ஏர்லைன் ஸ்டைலில் வந்தே பாரத் லோகோ பைலட்கள் எனப் பரவும் டிக்கெட் பரிசோதகர்களின் வீடியோ !

பரவிய செய்தி
வந்தே பாரத் ரயில் லோகோ பைலட் குழுவினர்… இந்த அற்புதமான காட்சியை நீங்கள் எப்போதாவது கற்பனை செய்திருக்க முடியுமா? நிலக்கரி எஞ்சின் டிரைவர்கள் முதல் இந்த ஏர்லைன் ஸ்டைல் இன்ஜின் குழுவினர் வரை..
மதிப்பீடு
விளக்கம்
வந்தே பாரத் இரயிலில் பணிபுரியும் லோகோ பைலட் (ஓட்டுநர்கள்) என இரண்டு பெண்களில் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. அதில் வெள்ளை, கருப்பு உடை அணிந்த இரண்டு பெண்கள் நடந்து வந்து வந்தே பாரத் இரயில் ஏறுவது போன்ற காட்சி உள்ளது.
உண்மை என்ன ?
வந்தே பாரத் இரயில் ஓட்டுநர்கள் எனப் பரவும் வீடியோவின் கீப்ரேம்களை கொண்டு இணையத்தில் தேடியதில் அவர்கள் டிக்கெட் பரிசோதகர்கள் என்பதை அறிய முடிந்தது.
பரவக் கூடிய வீடியோவினை ‘Shijina Rajan’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த செப்டம்பர் 23ம் தேதி பதிவிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் இருக்கக்கூடிய இரண்டு பெண்களில் அவரும் ஒருவர் என்பதை அடையாளம் காண முடிந்தது. மேலும் அவரது பக்கத்தில் ‘TTE Railways’ (Travelling Ticket Examiner) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி பணியின்போது எடுக்கப்பட்ட வேறு வீடியோக்களையும் காண முடிந்தது.
View this post on Instagram
மேற்கொண்டு தேடியதில் கடந்த ஏப்ரல் மாதம் 25ம் தேதி வந்தே பாரத் இரயிலில் பெண்கள் டிக்கெட் பரிசோதகர் குறித்த யூடியூபில் வீடியோ ஒன்று கிடைத்தது. பரவக் கூடிய வீடியோவில் உள்ள மற்றொரு பெண் அதில் இருப்பதை காண முடிகிறது. வீடியோ எடுப்பவர் டிக்கெட் பரிசோதகர்களை அறிமுகம் செய்கிறார். அப்போது அப்பெண் தனது பெயர் ‘டயானா’ எனக் கூறுவதையும் கேட்க முடிகிறது.
டயானா TTE குறித்து ‘Kerala Kamudi’ என்னும் தளத்தில் செய்தி வெளியாகியுள்ளது. அதில், இந்தியத் தடகள வீராங்கனையும், கேரள மாநில விளையாட்டு கவுன்சிலின் முன்னாள் தலைவருமான பத்மினி தாமஸுடன் டயானா இருக்கும் படம் இடம்பெற்றுள்ளது.
மேலும் அதில் டயானாவின் முழு பெயர் ‘டயானா ஜான் செல்வன்’ என்று உள்ளது. அவர் பத்மினி தாமஸ் மற்றும் மறைந்த இந்தியத் தடகள வீரர் ஜான் செல்வன் ஆகியோரின் மகள் என்பதும் அச்செய்தியில் உள்ளது.
இவற்றில் இருந்து வந்தே பாரத் இரயில் ஓட்டுநர்கள் எனப் பரவும் வீடியோவில் இருப்பவர்கள் டிக்கெட் பரிசோதகர்கள் என்பதை அறிய முடிகிறது.
முடிவு :
நம் தேடலில், வந்தே பாரத் இரயில் ஓட்டும் பெண்கள் எனப் பரவும் வீடியோவில் இருப்பவர்கள் டிக்கெட் பரிசோதகர்கள். அவர்கள் லோகோ பைலேட் இல்லை என்பதை அறிய முடிகிறது.