வருணா என்ற கப்பலை இலங்கைக்கு வழங்கியதா இந்தியா ?

பரவிய செய்தி
வருணா என்ற இந்திய ரோந்து கப்பலை இலங்கைக்கு நன்கொடையாக கொடுக்கிறது மோடி அரசு.
மதிப்பீடு
சுருக்கம்
2017 செப்டம்பர் மாதம் இந்திய கடற்படையில் 30 ஆண்டுகளாக பணியாற்றிய வருணா என்ற ரோந்து கப்பலை இரு நாட்டு உறவுக்காக இலங்கை கடற்படைக்கு நன்கொடையாக வழங்கியது மத்திய அரசு. இதற்கு முன்பும் காங்கிரஸ் ஆட்சியில் கப்பல்கள் வழங்கப்பட்டுள்ளது.
விளக்கம்
அண்டை நாடான இலங்கை தொடர்ந்து இந்திய மாநிலமான தமிழகத்தின் மீனவர்களின் மீது துப்பாக்கிச்சூடு நடத்திக் கொண்டு இருக்கும் நேரத்தில் இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பலை மத்திய அரசு இலங்கைக்கு நன்கொடையாக வழங்குவதாக செய்தி பரவிக் கொண்டே இருக்கிறது.
30 ஆண்டுகளாக இந்திய கடற்படையில் சேவையாற்றிய வருணா என்ற ரோந்து கப்பல் முதல் பயிற்சி கால போர் கப்பலாக இருந்துள்ளது. மும்பை mazagon dock-ல் உருவான வருணா கப்பல் 10 ஆண்டுகள் பயிற்சி அளிக்கும் கப்பலாக இருந்ததோடு, 1980 காலக்கட்டத்தில் தங்க கடத்தலை பிடித்ததில் முக்கிய பங்காற்றியது.
இத்தகைய சிறப்புமிக்க வருணா கப்பலை 2017 செப்டம்பரில் மத்திய அரசு இலங்கை அரசிற்கு நன்கொடையாக வழங்கியது. இந்திய கடற்படை அதிகாரி ராஜேந்திர சிங் வழங்க இலங்கை கடற்படை அதிகாரி சமந்தா விமலதுங்கா பெற்றுக் கொண்டார்.
“ இரு நாடுகளுக்கு இடையேயான வரலாற்று மற்றும் கலச்சார இணைப்பின் தொடர் முயற்சியில் ஒரு பகுதியாக இந்திய கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பலை இலங்கை அரசின் பயிற்சி மற்றும் கண்காணிப்பு பணிக்காக வழங்குவதாக “ இந்திய கடற்படை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இலங்கைக்கு இந்திய ஒன்றியம் கப்பல்கள் வழங்குவது முதல் முறை அல்ல. 2017-ல் வருணா ரோந்து கப்பலை மத்திய பிஜேபி அரசு ஆட்சியில் வழங்கியது போன்று காங்கிரஸ் ஆட்சியிலும் இரு கப்பல்கள் வழங்கப்பட்டுள்ளன.
2006 ஏப்ரலில் வரஹா என்ற ரோந்து கப்பலும், 2008 ஆகஸ்டில் விக்ரஹா என்ற ரோந்து கப்பலும் காங்கிரஸ் ஆட்சியில் இலங்கை கடற்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.