இனி உங்க வீட்டு BORE தண்ணீருக்கும் காசு கொடுக்கணுமா?

பரவிய செய்தி
வீட்டு உபயோகத்திற்கு “ போர்வெல் “ போட்டு தண்ணீர் எடுத்தாலும் இனி அதற்கும் கட்டணம் : மத்திய அரசு புதிய சட்டம்.
மதிப்பீடு
சுருக்கம்
2019 ஜூன் முதல் ஆழ்குழாய் கிணறு கொண்டு நிலத்தடி நீரைப் பயன்படுத்தும் விவசாயம், பாதுகாப்பு பிரிவுகள் தவிர தொழிற்சாலை, வசிப்பிடங்கள் உள்ளிட்டவை பயன்படுத்தும் நீருக்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டும் என மத்திய நிலத்தடி நீர் ஆணையம் அறிவிப்பு. இதனைப் பற்றி முழுமையாக படித்து தெரிந்து கொள்க.
விளக்கம்
தண்ணீரின் பயன்பாடு அதிகரித்தும், மழையின் அளவு குறைந்ததாலும் நவீனக் கருவிகள் கொண்டு ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து அதிக அளவில் நிலத்தடி நீரை எடுத்து பயன்படுத்தி வருகிறோம்.
இனி ஆழ்துளைக் குழாய் அமைத்து நிலத்தடி நீரை பயன்படுத்தினால் அதற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பை மத்திய நிலத்தடி நீர் ஆணையம் டிசம்பர் 12-ம் தேதி அறிவித்துள்ளது. முதல் முறையாக நிலத்தடி நீரை பிரித்து எடுப்பதற்கு கட்டணம் விதிக்கப்பட உள்ளது. இந்த சட்டம் ஜூன் 1 ,2019-ல் இருந்து செயல்படுத்தப்படும்.
“ இதன்படி, சுரங்கத் தொழில், தண்ணீர் சுத்திக்கரிப்பு, உள்ளிட்ட தொழிற்சாலைகள் மற்றும் தண்ணீர் விற்பனைக்கு இயங்கும் நிறுவனங்கள் கூட அரசிடம் தடையில்லா சான்றிதழை (Non objection certification) பெற வேண்டும். தனிப்பட்ட முறையில் நிலத்தடி நீரை உறிஞ்சி விநியோகம் செய்ய 1″ விட்டம் (Diameter) கொண்ட குழாய்களை கொண்ட வசிப்பிடங்களும் தண்ணீர் பாதுகாப்பு கட்டணம் (WCF-water conservation fees) செலுத்த வேண்டும் மற்றும் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும் “ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய நிலத்தடி நீர் ஆணையம் நிலத்தடி நீர் பயன்படுத்துவதற்கு கட்டணம் விதிப்பது பற்றிய முதல் செய்தி 2017-லேயே வெளியாகி உள்ளது. சென்றே ஆண்டே இதற்கான செயல்முறை தொடங்கியுள்ளது.
யார் யாருக்கு விலக்கு ?
இந்தியாவில் விவசாயம் நிலத்தடி நீரை பெருவாரியாக நம்பி நடைபெறுகிறது. ஆகையால், விவசாயம் சார்ந்தவை, பாதுகாப்பு பிரிவுகள், மின்சார உதவி இன்றி நிலத்தடி நீரை எடுப்பவர்களுக்கு தடையில்லா சான்றிதழ் மற்றும் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
கட்டண விவரம் :
நிலத்தில் இருந்து பிரித்தெடுக்கப்படும் நீரின் அளவை கொண்டு Safe, Semi-critical, critical, over-exploited என பிரித்துள்ளன. அதற்கு ஏற்றவாறு கட்டணம் விதிக்கப்படும். ஒரு நாளைக்கு 20 கன அடி(ஒரு கன அடி – 1000 லிட்டர்) என்ற பாதுகாப்பான அளவை பயன்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு ஒரு கன அடி ரூ3 ஆகும். இதே ஒரு நாளைக்கு விதிக்கப்பட்டவையை விட (over-exploited) அதிக கன அடி நீரை பயன்படுத்தினால் ஒரு கன அடிக்கு ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும்
வீடுகளை பொறுத்தவரையில் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து அதிக நீரைப் பிரித்து எடுப்பது அடுக்குமாடி கட்டிடங்கள், அதிக வீடுகளை கொண்ட கட்டிடங்கள் போன்றவையே.
” 1 விட்டத்திற்கு அதிகமான அளவில் ஆழ்துளை கிணறு இணைப்புகளை கொண்ட வீடுகளுக்கு ஒரு கன அடி(1000 லிட்டர்) நீருக்கு ரூபாய் 2-3 செலுத்த வேண்டும். தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும் “
“ இவ்வாறு பெறப்படும் கட்டணம் தண்ணீருக்கானது அல்ல. இத்தொகையானது நிலத்தடியில் நீரை மீள் நிரப்பும் திட்டங்களுக்கு பயன்படும் “ என மத்திய நிலத்தடி நீர் ஆணையத்தின் தலைவர் கே.சி நாய்க் தெரிவித்து உள்ளார்.
இந்தியாவில் 228BCM(BCM-பில்லியன் கன அடி) நீர் நிலத்தில் இருந்து பிரித்து எடுக்கப்படுகிறது. அவற்றில் பெரும்பாலும் நீர் பாசனத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. 25BCM நீர் மட்டுமே குடிநீர், வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
இது சுற்றுச்சூழல் நன்மைக்கு என சில கருத்துக்கள் கூறப்பட்டாலும் சிறியளவில் அளவில் கட்டணம் கேட்பதாலும் பெரிதாக தெரியாமல் இருக்கலாம். ஆனால் படிப்படியாக கட்டணம் உயர வாய்ப்பு அதிகம் என்பதே இதில் அச்சம் கொள்ள வேண்டியது. வெளிநாடுகளில் நீருக்கு கட்டணம் வசூலிக்கப்படுவது இங்கேயும் பரவலாக வர நேர்ந்தால் கண்டிப்பாக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு என்பதை மறுப்பதற்கில்லை.