மேற்கு வங்கத்தில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷம் எழுப்பியதாக பரவும் வதந்தி வீடியோ !

பரவிய செய்தி
திரிமுணால் காங்கிரஸ் வெற்றி விழாவில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷம்..
மதிப்பீடு
விளக்கம்
மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி விழாவில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் எனும் கோஷத்தை எழுப்பியதாக மேற்காணும் 1.21 நிமிட வீடியோ சில நாட்களுக்கு முன்பாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு இருக்கிறது.
மேலும், ” மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் 31 ரோஹிங்கியாக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கும் பேரணியில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷத்தை எழுப்பியதாக ” அதே வீடியோ இந்திய அளவில் பரப்பப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
மேற்கு வங்கத்தில் வெற்றி பெற்ற ரோஹிங்கியாக்களோ அல்லது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரே எதற்காக பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷத்தை எழுப்ப வேண்டும். அதேபோல், மேற்கு வங்கத்தில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷத்தை எழுப்பியதாக எந்த செய்திகளும் இல்லை.
வைரல் செய்யப்படும் வீடியோவில் 40-வது நொடியில், கூட்டத்தில் இருப்பவர்கள் ஓரிடத்தில் நிற்கையில் ” ஹாஜி சாப் ஜிந்தாபாத் ” என கோஷமிடுது தெளிவாய் கேட்கிறது.
இதை வைத்து தேடுகையில், ” உத்தரப் பிரதேசத்தின் பஹ்ரைச் பகுதியில் நடைபெற்ற கிராம பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்ற ஹாஜி அப்துல் கலீம் என்பவருக்காக நடைபெற்ற வெற்றி ஊர்வலத்தில் ஹாஜி சாப் ஜிந்தாபாத் கோஷம் எழுப்பப்பட்டதாகவும், அந்த வீடியோ வைத்து சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவுவதாகவும் amarujala எனும் இணையதளத்தில் 2021 மே 5-ம் தேதி வெளியாகி இருக்கிறது.
#bahraichpolice के रूपईडीहा थाना क्षेत्र में नवनिर्वाचित प्रधान के विजय जुलूस में लगाए गए नारों को भ्रामक तरीके से कुछ व्हाट्सएप ग्रुप व #सोशल_मीडिया प्लेटफार्म पर प्रचारित किया जा रहा है,उक्त वायरल खबर का @bahraichpolice पूरी तरह से खंडन करती है।@Uppolice @News18UP @News18India pic.twitter.com/Ka3QFT7rjw
— BAHRAICH POLICE (@bahraichpolice) May 6, 2021
மே 6-ம் தேதி பஹ்ரைச் போலீஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ” உண்மை என்னவென்றால், வெற்றி ஊர்வலத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டவரின் ஆதரவாளர்கள் ” ஹாஜி சாப் ஜிந்தாபாத் ” என்ற முழக்கத்தை மட்டுமே எழுப்பினர், பாகிஸ்தான் ஜிந்தாபாத் அல்ல” எனப் பதிவிட்டு உள்ளார்கள்.
முடிவு :
நம் தேடலில், மேற்கு வங்க தேர்தலில் வெற்றிப் பெற்றவர்கள் நடத்திய ஊர்வலத்தில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷம் எழுப்பியதாக பரவும் வீடியோவில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷமிடவில்லை, ஹாஜி சாப் ஜிந்தாபாத் என்றே முழக்கமிட்டுள்ளனர். மேலும், இந்த வீடியோ எடுக்கப்பட்டது மேற்கு வங்கம் அல்ல, உத்தரப் பிரதேசம்.
ஆனால், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ், ரோஹிங்கியா முஸ்லீம்கள் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷமிட்டதாக வதந்திகளை தொடர்ந்து பரப்பி வருகிறார்கள் என அறிய முடிகிறது.