வேலூர் சிஎம்சி மெடிக்கல் கல்லூரிக்கு விதிகளில் இருந்து விலக்கு !

பரவிய செய்தி
வேலூரியில் உள்ள கிறிஸ்டியன் மெடிக்கல் காலேஜில் மொத்தமுள்ள 100 எம்பிபிஎஸ் இடங்களில் 2 இடங்கள் எஸ்.சிக்கு, 1 இடம் எஸ்.டிக்கு, 1 இடம் மத்திய அரசிற்கு, பொது போட்டிக்கு 12 இடங்கள், அங்கு பணிபுரிபவர்களின் குழந்தைகளுக்கு 10 இடங்கள் போக மீதமுள்ள 74 இடங்கள் இந்தியாவில் உள்ள கிறிஸ்தவ மிஷனரிகள் சிபாரிசு செய்பவருக்கு (நீட் தர வரிசைக்கு இடமில்லை) .
மதிப்பீடு
சுருக்கம்
வேலூர் சிஎம்சி மருத்துவ கல்லூரியில் வருகிற கல்வியாண்டில் நிரப்பப்படும் எம்பிபிஎஸ் இடங்களில் 74 இடங்கள் இந்தியாவில் இயங்கி வரும் கிறிஸ்தவ மிஷினரிகளின் பரிந்துரைகள்(சிபாரிசு) படி நிரப்பப்படும் என அக்கல்லூரியின் மூத்த நிர்வாகியே தகவல் தெரிவித்து உள்ளார்.
எனினும், மருத்துவ இடங்களுக்கு விண்ணப்பித்த மாணவர்கள்(74 இடங்கள் உள்பட) நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணை சிஎம்சி இணையதளத்தில் அப்டேட் செய்ய வேண்டும் என அறிவிக்கவும் செய்துள்ளனர்.
விளக்கம்
அரசு கல்லூரிகள் மட்டுமின்றி தனியார் கல்லூரிகளும் நீட் மதிப்பெண்கள் அடிப்படையில் கலந்தாய்வுகள் நடத்தப்பட்டு மருத்துவ படிப்பிற்கான இடங்கள் நிரப்பப்படும். மீதமுள்ள இடங்கள் கல்லூரி நிர்வாகத்தின் ஒதுக்கீட்டில் நிரப்பப்பட்டு வந்தன.
இந்நிலையில், வேலூரில் உள்ள கிறிஸ்டியன் மெடிக்கல் காலேஜில் உள்ள 100 மருத்துவ இடங்களில் 74 இடங்கள் கிறிஸ்துவ மிஷினரிகள் பரிந்துரை அடிப்படையில் நிரப்பப்படும், நீட் தர வரிசையில் இல்லை என சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தனியார் மருத்துவக் கல்லூரிகள் 35 முதல் 50 இடங்கள் அரசு ஒதுக்கீட்டிற்கு அளித்து விட்டு, மீதமுள்ள இடங்களில் கல்லூரி நிர்வாக ஒதுக்கீட்டில் மாணவர்களை நிரப்புவர். மாநில அளவில் நீட் தேர்வு மதிப்பெண் பட்டியல் மற்றும் 69% இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மருத்துவ இடங்கள் நிரப்பப்படும்.
ஆனால், 2019-2020 கல்வியாண்டில் இருந்து வேலூர் சிஎம்சி கல்லூரிக்கு இந்த செயல்முறையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. தமிழக சுகாதாரத்துறையானது வருகிற கல்வியாண்டில் வேலூர் சிஎம்சி மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் சேர்க்கைக்கு சிறப்பு அந்தஸ்திற்கான ஒப்பந்தத்தை அளித்துள்ளது. அதன்படி, சிஎம்சி கல்லூரியின் எம்பிபிஎஸ் இடங்கள் நிரப்புதல் சிஎம்சி-யின் விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளின் படி நடைபெறும் என்பதாகும்.
2019-2020 கல்வியாண்டில் இருந்து கல்லூரியில் உள்ள 100 எம்பிபிஎஸ் இடங்களில் 12 இடங்கள் பொது போட்டிக்கும், 2 இடங்கள் எஸ்.சிக்கு, 1 இடம் எஸ்.டிக்கு, 1 இடம் மத்திய அரசிற்கு, 10 இடங்கள் அங்கு பணிபுரிபவர்களின் குழந்தைகளுக்கு போக மீதமுள்ள 74 இடங்கள் இந்தியாவில் உள்ள கிறிஸ்தவ மிஷனரிகள் பரிந்துரை செய்பவருக்கு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து பேசிய சிஎம்சி கல்லூரியின் மூத்த நிர்வாக அதிகாரி, ” தனியார் கல்லூரிகள் மருத்துவ இடங்களை ஒப்படைக்கும்படி மாநில அரசு கேட்கக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்து இருந்தது. நாங்கள் மிஷினரிகள் பரிந்துரை(சிபாரிசு) பெறுகிறோம், ஏனெனில், எங்களின் மாணவர்கள் கிராமப்புறப் பகுதிகளில் சேவையாற்ற வேண்டும் என்பதற்காகவே ” எனத் தெரிவித்து இருந்தார்.
சிஎம்சி கல்லூரியில் மாணவர்களை தேர்ந்தெடுப்பதில் 2017 ஆம் ஆண்டில் இருந்தே சர்ச்சை நிலவி வந்தது. அங்கு நிர்வாகம் நேர்காணல் செய்த பின்னரே மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். 2017-ல் ஏழைகளுக்கு சேவை செய்யும் மனப்பான்மையுள்ள மாணவர்களை தேர்வு செய்ய எங்களை அனுமதிக்குமாறு சிஎம்சி கல்லூரி உச்ச நீதிமன்றத்தை நாடியது.
2019-2020 சேர்க்கைக்கு முன்பே மருத்துவ சேர்க்கைக்கு விண்ணப்பித்து இருந்த மாணவர்கள் அனைவரும் தாங்கள் நீட் தேர்விற்கு பிறகு பெற்ற மதிப்பெண்ணை சிஎம்சி கல்லூரியின் இணையதளத்தில் அளித்து இருக்க வேண்டும். 74 இடங்களுக்கு நீட் மதிப்பெண் அடிப்படையில் இடமளிக்கப்படாது. எனினும், அவர்கள் நீட் மதிப்பெண்ணை கல்லூரி இணையதளத்தில் அப்டேட் செய்து இருக்க வேண்டும்.
நீண்ட காலமாகவே கிராமப்புறங்களில் சேவை செய்யக்கூடிய மருத்துவ மாணவர்களை உருவாக்குவதில் வேலூர் சிஎம்சி கல்லூரி ஈடுபட்டு வருவதாக கூறுகின்றனர். 100 ஆண்டுகள் பழமையான அக்கல்லூரியில் சேவை செய்யக்கூடியவர்களுக்கு இடங்கள் வழங்கப்பட வேண்டும் என நேர்காணல்கள் நடத்தப்படுவதும் உண்டு.
இனி 2019-2020 கல்வியாண்டில் இருந்து சிஎம்சி கல்லூரியில் 74 மருத்துவ இடங்களுக்கு இந்தியா முழுவதிலும் உள்ள கிறிஸ்தவ மிஷினரிகள் பரிந்துரை பெறப்படும் என அறிவிக்கப்பட்டது உண்மையே.