காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கூட்டம் என பழைய புகைப்படத்தை பகிரும் ஆதரவாளர்கள் !

பரவிய செய்தி
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் கம்யூனிஸ்டு & காங்கிரஸ் கூட்டணி சார்பாக நடைபெற்று வரும் தேர்தல் பேரணி மற்றும் பொதுக்கூட்டம்
மதிப்பீடு
விளக்கம்
மேற்கு வங்க மாநிலத்திலும் சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் அரசியல் கட்சிகள் தங்களது பொதுக்கூட்டங்கள், பேரணி என தேர்தல் செயல்பாடுகளை தொடங்கி விட்டன. இந்நிலையில், கொல்கத்தாவில் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிகள் சார்பாக நடைபெற்று வரும் பேரணி மற்றும் பொதுக் கூட்டம் என இவ்விரு புகைப்படங்கள் பகிரப்பட்டு வருகிறது.
2021 பிப்ரவரி 28-ம் தேதி மேற்கு வங்க காங்கிரஸ் எம்எல்ஏ குணால் செளத்ரி என்பவரின் ட்விட்டர் பக்கத்தில் கொல்கத்தா பிரிகேட் மைதானத்தைக் குறிப்பிட்டு பதிவிட்ட புகைப்படங்களில் வைரலாகும் புகைப்படமும் இடம்பெற்று இருக்கிறது. இதை மேற்கு வங்க காங்கிரஸ் ட்விட்டர் கணக்கில் ரீட்வீட் செய்யப்பட்டது.
மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரசிற்கு எதிராக இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்கின்றன. ஆனால், வைரலாகும் இவ்விரு புகைப்படங்களும் சமீபத்தில் எடுக்கப்பட்டவை அல்ல. மேலும், இரண்டும் ஒரே புகைப்படமே. ஒரு புகைப்படத்தில் கலர் பில்டர் செய்யப்பட்டு இருக்கிறது.
அப்புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2019 பிப்ரவரி 10-ம் தேதி People Democracy எனும் இணையதளத்தில் இப்புகைப்படம் வெளியாகி இருக்கிறது. 2019ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்பாக கொல்கத்தாவின் பிரிகேட் மைதானத்தில் இடது முன்னணி பேரணி நடைபெற்ற போது எடுக்கப்பட்ட புகைப்படம் என alamy தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீபத்தில் கொல்கத்தாவின் பிரிகேட் பரேட் மைதானத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் மற்றும் புதிதாக அமைக்கப்பட்ட இந்திய மதச்சார்பற்ற முன்னணி சார்பில் பெரும் கூட்டம் கூடியது. ஆனால், இந்த புகைப்படம் 2 ஆண்டுகளுக்கு முன்பாக அதே மைதானத்தில் நடந்த மற்றொரு இடதுசாரி பேரணி கூட்டத்தின் போது எடுக்கப்பட்டது.
முடிவு :
நம் தேடலில், கொல்கத்தாவில் கம்யூனிஸ்டு & காங்கிரஸ் கூட்டணி சார்பாக நடைபெற்று வரும் தேர்தல் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் என வைரலாகும் புகைப்படங்கள் 2 ஆண்டுகளுக்கு முன்பு கம்யூனிஸ்ட் கட்சியின் பேரணியின் போது எடுக்கப்பட்ட பழைய புகைப்படம் என அறிய முடிகிறது.