கொரோனா ஒரு பருவகால வைரஸ் என WHO யு-டர்ன் அடித்ததாக பரவும் வீடியோ| உண்மை என்ன ?

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
கொரோனா வைரஸ் ஒரு பருவகால வைரஸ், சமூக இடைவெளி தேவையில்லை, தனிமைப்படுத்துதல் தேவையில்லை என உலக சுகாதார அமைப்பு யு-டர்ன் அடிப்பதாக சில மருத்துவர்கள் இணைந்து அளிக்கும் பேட்டியின் வீடியோ வாட்ஸ்அப், சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டு வருகிறது.
இவ்வீடியோவின் 4 நிமிட பகுதி கடந்த ஆண்டு அக்டோபர் மாதமே உலக அளவில் வைரலாகி இருக்கிறது. அதே வீடியோ தற்போது மீண்டும் பரவிக் கொண்டிருக்கிறது. இதன் உண்மைத்தன்மை குறித்து பதிவிடுமாறு வாசகர்கள் தரப்பில் கேட்கப்பட்டு வருகிறது.
கூற்றுகள் :
1.WHO முழுமையாக யு-டர்ன் அடித்துள்ளது. கொரோனா நோயாளிகள் தனிமைப்படுத்தப்பட தேவையில்லை, சமூக இடைவெளியும் தேவையில்லை.
2.கோவிட்-19 பெருந்தொற்று இல்லை.
3.கொரோனா வைரஸ் ஒரு சாதாரண காய்ச்சல் வைரஸ்
4.தவறான பாசிடிவ் பிசிஆர் சோதனை
5.மாஸ்க் மற்றும் தடுப்பூசி தேவையில்லை.
உண்மை என்ன ?
1.WHO முழுமையாக யு-டர்ன் அடித்துள்ளது. கொரோனா நோயாளிகள் தனிமைப்படுத்தப்பட தேவையில்லை, சமூக இடைவெளியும் தேவையில்லை ?
4 நிமிட வீடியோவில் முதலில் பேசும் பெண்ணின் பெயர் எல்கேடி கிளார்க், பொது மருத்துவர் & Doctors for Truth உடைய நிறுவனர் எனக் கூறப்பட்டு இருக்கிறது. அவரைக் குறித்து தேடுகையில், ” World Doctors Alliance ” எனப்படும் சுகாதார வல்லுநர்களின் குழுவில் உறுப்பினராக இருப்பதையும், வீடியோவில் உள்ளவர்களும் அந்த குழுவின் உறுப்பினர்கள் என அறிய முடிந்தது.
World Doctors Alliance ஆனது உலகில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார வல்லுநர்கள் மற்றும் ஊழியர்களை கொண்ட ஒரு என்.ஜி.ஓ குழு மட்டுமே, WHO உடைய குழு அல்ல.
உண்மையில் உலக சுகாதார அமைப்பு, அறிகுறியற்ற மக்கள் கூட தனிமைப்படுத்தப்பட வேண்டும் எனக் கூறுகிறது. அவர்கள் வைரஸைப் பரப்பலாம். ஆகையால், மாஸ்க் அணிவதும், சமூக இடைவெளியை பின்பற்றுவதும் பரவுவதை கட்டுப்படுத்துவதில் மிகவும் முக்கியமானது எனக் கூறி வருகிறது.
2. கோவிட்-19 பெருந்தொற்று இல்லையா ?
உலக சுகாதார அமைப்பு ஆனது பன்டேமிக் என்பதை ” உலகளாவிய பரவலை கொண்ட புதிய நோய் ” என வரையறுக்கிறது. கோவிட்-19 தொற்றானது உலக அளவில் தன்னுடைய 2வது அலையை தொடங்கி பல உயிர்களை பலி கொண்டது. உலகின் பல நாடுகள் கோவிட்-19 தொற்று நோயை சமாளித்தாலும், இந்தியாபோன்ற நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.
