This article is from Jul 08, 2020

“வைரஸ் ஷட் அவுட்” கொரோனாவிற்கு பயன்படாது என FDA எச்சரிக்கை !

பரவிய செய்தி

கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ள ‘வைரஸ் ஷட் அவுட்’! எப்படி செயல்படுகிறது?

Facebook link | archive link 

மதிப்பீடு

விளக்கம்

ஐ.டி கார்டு வடிவில் இருக்கும் ” வைரஸ் ஷட் அவுட் ” என்கிற தயாரிப்பை கழுத்தில் மாட்டிக்கொண்டால் ஒரு அடி தூரத்திற்கு நம்மை சுற்றி எந்தவித வைரஸ், பாக்டீரியா போன்ற பாதிப்பு இருக்காது என வெளியான செய்தியை பார்க்க முடிந்தது. இதற்கு அமெரிக்காவின் FDA அனுமதி அளித்து உள்ளதாகவும் குறிப்பிட்டு இருந்தனர். ஆனால், உண்மை செய்தி அதற்கு அப்படியே மாறாக உள்ளன. தற்போது புதியதலைமுறை செய்தியில் இருந்து அந்த பிரத்யேக வீடியோ நீக்கப்பட்டு விட்டது.

ஜப்பான் தயாரிப்பான ” வைரஸ் ஷட் அவுட் “-க்கு அமெரிக்காவின் FDA அனுமதி அளிக்கவில்லை. மாறாக, இதுபோன்ற போலியான தகவல்களை மக்கள் நம்ப வேண்டாம் என சுகாதார எச்சரிக்கை அறிக்கையே வெளியிட்டு உள்ளது. மே 15-ம் தேதி FDA வெளியிட்ட அறிக்கையில், இந்த தயாரிப்பு வைரஸ், பாக்டீரியா அல்லது பிற நோய்களை எந்தவொரு வழியிலும் குணப்படுத்தவோ அல்லது கொல்லவோ செய்யாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் 29-ம் தேதி வெளியான செய்தியில், சட்டவிரோதமாக நுழைய முயன்ற சுகாதார தயாரிப்புகளை அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் (EPA) மற்றும் அமெரிக்க சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு (CBP) பிரிவு தடுத்துள்ளதாக வெளியாகி உள்ளது. பறிமுதல் செய்ததில்  ” வைரஸ் ஷட் அவுட் ” தயாரிப்பும் இடம்பெற்று இருந்தது.

” வைரஸ் ஷட் அவுட் ”  தயாரிப்பு குறித்து நமக்கு எச்சரிக்கை செய்த மருத்துவர் பிரவீன் கூறுகையில், ” தற்போது செய்தியில் வெளியான வைரஸ் ஷட் அவுட் அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்டவையிலும் கூட கிடைக்கிறது. இது பிப்ரவரி மாதத்தில் இருந்தே பிலிப்பைன்ஸ், ஹாங்காங், அமெரிக்க உள்ளிட்ட நாடுகளில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால், இதனால் எந்த பயனும் இல்லை, ஏமாற்று வேலை என FDA உள்ளிட்டவை மே மாதத்தில் தகவல் வெளியிட்டன. அதை பறிமுதல் கூட செய்தன. அந்த தயாரிப்பு தற்போது இந்தியாவிற்குள்ளும் வந்துள்ளது. அதில் இருக்கும் குளோரின் டை ஆக்ஸைடு ஆனது பிளீச்சிங் பவுடர் போன்றதுதான் . அந்த பாக்கெட்டை மாட்டிக் கொண்டு சுற்றினால் காற்றில் பரவி பாதுகாக்கும் என சொல்வதில் எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது எனத் தெரியவில்லை, நம்பும்படியாக இல்லை. பிற நாடுகளில் விற்பனைக்கு வழியில்லாமல் தற்போது இந்தியாவிற்குள் வந்துள்ளது. அதே தயாரிப்பு வெவ்வேறு பெயரிகளில் கூட ஆன்லைன் வர்த்தக தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் ” எனத் தெரிவித்து இருந்தார்.

வைரஸ் ஷட் அவுட் தயாரிப்பு இந்திய மதிப்பில் ரூ.230 க்கு ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த தயாரிப்பு வெவ்வேறு பெயரிகளிலும் விற்பனை செய்யப்படுகின்றன. கொரோனா வைரஸின் அச்சுறுத்தலைப் பயன்படுத்தி ஆதாரம் இல்லாமல் விற்பனை செய்யப்படும் தவறான தயாரிப்புகளில் இருந்து மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader