விஜயகுமார் ஐபிஎஸ் ஜம்மு-காஷ்மீரின் புதிய ஆளுநராக நியமிக்கப்படுகிறாரா ?

பரவிய செய்தி
சற்றுமுன் கிடைத்த தகவல்படி, ஜம்மு-காஷ்மீர் கவர்னராக விஜயகுமார் ஐபிஎஸ் வாழ்த்துவோம்.
மதிப்பீடு
விளக்கம்
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இரு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்படும் என்ற மசோதா மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மூலம் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், காஷ்மீர் இரு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்படுவதால் ஜம்மு-காஷ்மீரின் புதிய ஆளுநராக கே.விஜயகுமார் ஐபிஸ் நியமிக்கப்பட உள்ளதாகவும், அவருக்கு வாழ்த்துக் கூறியும் முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் அவரின் புகைப்படங்கள் பகிரப்பட்டு வருகிறது.
ஆகஸ்ட் 8-ம் தேதி Mohan Suresh kms என்ற முகநூலில் கணக்கில் பதிவான தகவல் தமிழக இந்துக்கள் உள்ளிட்ட முகநூல் குழுக்களில் பகிரப்பட்டு வேகமாக பரவி வருகிறது. இதைத் தவிர, முகநூல் குழுக்களில் பகிரப்பட்ட பதிவுகளும் ஆயிரக்கணக்கான லைக்குகள் மற்றும் ஷேர்களை பெற்று வைரலாகி வருகிறது.
விஜயகுமார் ஐபிஎஸ் :
கடந்த 2004-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 18-ம் தேதி ” வீரப்பனை ” , காவல் அதிகாரி விஜயகுமார் ஐபிஎஸ் தலைமையிலான குழு சுட்டுக் கொன்றது. 1975 முதல் காவல்துறையில் பணியாற்றி வந்த கே.விஜயகுமார் ஐபிஎஸ் கடந்த 2012-ல் ஓய்வு பெற்றார்.
2016-ல் வீரப்பனை சுட்டுக் கொன்றது குறித்த 1000 பக்கங்களை அடங்கிய புத்தகத்தை ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார் எழுதியுள்ளார். காவல்துறையில் ஓய்வுபெற்ற பிறகு மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்த பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்ற துவங்கினார்.
தற்பொழுது ஜம்மு-காஷ்மீர் மாநில ஆளுநரின் ஆலோசகராக பணியாற்றி வருகிறார். 2019 பிப்ரவரியில் புல்வாமாவில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது தாக்குதல் நிகழ்ந்த பொழுது காஷ்மீர் ஆளுநரின் பாதுகாப்பு ஆலோசகராக பேட்டி அளித்து உள்ளார்.
உண்மை என்ன ?
சமீபத்தில் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படுவதால் விஜயகுமார் ஐபிஎஸ் ஆளுநராக நியமிக்கப்பட உள்ளதாக முகநூலில் பகிர்ந்து வருகின்றனர். ஜம்மு-காஷ்மீரின் ஆளுநராக சத்யபால் மாலிக் 2018-ல் இருந்து பதவியில் இருக்கிறார்.
ஆகஸ்ட் 5-ம் தேதி எகானாமிக் டைம்ஸ் செய்தி தளத்தில் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இனி எப்படி யூனியன் பிரதேசமாக இயங்கும் என விவரித்து இருந்தனர். அதில்,முன்பு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஆளுநராக இருந்தவர் இனி ஜம்மு-காஷ்மீர் மற்றும் கேலடாக் யூனியன் பிரதேசத்தின் துணைநிலை ஆளுநராக செயல்படுவார் எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது.
விஜயகுமார் ஐபிஎஸ் யூனியன் பிரதேசத்தின் துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட உள்ளாரா என்பது குறித்து ஆராய்ந்த பொழுது, செய்திகளில் அவ்வாறான தகவல்கள் கிடைக்கவில்லை. அதிகாரப்பூர்வ அறிவிப்புகள், உறுதியான தகவல்கள் கிடைக்காதபட்சத்தில் இவ்வாறான செய்தியை பரப்பியவர் யார் என்பதை அறிய முடியவில்லை.
காஷ்மீர் விவகாரத்தில் உறுதியான தகவல்கள் இல்லாத தவறான செய்திகளை சமூக ஊடகங்களில் பகிரச் செய்கின்றனர். ஜம்மு-காஷ்மீரின் ஆளுநராக சத்யபால் மாலிக் பதவியில் நீடித்து வருகிறார். கே.விஜயகுமார் ஐபிஎஸ் ஜம்மு-காஷ்மீரின் புதிய ஆளுநராக நியமிக்கப்படுகிறார் என்பதற்கு அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை. ஒருவேளை மத்திய அரசு அந்த முடிவை எடுத்தால், அதுகுறித்த செய்தியும் வெளியிடப்படும்.