விக்ரம் லேண்டருக்கு மின்சப்ளை துவங்கியதா ? இஸ்ரோ வெளியிட்ட தகவல் என்ன ?

பரவிய செய்தி
சந்திராயன்-2 லேண்டர் பேட்டரிக்கு மின்சப்ளை துவங்கியது. ஆர்பிட்டர் தட்டி எழுப்பியது விக்ரம் லேண்டர் ரோபோவில் உள்ள பிரக்யான் கருவி இன்று இரவுக்குள் பணி துவங்கும் இஸ்ரோவில் ஆர்ப்பரிப்பு. வீழ்ந்த விக்ரம் லேண்டர் நிலவில் சாய்ந்த நிலையிலும் உள்ளிருக்கும் பிரக்யான் எந்நேரமும் வெளிவரலாம்.
மதிப்பீடு
விளக்கம்
நிலவின் தென் துருவத்திற்கு இஸ்ரோ மூலம் அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டர் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ளது. விக்ரம் லேண்டர் தரையிறங்க வேண்டிய இடத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் விழுந்து கிடப்பதாக தெரிய வந்துள்ளது. ஆர்பிட்டர் மூலமும் விக்ரம் லேண்டர் உடைய புகைப்படங்கள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், விக்ரம் லேண்டரில் உள்ள பேட்டரிக்கு மின்சப்ளை துவங்கி உள்ளதாகவும், ரோபோவில் உள்ள பிரக்யான் கருவி இன்று இரவுக்குள் பணி துவங்கி விடும் என இஸ்ரோ ஆர்பரித்து இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்தி வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த செய்தியின் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்து பார்க்க முயன்ற பொழுது செய்தியின் தொடக்கம் எங்கிருந்து வெளியானது என தெரிந்து கொள்ள முடிந்தது. செப்டம்பர் 9-ம் தேதி ஒன் இந்தியா தமிழ் இணையதளத்தின் முகநூல் பக்கத்தில் வெளியான செய்தியுடன் ” சந்திராயன்-2 லேண்டர் பேட்டரிக்கு மின்சப்ளை துவங்கியது:இஸ்ரோ-நாசா சேருகிறது.! ” என்ற தலைப்பை வைத்து முகநூலில் வெளியான பதிவு 2 ஆயிரம் ஷேர்களை கடந்து வைரலாகி உள்ளது.
ஒன் இந்தியா செய்தியின் உள்ளே நுழைந்து பார்க்கையில், “ லேண்டரில் உள்ள சோலார் தகடுகள் மூலம் மின் உற்பத்தி நடந்து வருகிறது. இதை அதில் பொருந்தியுள்ள கருவிகள் பேட்டரிக்கு கடத்தி வருகின்றன ” எனக் கூறியுள்ளனர். ஆனால், இந்த தகவலை இஸ்ரோ தலைவர்கள் அளித்தார்களா அல்லது எங்கு தகவல் கிடைத்தது என்பது குறித்து குறிப்பிடவில்லை.
லேண்டருக்கு பவர்சப்ளே உள்ளதா ?
செப்டம்பர் 10-ம் தேதி டைம்ஸ் ஆஃப் இந்தியா இணையதளத்தில் வெளியான செய்தியில் , ” விக்ரம் லேண்டரின் வெளிப்புற பகுதியில் சோலார் தகடுகள் பொருத்தப்பட்டு உள்ளன. விக்ரம் லேண்டர் திட்டமிட்டப்படி நிலவில் தரையிறங்கி இருந்தால் சூரிய ஆற்றலை பயன்படுத்தி தேவையான மின் ஆற்றலை உருவாக்கி கொண்டிருக்கும். இதைத்தவிர, விக்ரம் கூடுதலாக பேட்டரி அமைப்பையும் கொண்டுள்ளது.
ஆனால், இந்நேரத்தில் விக்ரம் லேண்டர் ஆற்றலை உருவாக்கி கொள்கிறதா என்பது சரியாக தெரியவில்லை. தற்பொழுது வரை இஸ்ரோவால் உறுதிப்படுத்தப்படவில்லை. மோசமான நிலையில் தரையிறங்கியது அதன் அமைப்புகளை பாதித்து இருக்கக்கூடும். எனினும், இஸ்ரோ தரப்பில் தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டு வருவதாக ” சேர்மன் தெரிவித்து இருக்கிறார்.
#VikramLander has been located by the orbiter of #Chandrayaan2, but no communication with it yet.
All possible efforts are being made to establish communication with lander.#ISRO— ISRO (@isro) September 10, 2019
விக்ரம் லேண்டர் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இஸ்ரோ தரப்பில் இருந்து முகநூல், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களுக்கும் வெளியிடப்பட்டு வருகிறது. இஸ்ரோ தன் ட்விட்டரில் செப்டம்பர் 9-ம் தேதி வெளியிட்ட பதிவில், ஆர்பிட்டர் மூலம் விக்ரம் லேண்டர் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாகவும், எனினும் தற்போது வரை தகவல் தொடர்பு இல்லை என்றும், லேண்டருடன் தகவல் தொடர்பை ஏற்படுத்த அனைத்து சாத்திய முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.
விக்ரம் லேண்டர் மோசமான நிலையில் தரையிறங்கியதால் சாய்ந்த நிலையில் உள்ளதே தவிர உடைந்து விடவில்லை என இஸ்ரோ தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், நிலவில் உள்ள லேண்டருடன் 14 நாட்களுக்குள் தகவல் தொடர்பை ஏற்படுத்த வேண்டி உள்ளது. ஏற்கனவே 4 நாட்கள் முடிந்த நிலையில் மீதமுள்ள 10 நாட்களுக்குள் லேண்டருடன் தகவல் தொடர்பு இணைப்பை ஏற்படுத்த வேண்டிய சவால் விஞ்ஞானிகள் முன் உள்ளது.
முடிவு :
நம்முடைய தேடலில், இஸ்ரோ அனுப்பிய சந்திராயன்-2 திட்டத்தின் விக்ரம் லேண்டர் தன் மின்சப்ளையை துவங்கி இருப்பதாக வெளியான செய்திக்கு ஆதாரங்கள் இல்லை. இஸ்ரோ தரப்பில் அவ்வாறான தகவல்கள் வெளியிடப்படவில்லை.
இஸ்ரோ விஞ்ஞானிகள் விக்ரம் லேண்டரை மீண்டும் இயங்கும் முயற்சியில் இறங்கி உள்ளனர். இது எந்த அளவிற்கு சாத்தியம் என உறுதியாக கூறவில்லை. விக்ரம் லேண்டர் குறித்த சரியான தகவல்களை இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ தளங்கள் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.