This article is from Sep 09, 2021

குப்பை வண்டியில் பறிமுதல் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள்.. திமுக அரசின் செயலா ?

பரவிய செய்தி

பறிமுதல் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை குப்பை லாரியில் ஏற்றிச் சென்ற அவலம்.. திமுகவுக்கு ஓட்டு போட்ட நல்லவர்களுக்கு சமர்ப்பணம் !

Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

கொரோனா பரவல் காரணமாக பல மாநிலங்களில் பொது இடங்களில் விநாயகர் விலை வைப்பதற்கும், ஊர்வலம் செல்லவும் தடை விதித்தது மாநில அரசுகள். அதற்கு அம்மாநிலங்களில் உள்ள பாஜகவினர், இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தடையை மீறி விற்பனை செய்வதற்காக தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை பறிமுதல் செய்தவர்கள் அதனை குப்பை வண்டியில் ஏற்றிச் செல்வதாக ஓர் புகைப்படம் திமுக அரசை கண்டித்து சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாடு பாஜகவைச் சேர்ந்த சுமதி வெங்கடேஷ் ட்விட்டரிலும் இப்புகைப்படம் பகிரப்பட்டுள்ளது.

உண்மை என்ன ? 

தமிழ்நாட்டில் பறிமுதல் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் குப்பை வண்டியில் ஏற்றப்பட்டதாக வைரல் செய்யப்படும் புகைப்படம் தொடர்பான எந்த செய்தியும் இல்லை. ஆகையால், வைரல் செய்யப்படும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்து பார்க்கையில், அப்புகைப்படம் ஆந்திராவில் எடுக்கப்பட்டது எனத் தெரிய வந்தது.

Twitter link | Archive link 

செப்டம்பர் 7-ம் தேதி அன்ஷுல் சக்சேனா என்பவரின் ட்விட்டரில் பக்கத்தில், சாலையோரத்தில் வைக்கப்பட்ட விநாயகர் சிலை பறிமுதல் செய்யப்படும் வீடியோ மற்றும் குப்பை அள்ளும் வாகனத்தில் விநாயகர் சிலை இருக்கும் புகைப்படமும் இடம்பெற்று இருக்கிறது. இவ்வீடியோ ஆந்திராவின் குண்டூரில் எடுத்ததாகக் குறிப்பிட்டு இருக்கிறார்.

Twitter link | Archive link 

அதேபோல், கர்நாடகா பாஜகவைச் சேர்ந்த சி.டி.ரவி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகனை டக் செய்து இதே புகைப்படத்தை செப்டம்பர் 7-ம் தேதி பதிவிட்டு இருக்கிறார்.

வைரல் செய்யப்படும் புகைப்படத்தில் ஆந்திராவின் வாகனப் பதிவு இருப்பதை காணலாம். இந்த சம்பவம் தொடர்பாக செப்டம்பர் 8-ம் தேதி டைம்ஸ் ஆப் இந்தியாவில் செய்தியும் வெளியாகி இருக்கிறது. ஆனால், தமிழ்நாடு பாஜகவினர் இதே புகைப்படத்தை தமிழ்நாடு மற்றும் திமுக அரசு செய்ததாக தவறாகப் பரப்பி வருகிறார்கள்.

முடிவு : 

நம் தேடலில், பறிமுதல் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை குப்பை லாரியில் ஏற்றியதாக வைரல் செய்யப்படும் சம்பவம் நிகழ்ந்தது ஆந்திராவின் குண்டூரில், தமிழ்நாட்டில் அல்ல என அறிய முடிந்தது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader