This article is from Nov 24, 2019

வ.உ.சி-யின் கொள்ளு பேத்தி மேற்படிப்புக்கு உதவியை நாடினாரா?| வ.உ.சி பேரனின் பதில்.

பரவிய செய்தி

தாய்நாட்டின் சுதந்திரத்திற்காக தன் சொத்தையெல்லாம் இழந்து வறுமையில் இறந்த வ.உ.சி. அவரின் கொள்ளு பேத்தி முத்து பிரம்ம நாயகி +2-வில் 1200-க்கு 1130 மார்க் எடுத்து வறுமையின் காரணமாக தனது மேற்படிப்பை பிறர் உதவி மூலம் படித்தவர்.

மதிப்பீடு

விளக்கம்

வெள்ளையனுக்கு எதிராக கப்பலோட்டிய தமிழன், இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று செக்கிழுத்த செம்மல் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளையின்(வ.உ.சி) கொள்ளு பேத்தி குடும்ப வறுமையின் காரணமாக பிறரின் உதவியுடன் தனது மேற்படிப்பை படித்ததாக ஓர் செய்தி முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதன் உண்மைத்தன்மையை பதிவிடுமாறு ஃபாலோயர்கள் தரப்பிலும் தொடர்ந்து கேட்கப்பட்டு வருகிறது.

Facebook post link

vignesh pandiyan என்ற முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்ட மீம் பதிவில், வ.உ.சி-யின் கொள்ளு பேத்தி வறுமையின் காரணமாக தனது மேற்படிப்பினை பிறரின் உதவியுடன் படித்ததையும், நேருவின் வாரிசு அரசியல் குறித்தும் தொடர்புப்படுத்தி இருந்தது.  இந்த பதிவு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஷேர்களை பெற்று பரவி வருகிறது.

தி ஹிந்து செய்தி :  

2013-ம் ஆண்டு மே 30-ம் தேதி தி ஹிந்து ஆங்கில செய்தி இணையதளத்தில் ” VOC scion awaiting help to pursue higher studies ” என்ற தலைப்பில் வெளியான செய்தியில், வி.முத்து பிரம்ம நாயகி தனது 12-ம் வகுப்பு தேர்வில் 1200-க்கு 1130 மதிப்பெண்களை பெற்று ஓட்டப்பிடாரம் பகுதியில் முதலிடம் பிடித்து இருந்தார். நாயகி வ.உ.சி-யின் மருமகள்(Niece) உடைய பேத்தி என குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்து உள்ளனர்.

நாயகியின் தந்தை வெங்கடாச்சலம் கூலி வேலை செய்பவர். ஆகையால், தனது மேற்படிப்பை தொடர்வதில் சிக்கல்கள் இருப்பதாக தெரிவித்து இருந்தார். 196.50 கட் ஆப் மதிப்பெண்கள் பெற்ற நாயகிக்கு மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புக்கான விண்ணப்பங்கள் வாங்க ஆசிரியர்களே உதவி செய்து இருந்தனர். மேலும், நாயகியின் மேற்படிப்பை தொடர்வதற்கு குடும்ப உறுப்பினர்கள் பிறரிடம் உதவியை நாடியுள்ளதாகவும் ” வெளியாகி இருந்தது.

தி ஹிந்து செய்தியில் வெளியான செய்தியையும், புகைப்படத்தையும் வைத்து தற்பொழுது பதிவிட்டு உள்ளனர். எனினும், இந்த செய்தி குறித்து கூடுதல் தகவல்களை அறிந்து கொள்ள வ.உ.சி-யின் பேரனும், வாலேஸ்வரன் அவர்களின் மகனாகிய சிதம்பரத்திடம் யூடர்ன் தரப்பில் தொடர்பு கொண்டு பேசிய பொழுது,

