பாஜகவிற்கு ஆதரவாக பேசியதால் வேலூர் இப்ராஹிம் தாக்கப்பட்டாரா ?

பரவிய செய்தி
தேசபக்தர் வேலூர் இப்ராகிம் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டுள்ளார் தமிழக ஊடகங்கள் தற்போது இந்த செய்தியை மறைத்து வருகின்றது . கருத்துரிமை போராளிகள் எங்கே ? தமிழ்நாடா ? தாலிபன் நாடா ?
தமிழக அரசே பயங்கரவாதத்தை இரும்புகரம் கொண்டு அடக்கு.
மதிப்பீடு
விளக்கம்
குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் எழுந்ததை போன்று, ஆளும் தரப்பினர் மற்றும் சில அமைப்புகள் ஆதரவாக ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.
குறிப்பாக, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழக பாஜக கட்சினர் நடத்திய ஆதரவு கூட்டத்தில் TNEJ மாநிலத் தலைவர் வேலூர் எம்.சையத் இப்ராஹிம் கலந்து கொண்டு ஆளும் தரப்பிற்கு ஆதரவாக பேசி இருந்தார். அவர் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதவராகவும், பாஜகவிற்கு ஆதவராகவும் பேசிய காரணத்தினால் தாக்கப்பட்டுள்ளதாக ஓர் வீடியோ முகநூலில் வைரலாகி வருகிறது.
அவ்வாறான வீடியோ பதிவுகளில் ஃபாலோயர்கள் யூடர்னை டக் செய்து இருந்தார்கள் மற்றும் இன்பாக்ஸில் பதிவுகளின் லிங்குகள் மற்றும் புகைப்படத்தை அனுப்பி, இதன் உண்மைத்தன்மையை கூறுமாறு கேட்டு வருகின்றனர். ஆனால், முகநூலில் இப்ராஹிம் தாக்கப்பட்டதாக கூறி பகிர்ந்து இருந்த வீடியோ பிறகு நீக்கப்பட்டு உள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதவராக பேசியதால் வேலூர் இப்ராஹிம் தாக்கப்பட்டதாக வைரலாகும் வீடியோ குறித்து தேடிய பொழுது, ” தமிழ் இந்து என்ற யூடியூப் பக்கத்தில் 2018-ல் TNTJ வினர் இப்ராஹிமை தாக்கிய காட்சிகள் ” என அதே வைரல் வீடியோவை பகிர்ந்து இருந்தனர்.
வீடியோ வைரலாகியதை அடுத்து வேலூர் இப்ராஹிம் தன்னுடைய முகநூல் பக்கத்தில் விளக்கம் அளித்து நேற்று(டிசம்பர் 25) பதிவிட்டு உள்ளார். அதில், ” #நலமாக_உள்ளேன்
மத்திய அரசின் நலத்திட்டங்களையும், பாரத பிரதமர் மோதி ஜி அவர்களின் மிகச் சிறப்பான செயல்பாட்டையும் வீரியமாக பிரச்சாரம் செய்து வரும் வேளையில் அப்பிரச்சாரத்தை தடுப்பதற்க்காக கடந்த ஆண்டு தீவிரவாத அமைப்பான TNTJ கொலை வெறியர்களால் தாக்கப்பட்ட வீடியோ பதிவை தற்போது இஸ்லாமிய அடிப்படைவாதிகள் முகநூலில் பரப்பி வருகின்றனர், இப்பதிவை கண்டு அதிர்ச்சி அடைந்த பாஜக சகோதரர்கள் பலர் அக்கரையோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது ” எனக் கூறியுள்ளார்.
சமீபத்தில் TNEJ உடைய மாநிலத் தலைவர் வேலூர் இப்ராஹிம் தாக்கப்பட்டதாக வைரலாகும் வீடியோவில் இருப்பது அவர் தான் என்றும், கடந்த ஆண்டில் TNTJ அமைப்பினரால் தாக்கப்பட்ட பழைய வீடியோ எனக் குறிப்பிட்டு உள்ளார்.
அந்த சம்பவம் குறித்து தேடிய பொழுது, ” 2018-ல் பஸ்லுல் இலாஹி , அவரது மகன் மற்றும் வேலூர் இப்ராஹிம் ஆகியோரை பயங்கரமான ஆயுதங்களை கொண்டு தாக்கிய சம்பவம் தொடர்பாக பாளையங்கோட்டை மண்ணெணி சையது அலி, கண்ணா ரசூல், பால் அக்பர் மற்றும் நவாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக ” நக்கீரன் இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது.
கடந்த ஆண்டில் பிற காரணத்திற்காக தாக்கப்பட்ட வேலூர் இப்ராஹிம் உடைய வீடியோவை, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு மற்றும் பாஜகவிற்கு ஆதரவாக பேசிய காரணத்திற்காக சமீபத்தில் தாக்கப்பட்ட வீடியோ என தவறாக முகநூல் உள்ளிட்டவையில் பரப்பி வருகின்றனர்.
முடிவு :
நமது தேடலில் இருந்து, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு மற்றும் பாஜகவிற்கு ஆதரவாக பேசியதற்கு வேலூர் இப்ராஹிம் தாக்கப்பட்டதாக பரவும் வீடியோ தவறானது என்பதை அறிய முடிகிறது.