பாகிஸ்தான் கொடிக்கும், கட்சிக் கொடிக்கும் வித்தியாசமே தெரியாதா?

பரவிய செய்தி
இது ஏதோ பாகிஸ்தானில் இருக்கும் மாவட்டம் அல்ல. நமது அண்டை மாநிலமான கேரளாவில் இருக்கும் வயநாடு. இது ராகுல் காந்திக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு. பாகிஸ்தான் நாட்டின் கொடியை ஊர்வலத்தில் பயன்படுத்தி உள்ளனர். பரசுராமரின் மண் தற்போது ஜிஹாதிகளின் நிலமாக மாறி வருகிறது.
மதிப்பீடு
சுருக்கம்
காங்கிரஸ் ஊர்வலத்தில், பேரணியில், பிரச்சாரத்தில் முஸ்லீம் லீக் கட்சிகளின் பச்சை நிறக் கொடி பயன்படுத்தப்படும் போது எல்லாம் பாகிஸ்தான் கொடி என வெறுப்புணர்வு பதிவுகள் பதிவிடப்படுகின்றன.
விளக்கம்
2019 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலத்தின் வயநாடு தொகுதியில் போட்டியிடுவதாக மார்ச் 31-ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, காங்கிரஸ் ஆதரவாளர்கள் இச்செய்தியை கொண்டாடி மகிழ்ந்தனர்.
கேரளாவின் வயநாடு தொகுதியில் இருக்கும் இளைஞர் காங்கிரசை சேர்ந்தவர்கள் கொண்டாடிய போது எடுக்கப்பட்ட வீடியோவில் பச்சை நிறத்தில் நட்சத்திரம் பொறித்த கொடியும் இடம் பெற்றுள்ளது.
இதே போன்று, ஆதரவாளர்கள் செல்லும் இடங்களில், ராகுல் காந்தியின் ஊர்வலத்தில் கூட இந்திய தேசியக் கொடியுடன் பச்சை நிறத்தில் பாகிஸ்தான் கொடியும் இடம்பெற்று உள்ளது என சமூக வலைதளங்களில் பகிரப்பட்டன.
பச்சைக் கொடியை கண்டாலே பாகிஸ்தான் நாட்டின் கொடி என வதந்திகளை பரப்பும் நபர்கள் அதிகளவில் இருக்கின்றனர். இந்தியாவில் காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகளின் ஊர்வலத்தில் இடம்பெறும் பச்சை நிறத்திலான கொடிகள் இந்தியன் முஸ்லீம் லீக் கட்சிகளின் கொடியாகும். பாகிஸ்தான் கொடி அல்ல.
கேரளாவில் மக்கள் கைகளில் ஏந்தி இருக்கும் கொடிகள் IMUL கட்சியின் கொடியாகும். இதற்கு முன்பும் கேரளாவில் இதே வதந்தியை பரப்பி இருந்தனர்.
மேலும் படிக்க : கேரள பள்ளிக் குழந்தைகள் குடியரசுத்தினத்தை புறக்கணித்தனரா ?
இந்தியாவில் பாகிஸ்தான் கொடி என பலரும் வதந்திகளை பரப்பி உள்ளனர். நாமும் அதனை வதந்திகள் என நிரூபித்து இருக்கின்றோம். பாகிஸ்தான் கொடியில் பிறை, நட்சத்திரம் உடன் வெள்ளை நிறமும் இடம்பெற்றுள்ளது.
மேலும் படிக்க : பச்சைக் கொடியினாலே பாகிஸ்தான் தானா ? | ராஜஸ்தான் ஊர்வல வதந்திகள்.
எதிர்க் கட்சியில் முஸ்லீம் ஆதரவு கட்சிகள் இருந்தால் அவர்கள் பாகிஸ்தானியர்கள் என சித்தரிக்கும் வலதுசாரிகள் தங்களின் கட்சிக்கு அதரவு அளிக்கும் முஸ்லீம்களை மட்டும் இந்தியர்கள் என குறிப்பிடுகிறார்களா என்ற கேள்வியும் இங்குண்டு.