விஐபி பேக்ஸ் நிறுவனம் மதமாற்றத்தை ஆதரிக்கும் விளம்பரத்தை வெளியிட்டதாக வலதுசாரிகள் பரப்பும் வதந்தி !

பரவிய செய்தி
கேவலமான விளம்பரம் நடுநிலை பேசும் இந்துக்கள் இருக்கும் வரை இந்த மாதிரி விளம்பரம் வரும். #BoycottVIPBags #Skybags
மதிப்பீடு
விளக்கம்
ஒரு இஸ்லாமிய இளைஞரும், ஒரு இந்து பெண்ணும் காதலிப்பது போன்று எடுக்கப்பட்ட வீடியோவில் அப்பெண் ஆரம்பத்தில் தாவணி அணிந்து இந்து மதக் குறியீடுகளுடன் இருப்பது போன்றும் பின்னர் அவர் வைத்திருக்கும் பொட்டு அகற்றப்பட்டு குர்தி (Long Kurti) அணிந்து இஸ்லாமிய மத தோற்றத்தில் இருப்பது போன்றும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. வீடியோவின் இறுதியில் ஸ்கை பேக்ஸ்(Sky Bags) எனக் காண்பிக்கப்பட்டு முடிவடைகிறது.
விஐபி பேக்ஸ் என்ற நிறுவனத்தின் ஸ்கை பேக்ஸ் பிராண்ட் மதமாற்றத்தை ஆதரிக்கும் வகையில் ஸ்கை பேக்ஸ் விளம்பரத்தை வெளியிட்டு உள்ளதாக வலதுசாரிகளால் கடுமையாக விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டு சமூக வலைதளைங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
இவனுக துலுக்க கமபெனியாக பிராண்ட ஆக இருப்பினுங்க
கேவலமான விளம்பரம் நடுநிலை பேசும் இந்துக்கள் இருக்கும் வரை இந்த மாதிரி விளம்பரம் வரும். #BoycottVIPBags#Skybags https://t.co/aNPk8Bz1Qk
— எல்லா மதங்களும் உண்மை என நம்புகிறவர்கள் நாங்கள் (@ALWAN20233931) April 22, 2023
உண்மை என்ன ?
பரவும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்து பார்க்கையில், அதன் உண்மையான வீடியோவை thereal_vishnu என்பவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காண முடிந்தது. அதில் ஸ்கை பேக்ஸ் என இடம்பெறவில்லை.
மேலும் அந்த வீடியோவில் அவர் “Happy Ramadan Kareem” என்ற வாழ்த்து செய்தியைக் குறிப்பிட்டதோடு, சூபியும் சுஜாதாவும் திரைப்படத்தின் பாடலை மறு திரையாக்கம் செய்து அதில் நடித்துள்ளதாகவும் “Shoot mode (Soofiyum Sujathayum)” என்று குறிப்பிட்டு பதிவு செய்திருப்பதை காண முடிந்தது. இந்த வீடியோ கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வைரல் செய்யப்பட்டது.
அந்த வீடியோவில் ஸ்கை பேக்ஸ் என்று இறுதியில் குறிப்பிடப்பட்டுள்ளதால், அதற்கு மறுப்பு தெரிவித்துள்ள விஐபி பேக்ஸ் நிறுவனம், இது நாங்கள் வெளியிட்டுள்ள வீடியோ அல்ல என்றும், இதை சிலர் சட்ட விரோதமாக பதிவிட்டு வருகின்றனர் என்றும் அறிக்கை வெளியிட்டுள்ளது.
Official statement pic.twitter.com/zDsbNy6n3I
— VIPBags (@VIPBagsIndia) April 24, 2023
Puffington Ghost என்ற ஃபேஸ்புக் பக்கமே வைரல் செய்யப்படும் வீடியோவை எடிட் செய்து வெளியிட்டு இருக்கிறது. வைரல் செய்யப்படும் வீடியோவில் இந்த ஃபேஸ்புக் பக்கத்தின் லோகோ இடம்பெற்று இருக்கிறது.
மேலும் படிக்க : கம்யூனிஸ்ட் இந்து பெண்ணை முஸ்லீம் காதலன் தாக்கியதாக தவறாகப் பரப்பப்படும் கேரளா நடிகையின் புகைப்படங்கள் !
முடிவு:
நம் தேடலில், விஐபி பேக்ஸ் நிறுவனம் மதமாற்றத்தை ஆதரிக்கும் வகையில் ஸ்கை பேக்ஸ் விளம்பரம் வெளியிட்டதாக வலதுசாரிகளால் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வரும் வீடியோ உண்மையானது அல்ல என்பதை அறிய முடிகிறது.