கி.வீரமணி நடத்தி வைத்த பேத்தி திருமணம் என வைரலாகும் வீடியோ உண்மையா ?

பரவிய செய்தி

ஊர்ல இருக்குறவன் பொண்டாட்டி தாலிய அறுப்பாங்களாம், ஆனா இவர் பேத்திக்கு மட்டும் தாலிய எடுத்து கொடுத்து கட்ட சொல்வாராம் கி.வீரமணி..

மதிப்பீடு

விளக்கம்

திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி, தாலி என்பது ஆண்களுக்கு பெண்கள் அடிமைப்பட்டு இருப்பதற்கான அடையாளம் என தாலி அகற்றும் போராட்டத்தினை நிகழ்த்தியவர். தி.க அமைப்பின் அத்தகைய நிகழ்ச்சியில் அமைப்பை சேர்ந்த பெண்கள் தங்களின் தாலியை அகற்றும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலானவை.

Advertisement

அதேபோன்று, ஊரில் உள்ள பெண்களின் தாலியை அகற்ற சொல்லும் கி.வீரமணி தன் பேத்திக்கு மட்டும் தாலி எடுத்துக் கொடுத்து திருமணம் செய்து வைத்ததாக திருமண வீடியோ ஒன்று சமூக ஊடகத்தில் வைரலாகியது.

Facebook Link | Archived Link 

” ஊர்ல இருக்குறவன் பொண்டாட்டி தாலிய அறுப்பாங்களாம், ஆனா இவர் பேத்திக்கு மட்டும் தாலிய எடுத்து கொடுத்து கட்ட சொல்வாராம் கீ.வீரமணி.. ” என இடம்பெற்ற பதிவை Mari Prabhu Bjp என்ற முகநூல் பக்கத்தில் ஓராண்டிற்கு முன்பாக பதிவிடப்பட்டு உள்ளது. இப்பதிவு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஷேர்களை பெற்று வைரலாகி வருகிறது.

Advertisement

இதேபோன்று, 2018 ஜூலை 3-ம் தேதி Urban Studio என்ற youtube சேனலில் ” ஊரெல்லாம் தாலியறுக்கும் கி.வீரமணி பேரனுக்கு தாலி கட்டி நடந்த திருமணம்! ஊருக்குத் தான் உபதேசமோ?? ” என்ற தலைப்பில் இதே வீடியோ கி.வீரமணி உடைய பேரனுக்கு என பதிவிட்டு இருந்தனர். இந்த ஒரு வீடியோவை கி.வீரமணி உடைய பேரன் அல்லது பேத்தி திருமணம் என சமூக ஊடகங்கள் முழுவதிலும் பரப்பி வருவதை பார்க்க முடிந்தது.

உண்மை என்ன ?

கி.வீரமணி தாலி எடுத்துக் கொடுக்கும் திருமணத்தில் இருப்பது அவரின் பேரான ?, வீடியோ குறித்த உண்மைத்தகவல் குறித்து ஆராய்ந்தோம். முதலில் சமூக ஊடகங்களில் வைரலாகும் வீடியோ ஆனது வீரமணி தாலி எடுத்துக் கொடுக்கும் சிறு காட்சி மட்டுமே. ஆனால், முழு நீள வீடியோவில் மணமக்கள் உறுதிமொழி எடுக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தன.

அதில், ” நண்பர்களே வணக்கம், திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம் கமுகக்குடி திருவாளர்கள் மாரிமுத்து-பாலசரஸ்வதி ஆகியோரது செல்வன் ஹரிஷ் ஆகிய நான், தஞ்சை மாவட்டம் பாபநாசம் வட்டம் வள்ளியூர் திருவாளர்கள் பாலசுப்ரமணியன்-ஹேமலதா ஆகியோரின் செல்வி ஸ்னேகா ஆகிய தங்களை இன்று முதல் வாழ்வில் இணையராக ஏற்றுக்கொள்வதுடன், வாழ்வில் ஏற்படும் இன்ப துன்பங்களில் சமபங்கு ஏற்கும் சம உரிமை படைத்த உற்ற நண்பர்களாக வாழ்வோம் என்று உறுதிமொழி ஏற்கிறேன். அந்த ஒப்பந்தத்தின்படி, இந்த மலர் மாலையையும், பொன் அணிகளையும் அணிவிக்கிறேன் ” எனக் கூறியுள்ளார். அதன் பின்னரே தாலியைக் கட்டியுள்ளார்.

