மேற்கு வங்கத்தில் இந்து பெண்களின் நிலை எனப் பரவும் உத்தரப் பிரதேசத்தின் பழைய வீடியோ!

பரவிய செய்தி
மேற்கு வங்கத்தில் நம்பர் 1 முட்டாள் மம்தா பானர்ஜி முதலமைச்சராக இருக்கும் நமது இந்து பெண்களின் நிலை இதுதான். ரோஹிங்காக்கள் சம்பந்தப்பட்ட இடத்தில் சட்டம் ஒழுங்கு இல்லை என்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. தயவு செய்து இந்த வீடியோவை அதிகபட்ச மக்கள் மற்றும் குழுவிற்கு அனுப்பவும்.
மதிப்பீடு
விளக்கம்
மியான்மரில் பல்லாயிரக்கணக்கான ரோஹிங்கா முஸ்லீம் மக்கள் 2015 ஆம் ஆண்டில் ஏற்பட்ட மதவெறி வன்முறைகள் காரணமாக தங்கள் கிராமங்களில் இருந்து வலுக்கட்டாயமாக இடம்பெயர்த்தப்பட்டனர். இதன் காரணமாக அருகிலுள்ள பல அண்டை நாடுகளுக்கு சென்றவர்களில் பலர் வங்காளதேசம் வழியாக, மேற்கு வங்கம் மாநிலத்திற்கும் வந்தனர்.
இந்நிலையில் தற்போது மேற்கு வங்காளத்தில் ரோஹிங்கா மக்கள் சம்பந்தப்பட்ட இடத்தில் இந்து பெண்கள் பாலியல் ரீதியாக தாக்கப்படுவதாகக் கூறி முதல்வர் மம்தா பானர்ஜியின் ஆட்சியை விமர்சித்து வீடியோ ஒன்று பாஜகவினரால் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரப்பப்படுகிறது.
மேற்கு வங்கத்தில் நம்பர் 1 முட்டாள் மம்தா பானர்ஜி முதலமைச்சராக இருக்கும் நமது இந்து பெண்களின் நிலை இதுதான். ரோஹிங்காக்கள் சம்பந்தப்பட்ட இடத்தில் சட்டம் ஒழுங்கு இல்லை என்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. pic.twitter.com/lAgpvR2pC6
— T. Ravikumar (@TRaviku49546497) May 7, 2023
மேற்கு வங்கத்தில் நம்பர் 1 முட்டாள் மம்தா பானர்ஜி முதலமைச்சராக இருக்கும் நமது இந்து பெண்களின் நிலை இதுதான். ரோஹிங்காக்கள் சம்பந்தப்பட்ட இடத்தில் சட்டம் ஒழுங்கு இல்லை என்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.
வாட்ஸ் அப் பதிவு* pic.twitter.com/8kfRxf4iVj— SAKTHIVEL 🚩🇮🇳 (@Sakthiv03251043) May 18, 2023
உண்மை என்ன ?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், 2017 மே 28 அன்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் இந்த வீடியோவின் காட்சிகளில் உள்ள புகைப்படங்களைக் குறிப்பிட்டு செய்திகளை வெளியிட்டிருந்ததைக் காண முடிந்தது.
அதில் “உத்தரப் பிரதேசத்தில் உள்ள ராம்பூரில் சுமார் 12 முதல் 14 பேர்களைக் கொண்ட கூட்டம் இரு பெண்கள் பாலியல்ரீதியாக துன்புறுத்தியுள்ளனர். உத்தரப் பிரதேசத்தில் பெண்களின் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட ஆன்டி-ரோமியோ படைகளை அமைத்த யோகி ஆதித்யநாத்தின் தோல்வியையே இது அம்பலப்படுத்துகிறது” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் இதுகுறித்து தேடியதில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டது குறித்து இந்தியா டுடே ஊடகம் 2017 மே 30 அன்று வீடியோ வெளியிட்டுள்ளது.
மேலும் Mid-day ஊடகம் 2017 மே 29 அன்று வெளியிட்டுள்ள கட்டுரையில் “உத்தரப் பிரதேசத்தில் உள்ள ராம்பூரின் வனப்பகுதிக்கு அருகே 14 ஆண்கள் பெண்களை பாலியல்ரீதியாக துன்புறுத்தியதோடு, அந்த நபர்களே அந்த காட்சிகளை படம்பிடித்து சமூக ஊடகங்களில் பதிவேற்றியுள்ளனர். சம்பந்தப்பட்ட நபர்களை நாங்கள் அடையாளம் கண்டுவிட்டோம். முக்கிய குற்றவாளி ஷா நவாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். நாங்கள் அவரை விசாரித்து வருகிறோம், மீதமுள்ளவர்களும் கைது செய்யப்படுவார்கள்.” என்று ராம்பூரின் காவல்துறை கண்காணிப்பாளரான விபின் தடா தெரிவித்துள்ளார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: உத்திரப் பிரதேசத்தில் கும்பல் ஒன்று காவல் துறையினரைத் தாக்குவதாகப் பரப்பப்படும் மேற்குவங்க வீடியோ !
இதற்கு முன்பும் உத்தரப் பிரதேசத்தில் கும்பல் ஒன்று காவல் துறையினரைத் தாக்குவதாகக் கூறி மேற்கு வங்கத்தின் வீடியோ தவறாகப் பரப்பப்பட்டது. இதன் உண்மைத் தன்மை குறித்து யூடர்ன் கட்டுரை வெளியிட்டது.
முடிவு :
நம் தேடலில், மேற்கு வங்க மாநிலத்தில் இந்து பெண்கள் பாலியல்ரீதியான துன்புறுத்தப்படுவதாகப் பாஜகவினரால் பரப்பப்பட்டு வரும் வீடியோ மேற்கு வங்கத்தைச் சேர்ந்தது அல்ல. அது 2017ல் உத்தரப் பிரதேசத்தில் நடந்த சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பதையும் அறிய முடிகிறது.