மேற்கு மாம்பலத்தில் கோட்சே சிலை அமைக்கப்படும் என்றாரா உமா ஆனந்தன் ?

பரவிய செய்தி
பதவி ஏற்றதும் முதல் வேலை இதுதான். மேற்கு மாம்பலத்தில் தேசபக்தர் கோட்சேவிற்கு சிலை எழுப்பப்படும். மேற்கு மாம்பலம் பாஜக வெற்றி வேட்பாளர் உமா ஆனந்தன் அறிவிப்பு.
மதிப்பீடு
விளக்கம்
சென்னை மாநகராட்சியின் மேற்கு மாம்பலம் 134-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர் உமா ஆனந்தன் வெளிப்படையாக தன்னை கோட்சே ஆதரவாளர் எனக் கூறி இருக்கிறார். தற்போது வார்டு உறுப்பினராக வெற்றி பெற்றதால் மேற்கு மாம்பலம் பகுதியில் கோட்சேவிற்கு சிலை அமைக்கப்படும் எனக் கூறியதாக நியூஸ் கார்டு ஒன்று சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது.
உண்மை என்ன ?
பாஜகவைச் சேர்ந்த உமா ஆனந்தன், மேற்கு மாம்பலத்தில் கோட்சேவிற்கு சிலை அமைக்கப்படும் எனக் கூறியதாக எந்த செய்திகளும் வெளியாகவில்லை. இதுகுறித்து கதிர் நியூஸ் உடைய நியூஸ் கார்டு மட்டுமே வைரல் செய்யப்படுகிறது. கதிர் நியூஸ் இணையதளம் பாஜகவைச் சேர்ந்தவரால் நடத்தப்பட்டு வருகிறது.
உமா ஆனந்தன் தேர்தல் வெற்றி தொடர்பாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது கோட்சே குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, ” சர்ச்சைக்கு இடமளிக்க வேண்டாம், அதற்கு தனியாக தான் நான் ஒரு பேட்டி கொடுக்கணும். அது 3, 4 வருடங்களுக்கு முன்பாக கொடுத்த பேட்டி. அதுகுறித்து இப்போது பேச விரும்பவில்லை. ஆக்கப்பூர்வமாக செயல்பட விரும்புகிறேன் ” என பதில் அளித்து இருந்தார்.

கதிர் நியூஸ் இணையதளத்தில் உமா ஆனந்தன் குறித்து அப்படி எந்த செய்தியும் வெளியாகவில்லை. போலியான செய்தியை நியூஸ் கார்டில் எடிட் செய்து இருக்கிறார்கள். இந்த செய்தியை நாங்கள் வெளியிடவில்லை என கதிர் நியூஸ் பக்கமும் மறுத்து உள்ளது.
.
மேலும் படிக்க : பாஜக வேட்பாளர் உமா ஆனந்தன் 8 ஓட்டு மட்டுமே வாங்கியதாக வதந்தி !
.
இதற்கு முன்பாக, பாஜக வேட்பாளர் உமா ஆனந்தன் வெறும் 8 ஓட்டு மட்டுமே வாங்கி படுதோல்வி அடைந்ததாக தவறான செய்திகள் வெளியாகி ஊடகங்கள், சமூக வலைதளங்கள் வரை வைரலாகியது. ஆனால், அவர் அந்த வார்டில் வெற்றி பெற்றார் என அறிவிக்கப்பட்டது.
.
முடிவு :
நம் தேடலில், சென்னை மாநகராட்சியின் 134வது வார்டில் வெற்றி பெற்ற பாஜகவின் உமா ஆனந்தன் மேற்கு மாம்பலத்தில் கோட்சேவிற்கு சிலை அமைக்கப்படும் எனக் கூறியதாக பரவும் செய்தி போலியானது என அறிய முடிகிறது.