தடுப்பூசி செலுத்திய மணமகன் தேவை என பெண் வீட்டார் விளம்பரமா ?

பரவிய செய்தி

மதிப்பீடு
விளக்கம்
இந்தியாவில் கோவிட்-19 தொற்று பாதிப்பை சமாளிக்க தடுப்பூசி செலுத்துவது மிக முக்கியமானதாக இருப்பதால் மக்களிடையே தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் ஆர்வம் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், 2021 ஜூன் 4-ம் தேதியிட்ட ஆங்கில செய்தித்தாள் ஒன்றில் மணமகன் தேவை எனக் கொடுக்கப்பட்ட விளம்பரத்தில் பெண்ணிற்கு கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும் போடப்பட்டுள்ளன, எனவே கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்ட மணமகன் தேவை எனக் கூறும் செய்தித்தாளின் பக்கம் ஒன்று இந்திய அளவில் வைரலாகி வருகிறது.
காங்கிரஸ் எம்.பி சசி தரூர் கூட தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். சசி தரூர் பகிர்ந்த பிறகு அதை செய்தி ஊடகங்கள் கூட வெளியிடத் துவங்கின. தற்போது இந்த செய்தித்தாள் பக்கம் தமிழ்நாடு வரை பரவி இருக்கிறது. ஆகையால், இதன் உண்மைத்தன்மை குறித்து அறிந்து கொள்ள தீர்மானித்தோம்.
உண்மை என்ன ?
தடுப்பூசி செலுத்திக் கொண்ட மணமகன் தேவை என வைரல் செய்யப்படும் செய்தித்தாள் உண்மையானது அல்ல, அது உருவாக்கப்பட்ட செய்தித்தாள் பக்கம். fodey.com எனும் இணையதளத்தில் மேற்காணும் புகைப்படத்தில் உள்ள விவரங்களை வழங்கினால் செய்தித்தாளை போன்ற பக்கம் உருவாக்கப்படுகிறது.
fodey இணையதளத்தில் வைரல் செய்யப்படும் செய்தித்தாள் பக்கத்தில் உள்ள தேதி உள்ளிட்டவையையும், பரவிய மற்றொரு வதந்தி செய்தியை வைத்து நாம் உருவாக்கிய ஒரு செய்தித்தாள் பக்கத்தை ஒப்பிட்டு பார்க்கலாம். இரண்டிலும், வலது ஓரத்தில் காண்பிக்கும் எழுத்துக்கள் பொதுவாகவே வருகின்றன.
எனினும், திருமணத்திற்கு முன்பாக மணமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வது நல்லதே. இதுகுறித்து மருத்துவர் பிரவீன் கூறுகையில், ” முறையான ஆய்வுகள் இல்லாததால் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி போடப்படுவதில்லை. சில நாடுகள் முன்வந்து அவர்களுக்கு தடுப்பூசி கொடுக்க அறிவுறுத்தி வருகின்றன. ஆனால், இங்கே அப்படி செய்யப்படவில்லை. அவர்கள் தடுப்பூசி போடாததால் மற்றவர்களுடன் ஒப்பிடும் போது கடுமையான நோய்த்தொற்று ஏற்படுவதும் மற்றும் குழந்தையின் வாழ்க்கையும் பிரச்சனையில் உள்ளது. அனைவருமே தடுப்பூசி போட வேண்டும். திருமணத்திற்கு, குழந்தை பெற திட்டமிடுபவர்கள் முன்பே தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் ” எனத் தெரிவித்து இருந்தார்.
முடிவு :
நம் தேடலில், தடுப்பூசி செலுத்திய மணமகனே தேவை என பெண் வீட்டார் தரப்பில் செய்தித்தாளில் விளம்பரம் கொடுக்கப்பட்டதாக வைரல் செய்யப்படும் செய்தித்தாள் பக்கம் உருவாக்கப்பட்ட போலியான செய்தித்தாள் பக்கம் என அறிய முடிகிறது.