வானதி சீனிவாசன் அலுவலகத்தில் இளைஞர் அடித்து கொலை எனப் பரவும் போலிச் செய்தி !

பரவிய செய்தி
வானதி சீனிவாசன் அலுவலகத்தில் இளைஞர் அடித்து கொலை அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பெற்ற பணத்தை பணத்தை திரும்ப கேட்டதாலேயே வானதி சீனிவாசன் ஆதரவாளர்களால் அந்த இளைஞர் கொடூர தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தகவல்.
மதிப்பீடு
விளக்கம்
இளைஞர் ஒருவருக்கு அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பெற்ற பணத்தைத் திரும்பக் கேட்டதினால், கோயம்புத்தூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் அலுவலகத்தில் அவரது ஆதரவாளர்கள் அந்த இளைஞரைத் தாக்கி கொலை செய்து இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருப்பதாகத் தினமலர் நியூஸ் கார்டு ஒன்று பரப்பப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் குறித்துப் பரவும் தினமலர் நியூஸ் கார்டு பற்றி அவர்களது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கங்களில் தேடினோம். அப்படி எந்த நியூஸ் கார்டையும் அவர்கள் பதிவிடவில்லை. நேற்றைய தினம் (ஜூன் 13ம் தேதி) வானதி சீனிவாசன் வேறொரு சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்ததது பற்றி நியூஸ் கார்டு பதிவிடப்பட்டுள்ளது.
அதில், “கோவை பா.ஜ., அலுவலகம் மீது, பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் பெரியார் தி.க.,வினர் மூவருக்கு, 7 ஆண்டு சிறை தண்டனை விதித்திருப்பது ஜனநாயகத்தில் இயங்கி கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் நம்பிக்கை அளிக்கும் தீர்ப்பாக உள்ளதாக பா.ஜ., எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் கருத்து” என்றுள்ளது.
மேற்கொண்டு இதுகுறித்துத் தேடியதில், கடந்த 12ம் தேதி வானதி சீனிவாசன் அலுவலகத்தில் மர்மநபர் ஒருவர் உள்ளே நுழைந்தது தொடர்பாக செய்திகள் வெளியாகியுள்ளது.
கோவை – ஓசூர் சாலையில் வானதி சீனிவாசனின் அலுவலகம் உள்ளது. 12ம் தேதி மாலை அலுவலகத்திற்கு புகுந்த மர்ம நபர் ஒருவர் திடீரென அறையின் கதவை உள்பக்கமாகப் பூட்ட முயற்சி செய்துள்ளார். அப்போது அலுவலகத்திலிருந்த அலுவலக உதவியாளர் விஜய் என்பவர் அந்த மர்ம நபரை வெளியே செல்லுமாறு கீழே தள்ளிவிட்டுள்ளார். பிறகு அந்நபர் அங்கிருந்து சென்று விட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத்தில் விஜய் புகார் அளித்துள்ளார். அதில், “இந்த நபர் மீது மிகவும் சந்தேகமாக உள்ளது. இவர் யார்? எதற்காக உள்ளே நுழைந்தார்? என்று விசாரிக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
இதற்கிடையே வானதி சீனிவாசன் அலுவலகத்திலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் அந்த மர்ம நபர் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இறந்ததாகச் செய்திகள் வெளியாகின.
அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து அவர் யாா், எதற்காக வானதி சீனிவாசன் அலுவலகத்திற்கு வந்தார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையில், அந்த மர்ம நபர் அரசுப் பேருந்து மோதி உயிரிழந்ததாக கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் என நியூஸ் 7 தமிழ், தினமணி இணையதளத்திலும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இவற்றிலிருந்து தினமலர் வெளியிட்டதாகப் பரவும் நியூஸ் கார்டு போலியாக எடிட் செய்யப்பட்டது என்பதை அறிய முடிகிறது.
முடிவு :
நம் தேடலில், வானதி சீனிவாசன் அலுவலகத்தில் இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டதாகப் பரவும் தினமலர் நியூஸ் கார்டு உண்மை அல்ல. அது போலியாக எடிட் செய்யப்பட்டது என்பதை அறிய முடிகிறது.