”  வ.உ.சி-யின் கொள்ளு பேத்தி நாயகி மேற்படிப்பிற்காக உதவியை நாடியுள்ளதாக வெளியான தகவலையடுத்து நேராக ஒட்டப்பிடாரத்திற்கு சென்று விசாரித்தேன். அந்த பெண்ணின் அம்மா ஒட்டப்பிடாரத்தில் வ.உ.சி தாத்தாவின் நினைவகம் உள்ள வீட்டை பராமரித்து வருபவர். பிரம்ம நாயகி நல்ல படித்து மதிப்பெண் பெற்ற பெண், மேற்கொண்டு படிக்க வசதி இல்லாத காரணத்தினால் அங்குள்ளவர்கள் யாரோ தவறாக பரப்பி விட்டனர். எனினும், ஒட்டப்பிடாரத்தில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மேனேஜர் அப்பெண்ணிற்கு உதவி செய்து கல்லூரி படிப்பையும் முடித்து விட்டார். 2015-ல் வ.உ.சி-யின் மகன் வாலேஸ்வரன் பிள்ளை(என் அப்பா) இறந்த பொழுதும் கூட மத்திய அமைச்சர் உள்ளிட்டோர் வருகை தந்தனர், ஊடகங்கள் செய்தி வெளியிட்டனர். ஆனால், 6 மாதங்களுக்கு ஒருமுறை அவ்வப்போது வ.உ.சி-யின் மகன் இறந்தார், கண்டுகொள்ளாத ஊடகம், யாரும் பேசவில்லை என வெளியாகிக் கொண்டே இருக்கிறது. அதுபோன்ற செய்திகளை அடிக்கடி பார்த்து பழகிவிட்டது. சிறிய கிராமம், ஒரே ஊர் மற்றும் ஒரே சமூகம் என்பதால் ஏதாவதொரு வழியில் தூரத்து சொந்தமாக கூட இருக்க வாய்ப்புகள் இருக்கலாம், ஆனால் நேரடி உறவினர்கள் இல்லை. வ.உ.சி-யின் தாத்தாவின் கடைசி கொள்ளு பேத்திக்கு வயது 30-ஐ தாண்டி விட்டது ” என விளக்கமாக கூறி இருந்தார்.

தி ஹிந்து செய்தியிலும் கூட பிரம்ம நாயகியின் தாயார் ஆறுமுகவள்ளி ஒட்டப்பிடாரத்தில் உள்ள வ.உ.சி-யின் நினைவு இடத்தில் பராமரிப்பு பணிகளை செய்வதாக குறிப்பிட்டு இருந்தனர். தி ஹிந்து செய்தியில் இடம்பெற்று இருந்த ஆறுமுகவள்ளியின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்ட பொழுது தொடர்பு கிடைக்கவில்லை.

இதனுடன் இணைக்கப்பட்டு இருந்த, நேரு தனது பிரதமர் பதவிக்காக நேதாஜி சுபாஷ் சந்திர போஸை காட்டிக் கொடுத்தார் என்பதற்கு ஆதாரங்கள் இல்லை. அது ஆதரமில்லா பதிவு. இருப்பினும், காங்கிரஸ் கட்சியில் நேருக்கு பிறகு வாரிசு அரசியல் இல்லை என மறுக்கவும் முடியாது. இன்று வரை நேரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் காங்கிரஸ் கட்சியில், இந்திய அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

முடிவு : 

நமக்கு கிடைத்த தகவலில் இருந்து, வ.உ.சி-யின் வாரிசு நாயகி வறுமையின் காரணமாக தனது மேற்படிப்பை படிக்க உதவியை நாடியதாக 2013-ம் ஆண்டு தி ஹிந்து ஆங்கில செய்தியில் புகைப்படத்துடன் வெளியாகி இருக்கிறது .அதில், இடம்பெற்ற புகைப்படத்தையே மீம் பதிவிற்கு பயன்படுத்தி உள்ளனர்.

ஆனால், இதற்கு வ.உ.சி-யின் பேரன் சிதம்பரம் தரப்பில், செய்திகள் தவறாக பரவி உள்ளன, அவர்கள் நேரடி சொந்தமில்லை என்றும், இதுபோல் பல செய்திகள் சுற்றி வருவதாகவும் நம்மிடம் விளக்கிக் கூறியுள்ளார். அந்த பெண்ணிற்கு கிடைத்த உதவியின் மூலம் கல்லூரி படிப்பையும் முடித்து விட்டார்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader