வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மூலம் சம்பாதிக்கலாம் என பரவும் மோசடி !

பரவிய செய்தி
உங்கள் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் 30-க்கும் மேற்பட்டவர்களால் பார்க்கப்படுகிறதா ? அப்படியென்றால் நீங்களும் தினமும் 500 ரூபாய் வரை சம்பாதிக்கலாம் ! Register Now :
www.tamilonline.work/?join #parttimejob #tamilonlinework #verified
மதிப்பீடு
விளக்கம்
நீங்கள் வாட்ஸ் அப்-பில் வைக்கும் ஸ்டேட்டஸ் 30 பேருக்கு மேல் பார்வைகளை பெற்றால் ஒரு நாளைக்கு 500 ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என கடந்த சில நாட்களாக ஓர் ஃபார்வர்டு தகவல் வாட்ஸ் அப் உள்ளிட்டவையில் பரவி வருகிறது. இதை உண்மை என நினைத்து பலரும் தங்களின் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்களில் அந்த ஃபார்வர்டு செய்தியை பதிவிட்டு வந்தனர்.
இணைய வழியில் சம்பாதிக்கலாம் மற்றும் இலவசமாக இன்டர்நெட், போன், லேப்டாப் அளிப்பதாக பரவிய மோசடி ஃபார்வர்டு செய்திகளில் இதுவும் ஒன்றாகும். கொடுக்கப்பட்ட லிங்கில் சென்று பார்க்கையில், தமிழில் தகவல்கள் அளிக்கப்பட்டு இருந்தன.
கொடுக்கப்பட்ட நிபந்தனைகள் :
- உங்கள் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்க்கு கிடைத்திருக்கும் வியூஸ்களை ஸ்க்ரீன்ஷார்ட் எடுத்து கேட்கப்படும் போது அனுப்ப வேண்டியிருக்கும்.
- ஸ்டேட்டஸ்க்கு 30-க்கும் குறைவான வியூஸ்களைப் பெறும் பயனர்கள் சேர்வதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
- ஒரு நாளில் உங்கள் ஸ்டேட்டஸில் 20 விளம்பரங்கள் ஷேர் வரை செய்யலாம்
- கூகிள் பே, ஃபோன்பே, பே டி எம் மூலமாக மட்டுமே பணம் எடுக்க நாங்கள் அனுமதிக்கிறோம். பே அவுட் ஒவ்வொரு சனிக்கிழமையும் நடைபெறும்
– எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது. போலியான இணையதளத்தை உருவாக்கி மக்களிடம் ஆசையைக் காட்டி பின்னர் உங்களின் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் வங்கி விவரங்களைப் பெற்று மோசடியில் சிக்க வைக்கிறார்கள்.
தென்காசி மாவட்ட போலீஸ் முகநூல் பக்கத்தில், ” காவல்துறை எச்சரிக்கை!!
உங்கள் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் 30 நபர்களுக்கு மேல் பார்ப்பதன் மூலம் தினமும் ரூபாய் 500 வரை சம்பாதிக்கலாம் என்று உங்களின் தொலைபேசி எண் மூலம் அந்த பக்கத்தில் கணக்கு தொடங்க வைத்து,மேலும் நீங்கள் இதன் மூலம் பெறும் பணத்தை கூகுள் பே, போன் பே மூலமாகத்தான் பெற முடியும் என்று கூறி உங்களின் வங்கி தகவல்களை பெற்று அதன் மூலம் உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை திருடும் புதியவகை மோசடி கும்பல் தற்போது வாட்ஸ்அப் மூலம் பரவி வருகிறது. எனவே மக்கள் இதுபோன்ற மோசடி வேலை செய்யும் நபர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவும்!! ” என ஃபார்வர்டு லிங்க் குறித்து எச்சரித்து உள்ளனர்.
வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைப்பதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என பரவிய ஃபார்வர்டு செய்தி தமிழ்நாட்டில் மட்டுமின்றி கேரளாவிலும் அவர்களுக்கு ஏற்ப மலையாள மொழியில் வைரலாகி இருந்தது. இதுபோன்ற மோசடியில் சிக்க வேண்டாம் என கேரள போலீஸ் முகநூல் பக்கத்தில் தெரிவித்து உள்ளது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.