இந்த திருமணம் எப்பொழுது நடந்தது, வீடியோவை பதிவிட்டது யார் என சமூக ஊடகங்களில் ஆராய்ந்த பொழுது மணமகன் பெயரைக் கொண்ட Harish KM என்ற Youtube பக்கத்தில் திருமணத்தின் பொழுது எடுக்கப்பட்ட வீடியோக்கள் பதிவிடப்பட்டு இருந்தது. அதில், கி.வீரமணி தாலி எடுத்துக் கொடுக்கும் முழு நீள வீடியோ இடம்பெற்று இருக்கிறது.

அந்த வீடியோகளில், ” 24 ஆம் தேதி (24.08.2011), தமிழர் தலைவர், திராவிடர் கழகத் தலைவர், முனைவர், மான்புமிகு கி.வீரமணி அவர்கள் தலைமையில், என் வாழ்விணைப்பு விழா நடைபெற்றது ” என குறிப்பிட்டு உள்ளார்.

வைரலாகும் திருமண வீடியோவில் இருக்கும் மணமகன் ஹரிஷ் சாப்ட்வேர் இன்ஜீனியர் ஆவார். மணமக்கள் இருவரின் பெற்றோர் மற்றும் அவரின் பாட்டி ஆகியோருக்காக தாலி இடம்பெற்றதாக கூறியது 2015-ல் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் வெளியாகி உள்ளது.

கி.வீரமணி பேரன் திருமணம் :

கி.வீரமணி உடைய பேரன் திருமணம் குறித்து ஆராய்ந்த பொழுது, ” அழைப்பிதழ் அச்சிடாமலேயே நடந்த கி.வீரமணி இல்ல திருமணம் ” என்ற தலைப்பில் வெளியான செய்தியை காண முடிந்தது. 2018 ஜூன் 18-ம் தேதி பெரியார் திடலில் அழைப்பிதழ் அச்சிடாமலேயே நடந்த கி.வீரமணி இல்ல திருமணம் நடைபெற்று உள்ளது.

அதில், ” திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி -மோகனா தம்பதியினரின் பேரனும், திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளருமான வீ.அன்புராஜ்-சுதா ஆகியோரின் மகனுமான கபிலனுக்கும், கோபாலகிருஷ்ணன்-சுகுணா ஆகியோரின் மகள் மகாலட்சுமிக்கும் சென்னை பெரியார் திடலில் நேற்று திருமணம் நடந்தது. இந்த திருமணத்தை கி.வீரமணி நடத்தி வைத்தார். இரு வீட்டார் உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று, மணமக்களை வாழ்த்தினர் ” என செய்தியில் இடம்பெற்று இருக்கிறது.

அதுமட்டுமின்றி, விடுதலை நாளிதழிலும் ” கபிலன் – மகாலட்சுமி வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழா இயக்க வரலாற்றில் எடுத்துக்காட்டான எளிமையின் இலக்கணம்! ” என்ற தலைப்பில் கி.வீரமணி பேரன் திருமணம் குறித்த செய்தி வெளியாகி இருக்கிறது.

முடிவு :

2011-ல் தி.க தலைவர் கி.வீரமணி தலைமையில் சுயமரியாதை திருமணம் செய்து கொண்ட ஹரிஷ்-ஸ்னேகா ஆகியோரின் திருமண நிகழ்ச்சி வீடியோவே வீரமணி பேரன், பேத்தி திருமணம் என சமூக ஊடகங்களில் தவறாக வைரலாகி வருகிறது.

கி.வீரமணி பேரன் திருமணம் குறித்து ஆராய்ந்ததில் 2018-ல் வீரமணி பேரன் திருமணம் பெரியார் திடலில் நிகழ்ந்தது குறித்து செய்திகள் வெளியாகி இருக்கிறது. கி.வீரமணியின் பேரனின் பெயர் கபிலன். ஹரிஷ் அல்ல.

கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், கி.வீரமணி தன்னுடைய பேரன் அல்லது பேத்திக்கு மட்டும் தாலி எடுத்துக் கொடுத்து திருமணம் செய்து வைப்பதாக சமூக ஊடகங்களில் வைரலாகும் செய்தி முற்றிலும் தவறான தகவல் என நிரூபணமாகி உள்ளது.

அரசியல் சார்ந்து, கருத்து சார்ந்த மோதல்கள் இருக்க வேண்டிய இடங்களில் போலிச் செய்திகள் மூலமே சிலரின் மீதான கோபத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். இதுபோன்ற வதந்திகளை மக்கள் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button