஏ-வான வானதி சீனிவாசன் இதுகுறித்து ஊடகங்களுக்கு ஏதேனும் அறிக்கையோ, நேர்காணலோ வழங்கியிருக்கிறாரா என்பது குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், புதியதலைமுறை செய்தி வானதி சீனிவாசன் அவர்களின் செய்தியாளர் சந்திப்பின் நேரலை வீடியோவை வெளியிட்டுள்ளது.
அப்போது அந்த வீடியோவின் 3:25 வது நிமிடத்தில் செய்தியாளர் ஒருவர் 2000 ரூ பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து கேள்வியெழுப்பிய போது, அதற்கு பதிலளித்து பேசிய வானதி சீனிவாசன் “நாம் கடந்த முறை பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்த போது, என்ன நன்மை நடந்தது என்றால், யார் யாரிடம் எவ்வளவு பணம் இருக்கிறது, அவர்கள் யாருக்கெல்லாம் பணம் கொடுத்திருக்கிறார்கள் என்ற முழு கணக்கும் வந்தது. ஆனால் இன்றைக்கு 2000ரூ நோட்டுகளை பணமதிப்பிழப்பு செய்ததால் நீங்கள் சொன்ன மாதிரி ஏழைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை.
மேலும் 2000ரூ நோட்டுகளை செல்லாததாக மாற்றவில்லை. குறிப்பிட்ட காலத்திற்கு நீங்கள் வங்கிகளில் செலுத்திக் கொள்ளலாம். அதுவரை நீங்கள் மக்களிடம் கொடுத்து வாங்கிக் கொள்ளலாம் என்று சொல்கிறார்கள். இவ்வாறு செய்வதற்கு காரணம் என்ன? 2000ரூ நோட்டுகளை முழுமையாக புழக்கத்திலிருந்து திரும்பப் பெறுவதற்காகவே மத்திய அரசாங்கம் இவ்வாறு முடிவு பண்ணியிருக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தொடர்ந்த அவர் “நீங்கள் சொன்ன மாதிரியே இந்த நாட்டில் இருக்கக்கூடிய 95% மக்களுக்கு இதனால் எந்த பிரச்சனையும் இல்லை. யாருக்கு பிரச்சனை என்றால் 2000ரூ நோட்டுகளை கோடிக்கணக்கில் பதுக்கி வைத்திருக்கிற ஆளுங்களுக்கு தான் பிரச்சனை. அதனால் இந்த 2000ரூ நோட்டுகள் எல்லாம் எங்கே இருந்து வருகின்றது என்பதையெல்லாம் கண்காணித்தாலே அவர்கள் பற்றி தெரிந்து கொள்ள முடியும். இதன்பின் நடவடிக்கை எடுப்பதும் சுலபம்” என்று பேசியுள்ளார்.
மாறாக “2000 ரூபாய் நோட்டில் நிறைய குறைபாடுகள் இருப்பதால் தான் எளிதில் கள்ளநோட்டுகள் அச்சடிக்கப்படுகின்றன. இதை கட்டுப்படுத்தவே 2000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது” என்பது போன்று அவர் எந்த கருத்துகளும் தெரிவிக்கவில்லை என்பதை அவர் பேசிய வீடியோ மூலம் உறுதிபடுத்த முடிந்தது.
மேலும் தந்தி செய்தியின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் தேடியதில், கடந்த மே 20 அன்று அவர்கள் வானதி சீனிவாசன் 2000 ரூபாய் நோட்டுகள் தொடர்பாக பேசியது குறித்து, எந்த நியூஸ் கார்டும் வெளியிடவில்லை என்பதை அறிய முடிந்தது.
“மது குடிப்பவர்களின் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்..” – வானதி சீனிவாசன்#kovai #bjp #vanathisrinivasan #thanthitv https://t.co/vW0OYgi1NG
— Thanthi TV (@ThanthiTV) May 22, 2023
மேலும், மது குடிப்பவர்களின் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என வானதி சீனிவாசன் கூறியதாக வெளிவந்துள்ள கட்டுரை ஒன்றையே இன்று தந்தி செய்தி வெளியிட்டுள்ளது என்பதை காண முடிந்தது.
மேலும் படிக்க: 2000 ரூபாய் நோட்டு: கடந்து வந்த பாதைகள் மற்றும் பரவும் வதந்திகள்..!!
இதற்கு முன்பும், 2000ரூ நோட்டுகள் குறித்த இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவிப்புக்கு பிறகு சமூக வலைதளங்களில் பல வதந்திகளைப் பரப்பி வந்தனர். இதுகுறித்தும் யூடர்ன் கட்டுரை வெளியிட்டுள்ளது.
முடிவு :
நம் தேடலில், 2000ரூ நோட்டில் குறைபாடுகள் இருப்பதால் தான் கள்ளநோட்டுகள் அச்சடிப்பதாகவும், அதை கட்டுப்படுத்தவே செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறியதாகப் பரவும் தந்தி டிவியின் நியூஸ் கார்டு போலியானது என்பதை அறிய முடிகிறது.