3. கொரோனா வைரஸ் ஒரு சாதாரண காய்ச்சல் வைரஸ் ?
கொரோனா வைரஸ் ஒரு சாதாரண காய்ச்சல் வைரல் அல்ல. உலக சுகாதார அமைப்பின் கூற்றின்படி, ” கொரோனா வைரஸ்கள் என்பது ஒரு வகையான வைரஸ் குடும்பம். சாதாரண சளி முதல் மெர்ஸ், சார்ஸ் போன்ற கடுமையான நோய்களை ஏற்படுத்துகின்றது.
இதற்கு முன்பாக கண்டறியப்படாத கோவிட்-19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் பாதித்தவர்களால் இறப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. குறிப்பாக, இந்தியாவில் கோவிட்-19 உடைய இரண்டாம் அலையால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து இருக்கிறார்கள். ஆக்சிஜன் சேவை கிடைக்காமல் மக்கள் இறந்த அவலம் இங்கு நிகழ்ந்து இருக்கிறது.
4. தவறான பாசிடிவ் பிசிஆர் சோதனை ?
மருத்துவர் எல்கே டி கிளெர்க் ” பி.சி.ஆர் சோதனையில் 89 முதல் 94% தவறான பாசிடிவ் வருவதாகக் கூறுவது தவறானது.
மூக்கு மற்றும் தொண்டையில் இருந்து எடுக்கப்படும் மாதிரியில் SARS COV 2-ஜக் கண்டறிய ஆர்டி-பிசிஆர் உடைய தனித்தன்மை 98% ஆகும். அதாவது 100 மாதிரிகளில் 2 மாதிரிகளில் மட்டுமே தவறான பாசிடிவ் முடிவுகளை கொடுக்கும் என மருத்துவர் நிகேத் ராய் கூறியது நியூஸ் 18 செய்தியில் இடம்பெற்று இருக்கிறது. கடந்த ஆண்டில் இருந்தே கோவிட்-19 மாதிரி சோதனையில் ஆர்டி-பிசிஆர் தொடர் பயன்பாட்டில் இருந்து வருகிறது.
5. மாஸ்க் மற்றும் தடுப்பூசி தேவையில்லை ?
மாஸ்க் அணிவது, ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு தொற்று பரவுவதலை கட்டுப்படுத்தவே. அதேபோல், தடுப்பூசி ஆனது தொற்றுநோய்க்கான வாய்ப்புகளை குறைக்கின்றன அல்லது அறிகுறிகளின் தீவிரத்தை குறைக்கின்றன மற்றும் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புகள் குறைவு.
உலக அளவில் கோவிட்-19 தொற்றுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மேலும் படிக்க : மாஸ்க் ஆக்சிஜன் அளவை தடுக்குமா ?- ICMR Scientist நேர்காணல் !
மாஸ்க் மற்றும் தடுப்பூசி தொடர்பான வதந்திகள் மற்றும் தவறான தகவல் குறித்து நாம் முன்பே தெளிவுப்படுத்தி வெளியிட்டு இருக்கிறோம். மாஸ்க் அணிவது மற்றும் தடுப்பூசி தேவை குறித்து ஐசிஎம்ஆர் விஞ்ஞானி கணேஷ் குமார் யூடர்னுக்கு அளித்த நேர்காணலை காணலாம்.
முடிவு :
நம் தேடலில், உலக சுகாதார அமைப்பு யு-டர்ன் அடித்ததாக வைரல் செய்யப்படும் 4 நிமிட வீடியோவில் இருப்பவர்கள் உலக சுகாதார அமைப்பின் மருத்துவர்கள் குழு அல்ல.
இந்த வீடியோ கடந்த ஆண்டிலேயே வெளியாகி உலகம் முழுவதும் பரவி இருக்கிறது. அந்த வீடியோவில் கூறப்படும் தகவல்கள் தவறானவை என ஒன்றன்பின் ஒன்றாக கடந்த கால நிகழ்வுகளின் அடிப்படையில் உறுதிப்படுத்த முடிகிறது.