இது வோல்க்ஸ்வேகன் நிறுவனம் வெளியிட்ட கார் விளம்பரமா?

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
22 நொடிகள் கொண்ட வீடியோவில், வீட்டில் இருந்து இறங்கி காரில் செல்லும் பயங்கரவாதி மக்கள் இருக்கும் பகுதியில் காரை நிறுத்தி தற்கொலை வெடிகுண்டு தாக்குதலை நிகழ்த்துவதற்கு பட்டனை அழுத்தும் போது வெடிகுண்டு காருக்குள்ளேயே வெடித்து வெளியில் எந்த பாதிப்பும் நிகழாமல் போகிறது. இறுதியாக ” Polo. small but tough ” என வோல்க்ஸ்வேகன் கார் நிறுவனத்தின் லோகோ உடன் முடிவடைகிறது.
வோல்க்ஸ்வேகன் நிறுவனத்தின் புதிய கார் விளம்பரம் என ரிஷபன் எனும் முகநூல் பக்கத்தில் வெளியான இவ்வீடியோ பிற முகநூல் குழுக்களிலும் பகிரப்பட்டு வருகிறது. இதற்கு முன்பாக இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளிலும் இவ்வீடியோ வைரலாகி இருக்கிறது. ஆகையால், வோல்க்ஸ்வேகன் கார் நிறுவனம் இப்படியொரு விளம்பரத்தை வெளியிட்டதா என ஆராய்ந்து பார்க்க தீர்மானித்தோம்.
உண்மை என்ன ?
வோல்க்ஸ்வேகன் நிறுவனம் பயங்கரவாதி கார் விளம்பரம் குறித்து தேடிப் பார்க்கையில், ” வோல்க்ஸ்வேகன் தற்கொலை குண்டுவெடிப்பு விளம்பரம் போலியானது மற்றும் ஸ்பூஃப் வீடியோ என 2005-ம் ஆண்டு தி கார்டியன் வெளியிட்ட செய்தி கிடைத்தது.
இது தங்கள் நிறுவனத்தின் விளம்பரம் அல்ல, இந்த வீடியோவை உருவாக்கியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக வோல்க்ஸ்வேகன் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் பால் பக்கேட் கூறியதாகவும் வெளியாகி இருக்கிறது.
இணையத்தில் வைரலான விளம்பர வீடியோவை லீ மற்றும் டான் ஆகிய இரு ஸ்பூஃப் விளம்பர கிரியேட்டர்கள் செய்துள்ளனர். இவர்கள் உண்மையான விளம்பரங்களையும் செய்து வருகின்றனர். ஆனால், வோல்க்ஸ்வேகன் கார் நிறுவனத்திற்காக இவ்விளம்பரத்தை செய்யவில்லை, நையாண்டியாக ஸ்பூஃப் வீடியோ செய்து வெளியிட்டு இருக்கிறார்கள்.
இது குறித்து டான் கூறுகையில், ” இந்த விளம்பரம் தற்செயலாக வெளியேறி காட்டுத்தீ போல பரவியது. இது ஒவ்வொரு நாளும் மக்கள் செய்திகளில் பார்ப்பதை பிரதிபலிக்கிறது. மோசமான நோக்கங்களை கொண்டவர்களிடம் இருந்து அப்பாவி மக்களை பாதுகாக்கும் ஹீரோவே இந்த கார். இது ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்தி இருந்தால் மன்னிக்கவும் ” எனத் தெரிவித்ததாக செய்தியில் வெளியாகி இருக்கிறது.
2005-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி வெளியான campaignlive.co.uk எனும் இணையதள செய்தியிலும், தங்கள் நிறுவனத்தின் பெயரில் தற்கொலை தாக்குதல் விளம்பரத்தை வெளியிட்டவர்களின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும், லீ மற்றும் டான் ஆகியோருக்கு வோல்க்ஸ்வேகன் நிறுவனத்தின் வழக்கறிஞர்கள் தரப்பில் கடிதம் அனுப்பி உள்ளதாகவும் வெளியாகி இருக்கிறது.
முடிவு :
நம் தேடலில், ஜெர்மனியின் வோல்க்ஸ்வேகன் நிறுவனத்தின் புதிய கார் விளம்பரம் என பரப்பப்படும் வீடியோ 2005-ம் ஆண்டில் வெளியான ஸ்பூஃப் வீடியோ மட்டுமே. இது வோல்க்ஸ்வேகன் நிறுவனம் வெளியிட்ட வீடியோ அல்ல. 15 ஆண்டுகளுக்கு பிறகு அந்த ஸ்பூஃப் வீடியோ மீண்டும் இணையத்தில் வைரலாகி இருக்கிறது என அறிய முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.