வைரலான “பாணி” எனும் தண்ணீர் பாட்டில் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எனும் ஒன்றிய அரசு நிறுவனத்தின் தயாரிப்பு !

பரவிய செய்தி

தமிழ்நாடு கலை பண்பாடு தமிழ் வளர்ச்சித் துறைக்கு எமது பாராட்டுக்கள். முத்தமிழ் வளர்த்த கலைஞரின் வாரிசு ஆட்சிக்கு படையல்.

Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

தண்ணீர் பாட்டிலில், ” பாணி ” என எழுதப்பட்டு இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது சர்ச்சையுடன் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியில் தண்ணீரை Paani என அழைப்பர். ஆனால், தமிழில் நீர் அல்லது தண்ணீர் என வைக்காமல் அப்படியே ” பாணி ” என மொழிப்பெயர்த்து வைத்துள்ளனர் எனக் கூறி இப்புகைப்படம் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

நாம் தமிழர் கட்சி ஆதரவாளர் ஏகலைவன் என்பவர், ” தமிழ்நாடு கலை பண்பாடு தமிழ் வளர்ச்சித் துறைக்கு எமது பாராட்டுக்கள். முத்தமிழ் வளர்த்த கலைஞரின் வாரிசு ஆட்சிக்கு படையல் ” எனக் கூறி இப்படத்தை பதிவிட்டு இருக்கிறார்.

இதற்கும் தமிழ்நாடு அரசிற்கும் தொடர்பு இருப்பது போல் தமிழ்நாடு கலை பண்பாடு தமிழ் வளர்ச்சித் துறையையும், முதல்வர் ஸ்டாலினையும் குறிப்பிட்டு பதிவிட்டு இருக்கிறார்.

இதே புகைப்படம் கடந்த சில தினங்களாக,” காசி தமிழ் சங்கத்தில் வழங்கப்பட்ட தண்ணீர் பாட்டில் என்றும், காசி சங்கமத்தில் தமிழ் வளர்த்த லட்சணம் ” எனக் கூறி இப்படத்தை திமுகவினர் சமூக வலைதளங்களில் வைரல் செய்துள்ளனர். இதை திமுகவின் ஐடி விங் செயலாளர் டி.ஆர்.பி ராஜாவும் ட்விட்டரில் பகிர்ந்து இருந்தார்.

உண்மை என்ன ? 

வைரல் செய்யப்படும் தண்ணீர் பாட்டில் தயாரிப்பு எந்த நிறுவனத்தை சேர்ந்தது என அறிந்து கொள்ள தேடிய போது, வைரல் செய்யப்படும் பாட்டிலில் ” பாணி Club HP “ என இடம்பெற்றது மட்டுமே தெரிந்தது.

” பாணி Club HP ” என்பதை வைத்து தேடிய போது, இது ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடெட் எனும் ஒன்றிய அரசு நிறுவனத்தின் தயாரிப்பு என அறிய முடிந்தது.

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் விற்பனைக்கு வந்த தண்ணீர் பாட்டிலில் ” Paani ” , ” பாணி “ எனப் பெயர் இடம்பெற்று இருக்கிறது. இந்த தண்ணீர் பாட்டில்களின் புகைப்படங்கள் தமிழ்நாட்டில் உள்ள மரியா ஏஜென்சி எச்பிசிஎல் டீலர் எனும் முகநூல் பக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதமே பதிவாகி இருக்கிறது. 

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் தண்ணீர் பாட்டில் விற்பனைக் குறித்து தேடுகையில், ” 2021 அக்டோபர் 12ம் தேதி ராஞ்சியில் Paani@Club HP பெயரில் தண்ணீர் பாட்டில் விற்பனையைத் தொடங்கியதாக ” petrolpump.hpretail.in இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது. 

Paani@Club HP என்பது பிராண்ட் பெயரையே குறிக்கிறது. பிராந்திய மொழியில் அதை அப்படியே மொழி மாற்றம் செய்து உள்ளனர். இந்த தண்ணீர் பாட்டில்கள் ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்தின் பெட்ரோல் நிலையங்களில் விற்பனைக்கு உள்ளதாக செய்திகளிலும் வெளியாகி இருக்கிறது. 

Twitter link 

சமூக வலைதளங்களில் கூறியதுபோல், காசி தமிழ் சங்கமத்தில் ” பாணி ” என எழுதப்பட்ட இந்த தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டதாக எனப் பதிவுகள் ஏதும் கிடைக்கவில்லை. அப்படி வழங்கி இருந்தாலும், இந்த தண்ணீர் பாட்டில்கள் ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்தின் தயாரிப்பே.

முடிவு : 

நம் தேடலில், இந்தி மொழியில் தண்ணீர் என்பதை அப்படியே ” பாணி ” என மொழிப்பெயர்த்து உள்ளதாக வைரலாகும் புகைப்படத்தில் இருக்கும் தண்ணீர் பாட்டிலுக்கும் தமிழ்நாடு கலை பண்பாடு தமிழ் வளர்ச்சித் துறைக்கும், தமிழ்நாடு அரசிற்கும் எந்த தொடர்பும் இல்லை.

காசி தமிழ் சங்கமத்தில் வழங்கப்பட்ட தண்ணீர் பாட்டில் எனப் பரவிய இந்த தண்ணீர் பாட்டில் ஒன்றிய அரசு நிறுவனமான ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்தின் தயரிப்பு. அதில், பாணி என்பது பிராண்ட் பெயரைக் குறிக்கிறது என அறிய முடிகிறது.

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button
loader