‘விஜய்க்கு ஓட்டு போட மாட்டேன்’ என அரவிந்த்சாமி கூறியதாக மாலை மலர் வெளியிட்ட தவறான செய்தி!

பரவிய செய்தி

விஜய்க்கு ஓட்டு போட மாட்டேன் அரவிந்த்சாமி

X link | Archive link

மதிப்பீடு

விளக்கம்

நடிகர் விஜய் கடந்த 2ம் தேதி (பிப்ரவரி) ’தமிழக வெற்றி கழகம்’ என்கிற பெயரில் அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கியுள்ளார். கட்சி பெயர் தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பிலேயே வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவது கிடையாது என்றும் 2026 சட்டமன்ற தேர்தலில் தான் போட்டியிட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அவர் கட்சி தொடங்கியதில் இருந்து பல்வேறு தரப்பினரும் அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும்  கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Archive link

இந்நிலையில் விஜய்க்கு ஓட்டுப் போட மாட்டேன் என நடிகர் அரவிந்த்சாமி கூறியதாக ’மாலை மலர்’ நியூஸ் கார்டு மற்றும் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதை சினிமா விமர்சகர் புளூ சட்டை மாறனும் தனது எக்ஸ் (X) பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

உண்மை என்ன ?

மாலை மலர் வெளியிட்டுள்ள நியூஸ் கார்டில் உள்ளக் கருத்தை உண்மையில் அரவிந்த்சாமி கூறினாரா? எனத் தேடினோம். அவர் 2018, டிசம்பர் மாதம் அளித்த நேர்காணல் ஒன்றில் இது தொடர்பாகப் பேசியுள்ளார். 

Little Talks’ என்னும் யூடியூப் பக்கத்திற்கு அளித்த அந்த நேர்காணலில் ”சமூகம் சார்ந்த பல விஷயங்களை நீங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிடுகிறீர்கள். அரசியலில் உங்களுக்கு ஆர்வம் உள்ளதா?” என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது. 

அதற்கு, “எனக்கு அரசியலில் ஆர்வம் கிடையாது. ஒரு வேலை அரசியல் ஆர்வம் எனக்கு வந்தது என்றால், முதலில் நான் நிறையப் படிக்க வேண்டும். Governance பற்றிப் படிக்க வேண்டும். எனக்குப் பிரபலம் இருந்தால் மட்டும் போதாது. பிரபலத்திற்கும் governance-க்கும் சம்பந்தம் கிடையாது. நீங்கள் ஒரு பெரிய ஸ்டார் என்றால் நன்றாக ஆட்சி செய்வீர்கள் என்பதற்கு என்ன சம்பந்தம்? நீங்கள் ஒரு நல்ல நடிகர். உங்களுக்கு அரசுத் திட்டங்களை வகுக்கத் தகுதி இருக்கிறது என எப்படி நம்புவது. உங்களுக்கு நோக்கம் இருக்கலாம், நல்ல எண்ணங்கள் இருக்கலாம், நீங்களே நான் இவ்வளவு நாள் ஹீரோவாக இருந்துள்ளேன். எல்லாரையும் காப்பாற்றியுள்ளேன். இப்போது அரசியலுக்குச் சென்று காப்பாற்றப் போகிறேன் என்கிற மனநிலை இருக்கலாம். ஆனால், ஒரு மாநிலத்தை ஆட்சி செய்ய, திட்டங்களை வகுக்க how to educate yourself. செய்ய முடியாது எனச் சொல்லவில்லை. முடியும். அதற்கு நீங்கள் முதலீடு செய்ய வேண்டும். பத்து வருடம் படிக்க வேண்டும் எனச் சொல்லவில்லை. வீட்டில் இருந்தாவது படிக்க வேண்டும். அதைப் பற்றிப் பேச வேண்டும்” எனப் பதிலளிக்கிறார். 

இது ‘உங்களுக்கு அரசியலில் ஆர்வம் உள்ளதா?’ எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் தன்னளவில் அளித்த பதில்தான் இது. 

