நடிகர் விஜய் வாரிசு பட வெற்றியை பட்டாக் கத்தியுடன் கொண்டாடியதாக தினமலர் வெளியிட்ட பொய் செய்தி !

பரவிய செய்தி
‘வாரிசு’ பட வெற்றி கொண்டாட்டத்தை, நடிகர் விஜய் பட்டாக் கத்தியுடன் கொண்டாடி உள்ளார்.
மதிப்பீடு
விளக்கம்
2023 பொங்கலை முன்னிட்டு நடிகர் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்தின் வெற்றியை படக்குழுவினர் கொண்டாடிய போது, நடிகர் விஜய் பட்டாக்கத்தியுடன் போஸ் கொடுத்த புகைப்படம் வைரலாகி வருவதாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டு இருக்கிறது.
அதில், ” சென்னையைத் தொடர்ந்து, ஆந்திராவில் நடந்த, ‘வாரிசு’ பட வெற்றி கொண்டாட்டத் தில் விஜய் பங்கேற்றார். அங்கு பட்டாக் கத்தியுடன் விஜய் கொடுத்த போஸ், சமூக வலை தளங்களில் வெளியானது. இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் பலர் ஆர்ப்பரித்தனர். அதேநேரம், பட்டாக் கத்தியுடன் உள்ள விஜய்க்கு கண்டனமும் வலுத்துள்ளது ” என விஜய் கையில் கத்தியுடன் இருக்கும் புகைப்படத்துடன் செய்தித்தாளில் வெளியாகி இருக்கிறது.
உண்மை என்ன ?
ஹைத்ராபாத்தில் நடைபெற்ற வாரிசு திரைப்படத்தின் வெற்றிக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் நடிகர் விஜய் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோ செய்திகளிலும், சமூக வலைதளங்களிலும் வெளியாகி இருக்கிறது.
One more pic from #Varisu success celebration pic.twitter.com/l8UilT483A
— Ramesh Bala (@rameshlaus) January 23, 2023
வாரிசு பட வெற்றிக் கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோவில் நடிகர் விஜய் கையில் கத்தியுடன் இருக்கும் காட்சி எங்கும் பதிவாகவில்லை. ஆகையால், தினமலரில் வெளியான புகைப்படம் குறித்து தேடுகையில், விஜய்யின் ரசிகர்கள் பலரும் இப்படத்தை பகிர்ந்து வருவதை பார்க்க முடிந்தது.
#ThalapathyVijay The Gangster..💥#Thalapathy67 🔥 pic.twitter.com/vGQDUqNsUj
— Laxmi Kanth (@iammoviebuff007) January 23, 2023
விஜய் ரகர்களால் பகிரப்பட்ட புகைப்படத்தில் கீழே EditxGiri என்ற வாட்டர்மார்க் இடம்பெற்று இருப்பதை பார்க்க முடிந்தது. அதைக் கொண்டு தேடுகையில், ” EditxGiri ” எனும் ட்விட்டர் பக்கத்தில் விஜய் கையில் கத்தியுடன் இருக்கும் புகைப்படம் ஜனவரி 23ம் தேதி பதிவிடப்பட்டு இருக்கிறது. இந்த ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விஜய்க்காக வடிவமைக்கப்பட்ட படங்கள் (Fan made) பதிவிடப்பட்டு வருகிறது.
#Thalapathy67 pic.twitter.com/C722rhbzwe
— . (@EditxGiri) January 23, 2023
” EditxGiri ” ட்விட்டர் பக்கத்தில் வெளியான விஜய்யின் படத்தை தினமலர் செய்தியாக வெளியிட்டது குறித்து ஒருவர் கமென்ட்டில் பதிவிட்டு கேட்ட போது, ” உண்மைன்னு நம்புனா நான் என்ன பண்ணுறது ” என்று பதில் அளிக்கப்பட்டு இருக்கிறது.
முடிவு :
நம் தேடலில், வாரிசு பட வெற்றி கொண்டாட்டத்தை நடிகர் விஜய் பட்டாக் கத்தியுடன் கொண்டாடியதாக தினமலர் வெளியிட்டது தவறான செய்தி. செய்தியில் பயன்படுத்தப்பட்ட புகைப்படம் ரசிகர்களால் உருவாக்கப்பட்ட படம் என அறிய முடிகிறது.