சசிகலா உடல்நிலை தொடர்பாக ஜெகன் மோகன் கண்டனம் தெரிவித்தாரா ?

பரவிய செய்தி

மதிப்பீடு
விளக்கம்
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை பெற்று வந்த வி.கே.சசிகலா ஜனவரி 27-ம் தேதி விடுதலையாக உள்ளதாக அறிவிப்புகள் வெளியான நிலையில், அவருக்கு நிமோனியா காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை இருப்பதாகவும், கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.
சிறை தண்டனையில் இருந்து விடுதலையாக சில நாட்களே உள்ள நிலையில் சசிகலாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போனது சந்தேகத்தை எழுப்புவதாக அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களும், சமூக வலைதளங்களில் நெட்டிசன்களும் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், வி.கே.சசிகலா உடல்நிலை தொடர்பாக கர்நாடக அரசுக்கு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளதாக ஓர் பதிவு அமமுக ஆதரவாளர்கள் மற்றும் டிடிவி ஆதரவாளர்களால் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வருகிறது.
சசிகலா தொடர்பாக ஜெகன் மோகன் கர்நாடகா அரசிற்கு கண்டனம் தெரிவித்ததாகவோ அல்லது சசிகலா உடல்நிலை குறித்து பேசியதாகவோ எந்தவொரு பதிவும் கிடைக்கவில்லை. சசிகலாவின் உடல்நிலை குறித்து உடனடி செய்திகளை வெளியிட்டு வரும் தமிழக ஊடகத்திலும் கூட அப்படி எந்தவொரு செய்தியும் வெளியாகவில்லை. ஜெகன் மோகனின் தனிப்பட்ட சமூக வலைதளங்களிலும் எந்த பதிவும் இல்லை.
ஆந்திர மாநிலத்தில் வாகனத்தின் மூலம் வீடுகளுக்கே ரேஷன் பொருட்களைக் கொண்டு வரும் திட்டத்தை ஜெகன் மோகன் தொடங்கி வைத்த சமீபத்திய செய்தி மட்டுமே வெளியாகி இருக்கிறது.
2017-ல் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பை கொண்டு ஜெகன் மோகன் மீது சொத்துக் குவிப்பு வழக்கை நடத்த வேண்டும் என தெலுங்கு தேசம் மக்கள் கட்சி கோரிக்கை வைத்தனர். மேலும், சசிகலாவிற்கு நடந்தது போன்று ஜெகன் மோகனுக்கும் நடக்கும் என்றும் தெரிவித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சசிகலாவின் உடல்நிலை குறித்து கர்நாடக அரசிற்கு ஜெகன் மோகன் கண்டனம் தெரிவித்ததாக எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை, சமூக வலைதளங்களில் சசிகலா ஆதரவாளர்கள் மட்டுமே அப்படியொரு தகவலை தவறாக பகிர்ந்து வருகிறார்கள்.