வாட்ஸ்அப் டிபி-யை ஐஎஸ்ஐஎஸ், சீனா ஹக் செய்வதாக ஃபார்வர்டு வதந்தி!

பரவிய செய்தி
யாருடைய தாய், சகோதரியாவது தங்களின் புகைப்படத்தை வாட்ஸ்அப் டிபி-யில் வைத்து இருந்தால் உடனே மாற்ற சொல்லுங்கள். ஏனெனில், ஐஎஸ்எஸ் மற்றும் சீனாவில் இருந்து ஹக்கேர்ஸ் உங்களின் வாட்ஸ்அப் தகவல்கள் மற்றும் எண்ணை வைத்து உள்ளார்கள். அவர்கள் உங்களின் புகைப்படத்தை ஆபாச படங்களாக மாற்றக்கூடும். சில நாட்களுக்கு உங்களின் புகைப்படத்தை வைக்க வேண்டாம் என வாட்ஸ் அப் சிஇஓ கோரிக்கை வைத்துள்ளார். முடிந்தவரை இந்த செய்தியை பகிருங்கள். குறிப்பாக உங்களுக்கு தெரிந்து இளம் பெண்களுக்கு.. நன்றி ஏ.கே மிட்டல்(ஐபிஎஸ்) டெல்லி கமிஷனர் (9849436632)
மதிப்பீடு
விளக்கம்
வாட்ஸ்அப்-ல் வைக்கப்படும் புகைப்படத்தை ஐஎஸ்ஐஎஸ் ஹக் செய்வதாக வைரல் செய்யப்படும் தகவல் இன்று நேற்று அல்ல கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பில் இருந்தே பரவி வருகிறது. ஆம், கடந்த 2016-ல் இதே வதந்தி சமூக வலைதளங்களில் பரவி இருந்துள்ளது. 2016 ஜூலை 5-ம் தேதி இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளத்தில் இந்தி உள்ளிட்ட மொழியில் பரவிய வதந்தி குறித்து செய்தி வெளியிட்டு உள்ளனர்.
வைரல் செய்யப்படும் வதந்தி தகவலின் இறுதியில் டெல்லி போலீஸ் கமிஷனர் ஏ.கே மிட்டல் கூறியதாக இடம்பெற்று உள்ளது. கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து அமுல்யா பட்நாயக் என்பவரே டெல்லி கமிஷனராக இருந்துள்ளார். அதில் குறிப்பிடப்பட்டுள்ள தொடர்பு எண்ணும் அஷ்ரத் அலி என்பவருக்கு சொந்தமானது.
டெல்லி போலீஸ் கமிஷனர் தரப்பிலோ அல்லது வாட்ஸ் அப் தரப்பில் இருந்தோ இதுபோன்ற எந்தவொரு எச்சரிக்கை அறிக்கையும் வெளியாகவில்லை. கடந்த 2016-ல் பரவிய வதந்தி செய்தியுடன் சீனாவின் பெயரையும் இணைத்து மீண்டும் மீண்டும் வதந்தியைப் பரப்பி வருகிறார்கள்.
மேலும் படிக்க : தமிழகத்தில் ஐ.எஸ் அமைப்பால் ஹெச்.ஐ.வி வைரஸ் பரப்பப்படுகிறதா ?
இதற்கு முன்பாக, வீட்டிற்கு வந்து இரத்த பரிசோதனை செய்வதாக ஐஎஸ்ஐஎஸ் தரப்பில் இருந்து வரும் நபர்கள் எச்.ஐ.வி வைரசை செலுத்தி விடுவதாக வாட்ஸ்அப் வதந்தியை பரப்பி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி வாட்ஸ்அப் ஃபார்வர்டு வதந்திகள் தொடர்ந்து பரப்பப்பட்டு வருவதால் உண்மைத்தன்மை தெரியாமல் மக்கள் எதனையும் பகிர வேண்டாம். அச்சம் கொள்ள தேவையில்லை.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.