மேற்கொண்டு (2.40 min) ”ரஜினி, கமல், விஜய் மூன்று பேருக்கும் அரசியலில் ஆர்வம் உள்ளது. நீங்கள் யாருக்கு ஆதரவு தெரிவிக்கிறீர்கள்” என்கிற கேள்வி முன்வைக்கப்படுகிறது. 

அதற்கு ”யாருக்கு வேண்டுமானால் அரசியலில் ஆர்வம் இருக்கலாம். அதிகப்படியான மக்கள் அரசியலுக்கு வர வேண்டும். தேர்தலுக்கு முன்பாக நீங்கள் என்ன சொல்கிறீர்கள், என்னவெல்லாம் செய்யப் போகிறீர்கள், உங்களால் செய்ய முடியுமா? முடியாதா? உங்களுடன் இருப்பவர்கள் யார்?  அவர்களால் உங்களின் கொள்கையை நடைமுறைப்படுத்த முடியுமா? முடியாதா? என்பதை நான் ஒரு சாதாரண வாக்காளராகப் பரிசீலிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். 

மேலும், ”நான் ரஜினி சாரின் பெரிய ரசிகன், கமல் சாரின் பெரிய ரசிகன் அல்லது எனக்கு விஜய் பிடிக்குமென ஓட்டுப் போடக் கூடாது. நான் ஓட்டுப் போடக் கூடாது. மற்றவர்கள் எப்படிச் செய்கிறார்கள் என நான் சொல்லவில்லை. நான் ஓட்டுப் போடக் கூடாது. போடவும் மாட்டேன். நீங்கள் சொல்லும் விஷயத்தில் மாற்றம் வரப் போகிறதா? அது உங்களால் முடியுமா? உங்கள் நல்ல எண்ணம் அல்லது நோக்கம் முதலில் என்னை வந்து சேர வேண்டும். பிறகுதான் அதைப் பற்றி நான் பார்க்க வேண்டும்” எனப் பதிலளித்துள்ளார். 

அரவிந்த்சாமி 5 வருடங்களுக்கு முன் பேசியதின் ஒரு வாக்கியத்தை மட்டும் மாலை மலர் நியூஸ் கார்டாக வெளியிட்டுள்ளது. மேலும் இரண்டு வெவ்வேறு கேள்விகளுக்கான பதில்களை ஒன்றாக சேர்த்து தவறாக செய்தியும் வெளியிட்டுள்ளது. 

அரசியலுக்கு வருபவர்களின் நோக்கம் என்ன? அதை அவர்களால் செய்ய முடியுமா என்பதைப் பார்த்து வாக்கு செலுத்துவதாக தன்னளவில் கூறியதைத் தவறாகப் பரப்புகின்றனர். 

இதேபோல் தமிழக வெற்றி கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கம் ஒருவரை மட்டும் பின் தொடர்கிறது. அது நடிகை கீர்த்தி சுரேஷ் எனப் பரப்பப்படுகிறது. இதுவும் தவறான தகவல். அப்பக்கம் நடிகர் விஜயை மட்டும் தான் பின் தொடர்கிறது. 

மேலும் படிக்க : நடிகர் விஜய்க்கு துணை முதல்வர் பதவி தருவதாகச் சீமான் கூறினார் எனப் பரவும் போலி செய்தி!

தமிழக வெற்றி கழகம் பற்றிப் பரப்பப்பட்ட பல்வேறு போலி செய்திகள் குறித்த உண்மைகள் யூடர்னில் கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க : டெல்லியில் புஸ்ஸி ஆனந்த் உடன் இருப்பவர் பாஜக ஆதரவாளர் பிரகாஷ் எம் சாமி எனப் பரவும் பொய் !

முடிவு : 

விஜய்க்கு ஓட்டுப் போட மாட்டேன் என அரவிந்த்சாமி கூறியதாகப் பரவும் தகவல் உண்மை அல்ல. அது 2018ல் எடுக்கப்பட்ட வீடியோ. யாராக இருந்தாலும் அவர்களின் நோக்கம், கொள்கை என்ன என்பதைப் பார்த்து அவர் வாக்கு செலுத்துவதாகக் கூறியுள்ளார். 

Please complete the required fields.




Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader