விஜயா மருத்துவமனையில் இலவச இருதய சிகிச்சை என உலாவும் வதந்தி !

பரவிய செய்தி
யாருக்காவது பயன்படும் பகிர்ந்து கொள்ளுங்கள். நவம்பர் 28-ம் தேதியில் இருந்து டிசம்பர் 5-ம் தேதி வரை குழந்தைகளுக்கு இலவச இருதய சிகிச்சை அளிக்கப்படுகிறது. 8 மருத்துவர்கள் இங்கிலாந்தில் இருந்து வருகிறார்கள். தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி, விஜயா ஹாஸ்பிடல், மொபைல் நம்பர் 9380901361 , 9710507105, 9629288403 ..இந்த செய்தியை அதிகம் பகிரவும். பிஞ்சு குழந்தைகளின் நலனுக்காக…..
மதிப்பீடு
விளக்கம்
வாட்ஸ் அப் குரூப்கள், ஃபேஸ்புக் பதிவுகள் என எங்கு சென்றாலும், தயவு செய்து ஒரு உயிரை காப்பாற்ற உதவி செய்யுங்கள், நீங்கள் செய்யும் ஒரு ஷேர் ஒருவரின் உயிரைக் காக்கலாம், நீங்கள் தமிழனாக இருந்தால், இந்தியனாக இருந்தால் பகிருங்கள் எனக் கூறும் பதிவுகளை நிச்சயம் பார்த்திருப்பீர்கள்.
ஒரு சில பதிவுகளில் உண்மைத்தண்மை இருந்தாலும் பெரும்பாலான ஃபார்வர்டுகள் புரளிகள் அல்லது காலாவதியான செய்திகளாகும். இவ்வாறான தவறான ஃபார்வர்டு செய்திகளால் உண்மையில் உதவி எனக் கேட்பவர்களுக்கும் பாதிப்பு உண்டாகின்றன. நீண்டகால புரளிகளில் ஒன்றாக சென்னை விஜயா மருத்துவமனை குறித்த ஃபார்வர்டுகள் இன்றுவரை காண முடிகிறது.
சென்னை வடபழனியில் இருக்கும் விஜயா மருத்துவமனையில் குழந்தைகளுக்கு இலவச இருதய சிகிச்சை அளிப்பதாக உலாவும் செய்திகள் கடந்த 5 ஆண்டுகளாக பரவி வருகிறது எனக் கூறலாம். நவம்பர் 28-ம் தேதியில் இருந்து டிசம்பர் 5-ம் தேதி வரை இலவச இருதய சிகிச்சை நடைபெறுவதாக கூறும் பதிவில் வருடங்கள் எப்பொழுதும் இருந்ததில்லை.
எனினும், மருத்துவமனையை தொடர்பு கொள்ள தொலைபேசி எண்கள் அளிக்கப்பட்டு இருக்கிறது. அந்த எண்களுக்கு தொடர்பு கொண்டால் பதில் அளிக்க யாரும் இருந்ததில்லை. இது தொடர்பாக விஜயா மருத்துவமனையை தொடர்பு கொண்டு பேசுகையில் அவ்வாறான சிகிச்சைகள் இல்லை என்ற கூறுகின்றனர். இதற்கு முன்பாகவே விஜயா மருத்துவமனை குறித்த செய்திகள் வதந்திகளே என Youturn மீம் பதிவிட்டு இருந்தோம்.
ஒரு தனியார் மருத்துவமனையின் பெயரைக் கூறி நீண்டகாலமாக புரளி செய்தி சமூக வலைதளங்களில் உலாவிக் கொண்டே இருக்கிறது. இதனால், உண்மையான செய்திகளும் நீர்த்துப்போக வாய்ப்புள்ளது. சில தகவல்களை சமூக வலைதளங்களில் பகிர்வதற்கு முன்பாக அந்த தகவல் உண்மையாக இருக்குமா ? என சிந்தித்து பகிருங்கள்.