விக்கிரவாண்டி நெடுஞ்சாலையில் கொள்ளை முயற்சி எனப் பரவும் வீடியோ உண்மையில்லை-காவல்துறை எச்சரிக்கை.

பரவிய செய்தி
சினிமா பாணியில் அரங்கேறிய இந்த கொள்ளை முயற்சி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்தக் காட்சிகள் இணையத்தில் வைரலான நிலையில் திண்டிவனத்தில் உள்ள மதுக்கடை ஒன்றில் மது அருந்திக் கொண்டிருந்த மதுரையைச் சேர்ந்த மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
மதிப்பீடு
விளக்கம்
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி நெடுஞ்சாலை அருகே சினிமாபாணியில் அரங்கேறிய கொள்ளை முயற்சி என்றும், இந்த கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 3 பேரை திண்டிவனத்தில் வைத்து போலீசார் கைது செய்ததாக 2020 டிசம்பர் 18-ம் தேதி 1.30 மணி அளவில் பதிவாகியதாக இடம்பெற்ற இவ்வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதேபோல், ” Alert
எச்சரிக்கை மதுரை: நூதன கொள்ளை முயற்சி: வைரல் வீடியோவால் வாகன ஓட்டிகள் அச்சம். ஹைவே ஹை(லை)ட் டெக்னிக் திருடர்கள்! கவனமாக ஓட்டுங்கள் ” என மதுரை உள்ளிட்ட பிற பகுதிகளைக் குறிப்பிட்டு அங்கு நிகழ்ந்ததாகவும், மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தும் வருகிறார்கள். இன்னும் சிலர், நூதன கொள்ளை முயற்சி என சம்பவம் நிகழ்ந்த இடம் தெரியாமலும் பகிர்ந்து வருகிறார்கள்.
இரவில் வரும் காருக்கு முன்பாக டார்ச் லைட்டை அடித்து நகர விடாமல் செய்து கொள்ளை கும்பல் காரை சுற்றி வளைத்து கொள்ளை அடிக்க முயற்சிக்கும் போது ஓட்டுனர் காரை பின்புறமாக எடுத்து அங்கிருந்து தப்பித்து விடுகிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த வீடியோ பரவியதால் விக்கிரவாண்டி பகுதியில் பயணிப்பவர்கள் அச்சத்துடன் செல்வதாக கூறப்படுகிறது. ஆனால், தமிழக காவல்துறை அங்கு அப்படியொரு சம்பவமே நிகழவில்லை என மறுத்துள்ளனர்.
தமிழக காவல்துறையின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில், ” காவல் துறை எச்சரிக்கை!. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி நெடுஞ்சாலை பகுதியில் கொள்ளை முயற்சி நடைபெற்றது என பரவும் வீடியோ போலியானது. வாகன ஓட்டிகள் எவ்வித அச்சமுமின்றி வாகனத்தை இயக்கலாம். இதுபோன்று போலியான வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பினால் காவல்துறையால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துகொள்கிறோம் ” என வைரலாகும் வீடியோவின் புகைப்படத்துடன் பதிவிட்டு உள்ளனர்.
சமீபத்திய தேதி குறிப்பிட்ட வீடியோ என்பதால் மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். எனினும், இந்த வீடியோவில் இடம்பெற்ற கொள்ளை முயற்சி எங்கு நிகழ்ந்தது அல்லது அது உண்மையா என்பது குறித்த எந்தவொரு தகவலும் போலீசார் தரப்பில் பகிரவில்லை.
அதுகுறித்து தேடிய போது டிசம்பர் 26-ம் தேதி வெளியான நியூஸ் 18 ஆங்கில செய்தியில், ” சாலையில் காரின் முன்பாக டார்ச் லைட் அடித்து கொள்ளை அடிக்க நடத்த முயற்சியின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒடிசாவின் ஜெய்ப்பூர் எனும் பகுதியில் நிகழ்ந்ததாக Cartoq எனும் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், எனினும் ஒடிசா போலீஸ் தரப்பில் எந்தவொரு அறிக்கையும் வெளியாகவில்லை” எனக் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பரவுவதற்கு முன்பாகவே, டிசம்பர் 24-ம் தேதி சில யூடியூப் சேனல்களில் கொள்ளை முயற்சியானது ஒடிசாவில் நிகழ்ந்ததாகவே குறிப்பிட்டு இருக்கிறார்கள். எனினும், அதை நம்மால் உறுதியாகக் கூற முடியவில்லை.
எதுவாகினும், வாகனத்தில் பயணிப்பவர்கள் எச்சரிக்கை இருப்பது நல்லதே. ஆனால், கொள்ளை முயற்சி நிகழாத இடத்தைக் குறிப்பிட்டு வைரலாக்கி மக்களை அச்சம் அடைய செய்ய வேண்டாம்.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.