மேற்கு வங்கத்தில் பாஜக மகளிரணி நிர்வாகி வன்புணர்வு செய்து கொலையென வதந்தி !

பரவிய செய்தி

மேற்குவங்க பாஜக மகளிரணி நிர்வாகி சகோதரி “சரஸ்வதி ஜனா” திரிணாமுல் காங்கிரஸ் ரவுடி கும்பலால் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டார்.

Facebook link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் குண்டர்களால் 20 வயதான கல்லூரி மாணவி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், அப்பெண்ணுக்கு நீதி கேட்டு ஹாஷ்டாக் உடனான பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டு வருகிறது.

Advertisement

சில பதிவுககளில் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண் மேற்கு வங்க பாஜகவின் மகளிரணி நிர்வாகி, பொறுப்பாளர் என்றும், சில பதிவுகளில் பாஜகவிற்கு ஓட்டு போட்டதால் சம்பவம் நிகழ்ந்ததாகவும் குறிப்பிட்டு இருக்கிறார்கள். இதன் உண்மைத்தன்மை குறித்து வாசகர்கள் தரப்பில் கேட்கப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ?

வைரல் செய்யப்படும் பெண்னின் பெயர் மற்றும் சம்பவம் குறித்து தேடுகையில், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அப்பெண்ணிற்காக ஹாஷ்டாக் உடன் பதிவிட்ட பதிவுகளும், வலதுசாரி இணையதள பதிவுகளே காண்பித்தன. முன்னணி நிறுவனங்களின் செய்திகள் ஏதும் காண்பிக்கவில்லை.

மே 4-ம் தேதி ஹிந்துபோஸ்ட் எனும் இணையதளத்தில், ” college student saswati jana (20) raped and killed in west midnapore ” எனும் தலைப்பில் வைரல் செய்யப்படும் சம்பவம் குறித்து வெளியாகி இருந்தது. வேஸ்ட் மித்னபூர் பகுதியில் உள்ள டெப்ரா கல்லுரியில் 2-ம் ஆண்டு படிக்கும் 20 வயதான மாணவி வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது, அந்த பகுதியில் வேலை பார்க்கும் சில தொழிலாளிகளை போலீஸ் விசாரணை காவலில் எடுத்து உள்ளதாகவும் கூறப்பட்டு இருக்கிறது.

Advertisement

கட்டுரையின் இறுதியில் அப்டேட் என, ” கட்டுரையின் முந்தைய பகுதியில் சஸ்வதி ஜனா பலாத்காரம் மற்றும் கொலைக்கு பின்னால் 6 திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள் இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், அந்த கூற்று சரிபார்க்கப்படவில்லை மற்றும் அதற்கேற்ப கட்டுரை புதுப்பிக்கப்பட்டது ” எனக் கூறப்பட்டுள்ளது.

ஆக, அப்பெண்ணை பலாத்காரம் மற்றும் கொலை செய்ததாக முதலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் எனக் குறிப்பிட்டு, பின்னர் மாற்றி இருக்கிறார்கள். மேலும், கட்டுரையில் இறந்த பெண் பாஜகவைச் சேர்ந்தவர் என எங்கும் குறிப்பிடவில்லை.

இறந்த பெண்ணிற்காக போராட்டத்தில் ஈடுபடும் புகைப்படத்தை ரிவர்ஜ் இமேஜ் சேர்ச் செய்கையில், மே 4-ம் தேதி thebengalpost எனும் செய்தி இணையதளத்தில் சம்பவம் குறித்து வெளியாகி இருக்கிறது.

” வெஸ்ட் மித்னாபூர் மாவட்டத்தின் பிங்கலா போலீஸ் நிலையத்திற்கு உட்பட ஜம்னா கிராமத்தில் 20 வயதான கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கிறார். பெண்ணின் உடல் கட்டுமானப் பகுதியில் தொங்கவிடப்பட்டு இருக்கிறது. வேலைக்காக வந்த இரு தொழிலாளர்கள் அதைச் செய்துள்ளனர். அவர்களுக்கு பெண் தொழிலாளியும் உதவி இருக்கிறார். இறந்த பெண்ணிற்கு நீதி கேட்டு நடைபெற்ற போராட்டத்தின் போது, சம்பவம் தொடர்பாக 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படுவார்கள். ஆகையால் போராட்டத்தை கைவிடுமாறு காவல்துறை தரப்பில் கூறப்பட்டது ” என வெளியாகி இருக்கிறது.

இந்த செய்தியில், பாதிக்கப்பட்ட பெண் மற்றும் பலாத்காரம் செய்து கொலை செய்தவர்கள் பெயர், வயது உள்ளிட்ட விவரங்கள் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஆனால், அரசியல் கட்சிகள் சார்ந்த எந்த விவரமும் குறிப்பிடவில்லை. வலதுசாரி இணையதளங்கள் மற்றும் சமூக வலைதள பக்கங்களில் மட்டுமே இறந்த பெண் பாஜகவைச் சேர்ந்தவர் எனக் குறிப்பிட்டு வருகிறார்கள்.

மேலும் படிக்க : மே.வ பாஜக பெண்கள் கூட்டு வன்புணர்வு எனப் பரவும் தகவல் உண்மையில்லை : போலீஸ் விளக்கம் ! 

இதற்கு முன்பாக, மேற்கு வங்கத்தில் பாஜக தேர்தல் முகவர்கள் இருவரை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்ததாக வதந்தி பரவியது. அதற்கு மேற்கு வங்க காவல்துறை விளக்கம் அளித்து இருந்தது.

முடிவு : 

நம் தேடலில், மேற்கு வங்கத்தில் 20 வயது கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அரசியல் உள்நோக்கத்துடன் தவறாக பரப்பி இருக்கிறார்கள்.

இறந்த பெண் பாஜகவை சேர்ந்த மகளிரணி நிர்வாகி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குண்டர்களால் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டதாக சமூக வலைதளங்கள், வலதுசாரி பக்கங்களில் மட்டுமே பரப்பப்பட்டு இருக்கிறது. அம்மாநிலத்தில் நிகழ்ந்த பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை சம்பவத்தை அரசியலுடன் தொடர்படுத்தி இருக்கிறார்கள் என அறிய முடிகிறது.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button