சுத்தமான காற்று 1500 ரூ! சுவாசிக்கவும் காசு வேணும் !

பரவிய செய்தி
விற்பனைக்கு வருகிறது சுத்தமான காற்று. டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்து வருவதால் கேன்களில் அடைக்கப்பட்ட காற்றினை விற்க உள்ளனர்.
மதிப்பீடு
சுருக்கம்
2016-ல் கனடா நிறுவனமான “ விடாலிட்டி ஏர் ” இந்தியாவில் கேன்களில் அடைக்கப்பட்ட சுத்தமான காற்றினை விற்கும் பணியில் களமிறங்க உள்ளதாக அறிவித்தது.
விளக்கம்
சமீபத்தில் உலகில் அதிகம் மாசடைந்த நகரங்கள் பற்றிய பட்டியலானது உலக சுகாதார மையத்தால் வெளியிடப்பட்டது. இதில், 14 இந்திய நகரங்கள் இடம்பெற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக, பல ஆண்டுகளாக இந்திய தலைநகரான டெல்லியில் காற்று மாசுத் துகள்கள் அதிகரித்து மக்கள் கடுமையான பாதிப்புகளை சந்திப்பதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், கனடா நாட்டைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று இந்தியாவில் சுத்தமான காற்றினை விற்பனை செய்யும் பணிகளில் இறங்கியுள்ளனர். கனடா நிறுவனமான “ விடாலிட்டி ஏர் ” கேன்களில் அடைக்கப்பட்ட சுத்தமான காற்றினை விற்பனை செய்து வருகின்றனர்..
இதன்படி, கேன்களில் உள்ள சுத்தமான காற்றினை ஒரு முறை சுவாசிக்க மட்டும் ரூ.12.50 விலைநிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், சுத்தமான காற்று அடைக்கப்பட்ட 3 லிட்டர் கேன் ரூ. 1,450-க்கும், 8 லிட்டர் கேன் ரூ.2,800-க்கும் என விலை நிர்ணயித்து விற்பனைக்கு வர உள்ளது.
தென்மேற்கு கனடாவில் இருந்து சேகரிக்கப்பட்ட “ இயற்கை ” காற்றினை விற்பனை செய்யும் திட்டத்தில் கனடா நிறுவனம் செயல்பட்டு வருகிறது. “ விடாலிட்டி ஏர் ” நிறுவனம் பெய்ஜிங், ஷாங்காய் உள்ளிட்ட 7 சீன நகரங்களில் அதிகளவிலான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. இந்நிறுவனம் மூலம் ஏற்கனவே சீனாவிற்கு 1,500 யூனிட்ஸ் விற்பனைக்காக அனுப்பப்பட்டது.
கேன்களில் காற்று அடைக்கப்படும் செயல்முறை குறித்து “ விடாலிட்டி ஏர் ” நிறுவனர் மோசேஸ் லாம் கூறுகையில், “கனடாவின் ஆல்பர்ட் பகுதியின் Buff இடத்தில் ஒவ்வொரு சீசனில் இருந்து 1,50,000 லிட்டர் காற்று சேகரிக்கப்படுகிறது. இதற்கான செயல்முறைக்கு 40 மணி நேரமாகும் ” என்கிறார்.
“ விடாலிட்டி ஏர் ” நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் கேன் காற்றினை விற்பனை செய்ய ஜஸ்டின் தாலிவால் என்பவர் பணிகளை செயல்படுத்தி வருகிறார். இதன் முதற்கட்டமாக 2016-ல் டெல்லியில் சோதனை விற்பனைக்காக 100 கேன்கள் கொண்டு வரப்பட்டுள்ளது என்று கூறுகிறார். கேன் காற்றினை பிரபலப்படுத்த ஆன்லைன் விளம்பரங்கள் உள்ளிட்ட வேலைகளை நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தண்ணீரைக் காசு கொடுத்து வாங்கும் நிலை இருக்கும் என்று யாரும் அறிந்திருக்கமாட்டார்கள். இன்றைய காலத்தில் கேன்களில் அடைக்கப்பட்ட தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் நிலை உருவாகியது போன்று கூடிய விரைவில் காற்றையும் அனைவரும் காசு கொடுத்து வாங்கும் நிலை உருவாகும் என்பதில் மாற்றம் இல்லை. இத்தனை காலம் இயற்கை இலவசமாக அளித்த காற்று மனிதனின் வளர்ச்சியால் விற்பனைக்கு வருகிறது.