கேன்சர் பாதித்த ஆட்டு இறைச்சி எனப் பரவும் வாட்ஸ் அப் ஃபார்வர்டு| உண்மை என்ன ?

பரவிய செய்தி

ஆட்டு கறி மீது வெள்ளை புள்ளி போன்று காணப்படும் இது கேன்சர் பாதிக்கப்பட்ட மாமிசம் இதை வாங்க வேண்டாம். நம் உடலுக்கு கேடு விளைவிக்கும். பகிரவும். வாட்ஸ்அப் பதிவு.

மதிப்பீடு

விளக்கம்

வெள்ளை புள்ளிகள் இருக்கும் இறைச்சியின் புகைப்படத்தை காண்பித்து, இது கேன்சர் பாதித்த ஆட்டிறைச்சி, இதை சாப்பிட்டால் உடலுக்கு பாதிப்பு ஏற்படும் என பரவும் வாட்ஸ் அப் ஃபார்வர்டை பகிர்ந்த ஃபாலோயர் இதன் உண்மைத்தன்மையைக் கூறுமாறு கேட்டு இருந்தார்.

Twitter link | Archive link 

பரப்பப்படும் இறைச்சியின் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், ” இறைச்சியில் வெள்ளை புள்ளிகள் காணப்பட்டால், இது விலங்குகளின் காசநோய்(டிபி) பாதிப்பால் ஏற்பட்டது என எச்சரிக்கை உடன் 2018-ல் சர்வதேச அளவில் பரவிய ஃபார்வர்டு தகவல்கள் கிடைத்தன.

பல மொழிகளில், பல நாடுகளில் இறைச்சியில் காணப்படும் வெள்ளை புள்ளிகள் காசநோயால் ஏற்படுவதாக இதே புகைப்படம் வைரலாக்கப்பட்டு உள்ளது.

உண்மை என்ன ? 

இதுகுறித்து மருத்துவர் பிரவீன் அவர்களிடம் கேட்ட போது, ” இறைச்சியில் வெள்ளை புள்ளிகள் பேசிலி(பாக்டீரியா) உடைய அறிகுறிகளாகும். சில நேரங்களில், புழு கொண்ட சிறிய நீர்க்கட்டிகளையும் மாட்டிறைச்சி அல்லது பன்றி இறைச்சியில் காணலாம். இவை புழு அல்லது பாக்டீரியாவினால் ஏற்படும் தொற்று. இதை முறையாக சமைப்பதன் மூலம் அழிக்கலாம். சரியாக சமைக்கும்பட்சத்தில் அது தொற்றுநோயை ஏற்படுத்தாது.

மேலும், புற்றுநோய் செல்களை சாப்பிடுவதன் மூலம் புற்றுநோய் பரவாது. புற்றுநோயானது சொந்த மரபணு மாற்றத்தால் ஏற்படும். புற்றுநோயை சாப்பிடுவது புற்றுநோயை ஏற்படுத்தாது ” எனப் பதில் அளித்து இருந்தார்.

பிற நாடுகளில் இறைச்சியில் இருந்த வெள்ளைப் புள்ளிகளை காசநோய் எனக் குறிப்பிட்டு உள்ளனர். உலக சுகாதார அமைப்பு மற்றும் பல சர்வதேச சுகாதார குழுக்களின் அறிக்கையின்படி, ” மைக்கோ பாக்டீரியம் மற்றும் எம்.போவிஸ் ஆகிய இரண்டு வகையான பாக்டீரியாக்கள் மனிதர்களில் காசநோயை ஏற்படுத்துகின்றன.

இதில், எம்.போவிஸ் அசுத்தமான பால் மற்றும் வெப்ப சிகிச்சைக்கு உட்படுத்தாத பிற பால் பொருட்களை உண்ணும் போது பரவுகிறது. மேலும், முறையாக சமைக்காத இறைச்சியை உண்ணும் போதும் மனிதர்களுக்கு பரவுகிறது.

காட்டு மான் உடைய இறைச்சியில் bovine tuberculosis தொற்றில் இருந்து ஏற்பட்ட புண்களைப் புகைப்படத்தில் காணலாம். ஆனால், இறைச்சியை முறையாக சமைப்பதன் மூலம்  தொற்றை பாதிப்பை நீக்கலாம் என வல்லுநர்கள், மருத்துவர்கள் கூறுகின்றனர்.

வைரலாகும் புகைப்படத்தை  அழுகிய இறைச்சி எனக் குறிப்பிட்டு 2017-ம் ஆண்டில் அரபிக் மொழி இணையதளமான EL Balad நியூஸ் வெளியிட்டு இருக்கிறது. கேன்சர், காசநோய் பாதித்த இறைச்சி எனக் குறிப்பிடவில்லை.

முடிவு : 

நம் தேடலில், ஆட்டு கறி மீது வெள்ளை புள்ளி போன்று காணப்படும் இது கேன்சர் பாதிக்கப்பட்ட மாமிசம் என பரவும் தகவல் தவறானது. இப்புகைப்படம் சில ஆண்டுகளாக காசநோய், புழுக்கள், அழுகிய இறைச்சி என பல மொழிகளில் சுற்றி வருகிறது என்பதையும் அறிய முடிந்தது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button