வெனிசுலா நாட்டின் வீதிகளில் சிதறிக்கிடக்கும் அந்நாட்டு பணம் !

பரவிய செய்தி
வெனிசுலா நாட்டின் ஒரு ரோட்டில் சிதறிக்கிடக்கும் அந்த நாட்டின் பணம்!
மதிப்பீடு
சுருக்கம்
எஎண்ணெய் வளம் மிகுந்த நாடாக இருந்த பொலிவியாவில் ஏற்பட்ட அதிகப்படியான பணவீக்கத்தின் காரணமாக அந்நாட்டு பணமதிப்பு பெரும் சரிவைக் கண்டதால் பழைய நோட்டுகள் மக்களால் வீதிகளில் வீசப்பட்டுள்ளது.
அந்நாட்டில் விவசாயம் அரசுடைமையாக்கப்பட்டு இருந்தாலும் குறைந்த லாபம், பணவீக்கத்தின் காரணமாக விவசாயிகள் விவசாயத்தை செய்ய முன் வரவில்லை.
விளக்கம்
தென் அமெரிக்க நாடுகளில் வளமான பொருளாதாரம் கொண்டதாக இருந்தது வெனிசுலா. நாட்டில் இருந்த மிகப்பெரிய எண்ணெய் வளத்தைக் கொண்டு பல்வேறு சமூக நலத் திட்டங்களை மேற்கொண்ட தேசத்தின் நிலை இன்றோ அதலபாதாளத்தில் உள்ளது.
வெனிசுலாவின் மறைந்த முன்னாள் அதிபரான ஹியூகோ சாவேஸ் அந்நாட்டில் இருந்து எண்ணெய் ஏற்றுமதி மூலம் கிடைத்த வருவாயை வைத்து நாட்டில் பல சமூக நலத்திட்டங்களை மேற்கொண்டார். அதற்காக அதிக அளவில் தொகையை செலவு செய்தார். மேலும், வறுமையை அதிக அளவில் குறைத்து, நிறுவனங்களை அரசு உடமையாக்கி வேலைவாய்ப்புகளை அதிகரிக்கச் செய்தார்.
எனினும், சமூக நலத்திட்டங்களுக்கு அதிக அளவில் கடனும் வாங்கப்பட்டது. மேலும், கடனை அடைக்க அதிகளவில் பொலிவர் நோட்டுகளை அச்சிட உத்தரவு பிறப்பித்தார் அதிபர் நிகோலஸ் மதுரோ.
வெனிசுலா நாடு எண்ணெய் ஏற்றுமதியை மட்டுமே பெரிதும் நம்பி இருந்தது. 2014-ல் எண்ணெய் விலையில் ஏற்பட்ட சரிவால் நாட்டின் பொருளாதாரம் அதிகம் தடுமாறியது. எண்ணெய் வருவாய் மூலம் நாட்டில் பல்வேறு திட்டங்கள், வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டதால் அதன் மீதான தாக்கம் பெரியதாக இருந்தது.
2017-ல் வெனிசுலாவில் இருந்த பணவீக்கம் 2,820% இல் இருந்து 2018-ம் ஆண்டில் 12,870 சதவீதமாக உயர்ந்தது. தொடர்ந்து பணவீக்கம் அதிகரித்தால் நாட்டின் மொத்த பணவீக்கம் 10,00,000 சதவீதம் அளவிற்கு உயரும் என International Monetary Fund கணித்து உள்ளதாக 2018 ஜூன் செய்திகளில் வெளியாகியது.
வெனிசுலா நாட்டின் பொருளாதாரத்திற்கு எதிராக எண்ணெய் விலை சரிவு, அமெரிக்கா டாலருக்கு நிகரான பொலிவர் மதிப்பில் இருந்த குளறுபடி, அமெரிக்காவின் பொருளாதார தடைகள், கள்ளப் பணம் உள்ளிட்டவை இருந்தன.
பணவீக்கத்திற்கு முன்பு ஒரு காபியின் விலை 2000 பொலிவர் ஆக இருந்தது, அதே ஒரு கப் காபியின் விலை 2018-ல் 20,00,000 பொலிவர் ஆக உயர்ந்து உள்ளது. இன்னும் எளிதாக கூற வேண்டும் என்றால் 10,000 பொலிவர் இருந்தால் ஒரு குடும்பத்தின் செலவையே முடித்து விடலாம். ஆனால், பணவீக்கத்திற்கு பிறகு அந்த தொகையில் ஒருவேளை உணவே உண்ண முடியும்.
பணவீக்கத்தின் காரணமாக பொலிவர் பணத்தை புதிதாக அச்சிட்டு வெளியிட அந்நாட்டு அதிபர் நிகோலஸ் மதுரோ அறிவித்து இருந்தார். அதன்படி, முன்பிருந்த பணத்தின் 5 இலக்கத்தை நீக்கி விட்டு புதிய பணத்தை அச்சிட்டு வெளியிடுகின்றனர். தினசரி குறைந்தபட்ச ஊதியத்தையும் அதிகரித்து உள்ளனர். எனினும், பணத்தின் மதிப்பில் மாற்றமில்லை என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
பணத்திற்கு மதிப்பில்லை என்பதால் அந்நாட்டின் வீதிகளில் பணத்தை வீசி சென்றுள்ளனர் மக்கள். தற்போது வெனிசுலா நாட்டில் அன்றாட தேவைக்கும் பண்டமாற்று முறையில் பொருட்களை மாற்றிக் கொள்கின்றனர். மேலும், மக்கள் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிபர் சாவேஸ் பதவியில் இருந்த பொழுதே நிறுவனங்கள், தொழிற்சாலைகள், அரசுடைமையாக்கப்பட்டது. விளைநிலங்கள் அரசு உடமையாக்க முனைப்பு காட்டப்பட்டது. அதன் நோக்கம் கோதுமை மாவு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களின் விலை கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என்பதே.
எனினும், நாளடையில் அதன் நோக்கம் மாறியது. அந்நாட்டில் உணவு விநியோகம் அமைப்பு அரசின் கீழ் கையாளப்படுகிறது. விளைநிலங்கள், அதற்கான வசதிகள் இருந்தும் விவசாயிகளுக்கு லாபமற்ற நிலை, பல்வேறு குறைபாடுகள் காரணமாக உற்பத்தி குறைந்து வருகிறது. விவசாயம் செய்வது குறைந்து விட்டது.
2019-ல் ஐநா வெளியிட்ட அறிக்கையில், ” வெனிசுலா நாட்டில் உள்ள கால் பங்கு மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுகிறது ” என்று தெரிவித்து இருந்தது. அந்நாட்டில் 94 சதவீத மக்கள் வறுமையில் வாழ்கின்றனர். மேலும், மருத்துவம், குடிநீர், சுகாதார உதவிகள் அவசியம் தேவைப்படுவதாக குறிப்பிட்டுள்ளனர்.