வந்தே பாரத் ரயிலில் ஏசியில் இருந்து தண்ணீர் ஊற்றுவதாக தவறாகப் பரவும் பழைய வீடியோ

பரவிய செய்தி

பத்திரிக்கையாளர்களும், சங்கிகளும் கூட்டணி அமைத்து மரப்பாலத்தில தம்மாதூண்டு அதும் கடல் சீற்றத்தால் சேதமடைஞ்சதுக்கு கதறிக்கிட்டு இருக்கானுவ. ஆனா மோடி கொடியசைத்து தொடங்கி வைத்த பலநூறு கோடி செலவில் தயாரிக்கப்பட்ட வந்தேபாரத் இரயிலின் இன்றைய நிலையை பாருங்க.

Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்ட மரப்பாதையின் மேடை கடல் சீற்றத்தால் சேதமடைந்தது ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை அதிமுக, பாஜக உள்பட எதிர்க்கட்சிகளும் விமர்சித்து இருந்தனர்.

இதையடுத்து, பல நூறு கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்டு பிரதமர் மோடியால் கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்ட வந்தே பாரத் ரயிலின் ஏசியில் இருந்து தண்ணீர் ஊற்றுவதாக 20 நொடிகள் கொண்ட வீடியோவை திமுகவைச் சேர்ந்தவர்கள் சமூக வலைதளங்களில் வைரல் செய்து வருகின்றனர். இந்த வீடியோவை IBC தமிழ் சேனலும் பதிவிட்டு இருக்கிறது.

Archive link 

உண்மை என்ன ? 

பிரதமர் மோடி தொடங்கி வைத்த வந்தே பாரத் ரயிலில் இருக்கை வசதி மட்டுமே அமைக்கப்பட்டு உள்ளது. எதிர்காலத்தில் வந்தே பாரத் ரயில்களில் படுக்கை வசதிகளும் அமைக்கப்படும் என ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷவ் சமீபத்தில் தெரிவித்து இருந்தார்.

வைரல் செய்யப்படும் வீடியோவில் இருந்து ஸ்க்ரீன்சார்ட்களை எடுத்து ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், ” 2019 ஜூலை மாதம் சங்கமித்ரா அதிவிரைவு ரயிலின் ஏசியில் இருந்து தண்ணீர் ஊற்றும் வீடியோ வைரலாகி வருவதாக ” டெக்கான் குரோனிக்கல் செய்தியில் வெளியாகி இருந்தது.

2019ம் ஆண்டு ஜூன் 29ம் தேதி கர்நாடகாவின் பெங்களூரில் இருந்து பிகாரின் தனபூர் செல்லும் சங்கமித்ரா அதிவிரைவு ரயில் பயணத்தின் போது ஏசி வழியாக மழை நீர் ஊற்றுவதாக ட்விட்டர் பக்கத்தில் சுயக்யா ராய் என்பவர் பதிவிட்டு இருந்துள்ளார். இதுதொடர்பாக புகார் அளிக்கப்பட்ட உடன் அடுத்து வந்த ரயில் நிலையத்தில் மெக்கானிக் மூலம் தண்ணீர் ஊற்றுவது சரி செய்யப்பட்டதாக லைவ் மின்ட் செய்தியில் வெளியாகி இருக்கிறது.

Archive link 

முடிவு : 

நம் தேடலில், பிரதமர் மோடி தொடங்கி வைத்த வந்தே பாரத் ரயிலின் ஏசியில் இருந்து தண்ணீர் ஊற்றுவதாக வைரலாகும் வீடியோ தவறானது. அது வந்தே பாரத் ரயில் இல்லை. அந்த வீடியோ கடந்த 2019ல் கர்நாடகாவில் இருந்து பீகார் செல்லும் சங்கமித்ரா அதிவிரைவு ரயிலின் ஏசியில் இருந்து மழை நீர் ஊற்றிய போது எடுக்கப்பட்ட வீடியோ என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader