உ.பியில் தக்காளி கடைக்கு பவுன்சர்கள்… உண்மை தெரியாமல் செய்தி வெளியிட்ட ஊடகங்கள் !

பரவிய செய்தி
தக்காளியை பாதுகாக்க பவுன்சர்ஸ் உத்தரப் பிரதேசத்தில் தக்காளியை பாதுகாக்க பவுன்சர்களை நியமித்த காய்கறி வியாபாரி அஜய்; தக்காளியின் விலை உயர்ந்து வரும் நிலையில், கடைக்கு வரும் மக்கள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபடுவதாலும், கொள்ளையடித்துச் செல்வதாலும் பவுன்சர்களை நியமித்ததாக விளக்கம்.
மதிப்பீடு
விளக்கம்
பொதுவாக பருவமழை சீராக இல்லாததாலும், விளைபொருட்களை சரியான நேரத்தில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்து செல்லமுடியாத காரணத்தினாலும் இந்தியாவில் காய்கறிகள் விலை அடிக்கடி கூடுவது வழக்கமான ஒன்றாக உள்ளது. இந்நிலையில் தற்போது தக்காளியின் வரத்து குறைந்துள்ளதால் இந்தியாவின் பெரும்பான்மையான மாநிலங்களில் தக்காளியின் விலை கிலோவுக்கு ரூ 200 வரை விற்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் உத்தரப்பிரதேசத்திலிலுள்ள வாரணாசியில் தக்காளியை பாதுகாக்க பவுன்சர்களை நியமித்த காய்கறி வியாபாரி அஜய், தக்காளியின் விலை உயர்ந்து வரும் நிலையில், கடைக்கு வரும் மக்கள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபடுவதாலும், கொள்ளையடித்துச் செல்வதாலும் பாதுகாப்புக் கருதி பவுன்சர்களை நியமித்ததாகக் கூறி News 7 தமிழ், தந்தி டிவி, IBC தமிழ், OneIndia தமிழ், Times Now, The Indian Express, The Telegraph, The Tribune மற்றும் Mirror Now போன்ற இந்தியாவின் பல முக்கிய ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன.
உண்மை என்ன?
பரவி வரும் செய்திகள் குறித்து காய்கறி வியாபாரியான அஜய் ஃபௌஜியின் ட்விட்டர் பக்கத்தில் ஆய்வு செய்து பார்த்ததில், அவர் சமஜ்வாதி கட்சியின் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் என்பதையும், அவர் இவ்வாறு பவுன்சர்களை நியமித்து நூதன முறையில் போராட்டம் செய்துள்ளார் என்பதையும் அறிய முடிந்தது.
மேலும் ஜூலை 1, 2023 அன்று PTI இது குறித்து ட்வீட் ஒன்றையும் வெளியிட்டுள்ளது, அதில் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவின் பிறந்தநாளை வாரணாசியில் தக்காளி வடிவ கேக்கை வெட்டி அஜய் ஃபௌஜி கொண்டாடியுள்ளதையும் காண முடிந்தது. மேலும் தேடியதில் அவர் சமாஜ்வாதி கட்சியின் தலைவரான அகிலேஷ் ஆதவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படமும் கிடைத்தது.
ये भी तो बताओ @yadavakhilesh की ये हमारा सपा का ही आदमी 😂 https://t.co/v9ygyM8BL5 pic.twitter.com/UcP7SQq34b
— Lala (@FabulasGuy) July 9, 2023
மேலும் அஜய் தன்னுடைய காய்கறி கடையில் பவுன்சர்களை நியமித்தது குறித்து PTI ஊடகம் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது. அதனை பகிர்ந்துள்ள அகிலேஷ் யாதவ், இந்த வீடியோவைக் குறிப்பிட்டு “பாஜக தக்காளிகளுக்கு z plus பாதுகாப்பு கொடுக்க வேண்டும்” என நக்கலாக பதிவுசெய்துள்ளார். அந்த பதிவை அஜய் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளதையும் காண முடிந்தது.
எனவே இந்த வீடியோ வெளியிட்ட PTI ஊடகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், இது குறித்து தேடியதில், அந்த பதிவு நீக்கம் செய்யப்பட்டிருந்ததை காண முடிந்தது, மேலும் நீக்கப்பட்ட பதிவு குறித்து அவர்கள் விளக்கமும் கொடுத்திருந்தனர்.
அதில் “இதற்கு முன்னதாக, வாரணாசியில் காய்கறி விற்பனையாளர் ஒருவர் தக்காளியின் விலை உயர்வால் பவுன்சர்களை பணியமர்த்தியது பற்றிய செய்தியை PTI ட்வீட் செய்திருந்தது. ஆனால் விற்பனையாளர் சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்தவர் என்பதும், அவர் எங்களுக்குத் தகவல் கொடுத்ததன் நோக்கம் என்னவென்று தெரியாததால் அது கேள்விக்குறியாகவே உள்ளதால் அந்த ட்வீட்டை நீக்கியுள்ளோம். அந்த செய்தியின் மூலத்தை சரிபார்க்காமல் நாங்கள் தவறு செய்துவிட்டோம், மேலும் உங்களுக்காக நாங்கள் அமைத்துக் கொண்ட துல்லியம் மற்றும் நேர்மையின் உயர் தரங்களைச் சந்திக்கத் தவறிவிட்டோம். துல்லியமான மற்றும் சமரசமற்ற செய்திகளை வழங்குவதற்கு PTI உறுதியுடன் உள்ளது என்று எங்கள் வாசகர்களுக்கு உறுதியளிக்கிறோம்.” என்றும் குறிப்பிட்டுள்ளது.
Earlier today, PTI tweeted a story about a vegetable vendor in Varanasi hiring bouncers in light of high price of tomatoes. It has since come to our notice that the vendor is a worker of the Samajwadi Party, and his motive for giving us the information was questionable. We have,…
— Press Trust of India (@PTI_News) July 9, 2023
மேலும் அவர் பவுன்சர்களை நியமித்தியது தொடர்பான முழு வீடியோவை Piyush Rai என்பவரது ட்விட்டர் பக்கத்தில் காண முடிந்தது. அதில் காய்கறிக் கடையின் முன்பு அவர் பல பதாகைகளை வைத்திருந்ததையும், அதில் “முதலில் பணம், தற்போது தக்காளி” என்றும், “தக்காளி மற்றும் மிளகாயைத் தொடாதீர்கள்” என்றும், “9 வருட பணவீக்கம்” என்றும் குறிப்பிடப்பட்டிருந்ததையும் காண முடிந்தது.
இதன் மூலம் அவர் நூதன முறையில் தக்காளி விலையுயர்வுக்கு எதிராக போராட்டம் நடத்தியுள்ளார் என்பது உறுதியானது. மேலும் இவ்வாறு போராட்டம் நடத்தியதற்காக கடைக்காரர் கைது செய்யப்பட்டதாகவும், சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த அஜய் ஃபௌஜி தலைமறைவாக இருப்பது தொடர்பாகவும் Hindustan Times கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளதையும் காண முடிந்தது.
முடிவு:
நம் தேடலில், வாரணாசியில் தக்காளி விலையேற்றத்திற்காக பவுன்சர்களை நியமித்து போராட்டம் செய்தவரை, மக்கள் திருடிவிடக் கூடாது என்பதற்காக பாதுகாப்பு கருதி பவுன்சர்களை நியமித்ததாகக் கூறி News 7 தமிழ், தந்தி டிவி, IBC தமிழ் உட்பட பல முன்னணி ஊடகங்களும் தவறாக செய்தி வெளியிட்டுள்ளன என்பதை அறிய முடிகிறது.