ராமரின் படத்தை பெரியார் செருப்பால் அடித்ததாக கீ.வீரமணி ஒப்புக்கொண்டாரா ?

பரவிய செய்தி
எங்கே இப்போ மறுபடியும் இதை தைரியமா சொல்லு பார்க்கலாம். ரஜினி பேசியது உண்மைன்னு கி.வீரமணி ஒப்புக்கொண்டு விட்டார். பிறகு எதற்கு ரஜினி மன்னிப்பு கேக்க வேண்டும் ?
மதிப்பீடு
விளக்கம்
துக்ளக் இதழின் 50-ம் ஆண்டு விழாவில் நடிகர் ரஜினி பேசிய முந்தைய கால நிகழ்வுகள் சர்ச்சையாக மாறியது. 1971-ம் ஆண்டில் சேலத்தில் பெரியார் கலந்து கொண்ட ஊர்வலத்தில் ராமர் மற்றும் சீதாவின் நிர்வாணப் புகைப்படம் செருப்பு மாலையுடன் கொண்டு வரப்பட்டது. அதை சோ துக்ளக் அட்டையில் போட்டு கடுமையாக விமர்சித்து இருந்தார் எனக் கூறி இருந்தார்.
நடிகர் ரஜினிகாந்த் தவறான தகவலை கூறுவதாக திக உள்ளிட்டவர்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பிய நிலையில் மன்னிப்பு கேட்கும்படி கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில், ஊர்வலத்தில் ராமனின் உருவத்தை பெரியார் செருப்பால் அடித்தார் என்ற உண்மையை திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் கீ.வீரமணி ஒத்துக் கொண்டுள்ளதாக 30 வினாடிகள் கொண்ட வீடியோ பதிவு ஒன்று முகநூல் உள்ளிட்டவையில் வைரலாகி வருகிறது.
அதில், ” பெரியார் ராமனை செருப்பால் அடிச்சாங்க.. செருப்பால் அடிச்சாங்க..தேர்தல் நேரத்தில தமிழ்நாட்டில.. அடிச்சதுக்கு முன்னால 138 அடிச்சதுக்கு பிற்பாடு 183 அதுதான் மிக முக்கியம். அந்த ரிசல்ட் வந்த பிறகுதான் திமுக உடைய… என்ன தெரியுதுனா ராமனை.. செருப்பால் அடித்து விட்டு தேர்தலில் நின்றால் நிறைய ஓட்டுகள் தமிழ்நாட்டில் கிடைக்கும் என்று ” என இடம்பெற்று இருக்கிறது.
ஆனால், வீரமணியின் பேச்சுகளுக்கு இடையிடையே கட் ஆகி கட் ஆகி பேச்சுக்கள் மாறி வருவதை தெளிவாய் கேட்க முடிகிறது. முதலில் கீ.வீரமணி பேசிய 30 வினாடிகள் கொண்ட வீடியோவின் முழு பதிவையும் தேடிப் பார்த்தோம்.
2018 ஜனவரி 22-ம் தேதி பெரியார்டிவி எனும் யூடியூப் சேனலில், ” இராமனை செருப்பால் அடித்தாரா பெரியார் ? -ஆசிரியர் கி.வீரமணி ” என்ற தலைப்பில் 10 நிமிட வீடியோவில் சேலத்தில் நிகழ்ந்த சம்பவம் குறித்தும், தேர்தல் குறித்தும் பேசியுள்ளார்.
சேலத்தில் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டின் ஊர்வலத்திற்கு எதிராக கருப்பு கொடி காட்ட வந்தவர்களில் ஒருவன் சும்மா இல்லாமல் என்ன பண்ணான், அவனின் நோக்கம் பெரியாரின் மீது செருப்பை போட வேண்டும் என தன் செருப்பை தூக்கி வீசினான். பெரியார் வாகனம் தாண்டிய பிறகு குறி தவறி செருப்பானது கருப்பு சட்டைக்காரர்கள் மீது விழுந்துள்ளது. அந்த செருப்பை எடுத்தவர் பக்கத்தில் ராமன் படம் வருவதை பார்த்து, பெரியாரை அடிக்க நினைத்தீர்களா அதான் ராமன் படத்தை அடிக்கிறேன் என ராமனின் படத்தை செருப்பால் அடித்துள்ளனர் என வீரமணி பேசியுள்ளார்.
இந்த வீடியோவில் கீ.வீரமணி, கழகத் தொண்டர்கள் ராமனை செருப்பால் அடித்ததாக கூறியுள்ளார், பெரியார் அடித்ததாக கூறவில்லை. மேலும், 5.30-வது நிமிடத்தில் அன்றைய தேர்தலுக்கு முன்பாக, தந்தை பெரியார் கையில் பெரிய செருப்பை வைத்துக் கொண்டு, இன்னொரு கையில் ராமன் படத்தை ஓங்கி அடிப்பது போன்றும், அதற்கு கலைஞர் பலே பலே எனக் கூறுவது போன்றும் காண்பித்து ராமனை செருப்பால் அடித்தவர்களுக்கா உங்களின் ஓட்டு என போஸ்டர்கள் வெளியாகின. எதிர் தரப்பினரால் தேர்தல் நேரத்தில் பெரிய அளவிலான போஸ்டர்கள் ஒட்டப்பட்டதாக கூறியுள்ளார்.
வீடியோவில் ” பெரியார் ராமனை செருப்பால் அடிச்சாங்க.. செருப்பால் அடிச்சாங்க..தேர்தல் நேரத்தில தமிழ்நாட்டில..” என வைரல் வீடியோவில் வீரமணி பேசிய வார்த்தைகள் ஜலந்தரில் இந்திரா காந்தியுடன் பத்திரிகையாளர்கள் கேட்க கேள்வி என வீடியோவின் 7.22 நிமிடத்தில் பேசியிருக்கிறார். அதையே கட் செய்து வீடியோவாக வெளியிட்டு உள்ளனர்.
வீடியோவின் 8.45-வது நிமிடத்தில், ” ராமனை செருப்பால் அடித்தவர்களுக்கா ஓட்டு என பெரிசா பண்ணாங்க.. ஆனா அடிச்சதுக்கு முன்னாடி 138, அடிச்சதுக்கு பிற்பாடு 183. அதுதான் மிக முக்கியம் ” எனக் கூறியுள்ளார்.
முடிவு :
நம்முடைய தேடலில், ” 1971 சேலம் ஊர்வலத்தில் பெரியார் ராமனை செருப்பால் அடித்ததாக கூறி வரும் சம்பவத்தை கீ.வீரமணி ஒத்துக் கொண்டதாகப் பரவும் 30 வினாடிகள் கொண்ட வீடியோ காட்சி 2018-ல் வெளியான வீடியோவில் இருந்து கட் செய்து, கட் செய்து வெளியிடப்பட்டவை ” என அறிய முடிகிறது.
அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.