காந்திக்கு ‘மகாத்மா’ என்ற பட்டத்தைப் பிரிட்டிஷ்காரர்கள் அளித்ததாகப் பரப்பப்படும் பொய் !

பரவிய செய்தி
மோகன்தாஸ் காந்தியை ‘மகாத்மா காந்தி’ என்று அழைக்க வைத்தது யார்? இந்திய குடிமக்கள் என்று நீங்கள் யூகித்திருந்தால் நீங்கள் தவறாக நினைக்கிறீர்கள். இது இன்னொரு பிரிட்டிஷ் மோசடியாகும். சாச்சா நேருவைப் போல ஏன் இவர் உச்சத்திற்கு உயர்த்தப்பட்டார் என்பது இப்போது உங்களுக்குத் தெரியும்.
மதிப்பீடு
விளக்கம்
மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, ‘மகாத்மா காந்தி’ என மரியாதை நிமித்தமாக இந்தியர்களால் அழைக்கப்படுகிறார். இந்திய ரூபாய் நோட்டிலும் மகாத்மா காந்தி என்றே இருக்கும். 2016ம் ஆண்டு பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளிலும் மகாத்மா காந்தி என்ற குறிப்பிடப்பட்டுள்ளது.
மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியை மக்கள் அன்பால் மகாத்மா காந்தி என்று கூப்பிடவில்லை.முந்தைய பிரிட்டிஷ் இந்திய அரசு அவ்வாறு கூப்பிட வேண்டும் என்று அனைத்து அரசு ஊழியர் களுக்கும் போட்ட அரசு ஆணை யின் பேரில் மகாத்மா என்று கூப்பிட ஆணை பிறப்பிக்க பட்டனர்
அதுவே அனைவராலும் பயன்படுத்த பட்டது pic.twitter.com/hS2cU29siJ— I am Modi (@lvr63) January 1, 2022
இந்நிலையில், காந்தியை ‘மகாத்மா காந்தி’ என்று அழைக்க வேண்டுமெனப் பிரிட்டிஷ் அரசு சுற்றறிக்கை அனுப்பியதைத் தொடர்ந்தே மகாத்மா என்ற பட்டப் பெயர் வந்ததாக பாஜகவினர் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.
மோகன்தாஸ் காந்தியை 'மகாத்மா காந்தி' என்று அழைக்க வைத்தது யார்
இந்திய குடிமக்கள் என்று நீங்கள் யூகித்திருந்தால் நீங்கள் தவறாக நினைக்கிறீர்கள்
இது இன்னொரு பிரிட்டிஷ் மோசடியாகும்.
சாச்சா நேருவைப் போல ஏன் இவர் உச்சத்திற்கு உயர்த்தப்பட்டார் என்பது இப்போது உங்களுக்குத் தெரியும். pic.twitter.com/kp3pezGz85
— RAMGEECRR (@ramgeecrr) January 7, 2023
உண்மை என்ன ?
காந்தி முதன் முதலில் மகாத்மா என அழைக்கப்பட்டது குறித்து இணையத்தில் தேடினோம். தேசிய கீதத்தை எழுதிய ரவீந்தரநாத் தாகூர் காந்திக்கு மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியதாகத் தகவல் கிடைத்தது. ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ இணையதளத்தில் “Now Prashant Kishor comes to Champaran, where Gandhi became Mahatma” என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அச்செய்தியில் காந்திக்கு மகாத்மா என்ற பட்டத்தினை தாகூர் வழங்கியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ்காரர்களால் காந்திக்கு மகாத்மா என்று பட்டம் அளிக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவும் புகைப்படத்தில் 1938 என உள்ளது. ஆனால், அதற்கு முன்பாக 1917ம் ஆண்டே மகாத்மா என்ற பட்டம் அளிக்கப்பட்டுள்ளது.
1919ம் ஆண்டு இந்திய அரசு சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்திய மாகாணங்களில் தேர்தல் நடத்தப்பட்டது. தொடக்கத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் இத்தேர்தலைப் புறக்கணித்தது.
ஆனால், பின்னாட்களில் காங்கிரஸ் கட்சி தேர்தலில் போட்டியிட்டது. அதன்படி 1937 தேர்தலில் மத்திய மாகாணத்தில் (இன்றைய மத்தியப் பிரதேசம், மஹாராஷ்டிரா மற்றும் சத்தீஸ்கர் பகுதிகளை உள்ளடக்கியது) இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது.

வெற்றியைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பண்டிட் ரவிசங்கர் சுக்லா மத்திய மாகாண ப்ரிமியர் (முதலமைச்சர்) ஆனார். ஆட்சி அதிகாரத்திலிருந்த காங்கிரஸ், காந்தியை ‘மகாத்மா காந்தி’ என அழைக்க அரசு அதிகாரிகளுக்குச் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அந்த சுற்றறிக்கையைத்தான் பிரிட்டிஷ் அரசு பட்டம் கொடுத்ததாகத் தவறாகப் பரப்பி வருகின்றனர்.
காந்திக்கு மகாத்மா எனப் பட்டம் அளித்தவர் யார் எனத் தேர்வு ஒன்றில் கேட்கப்பட்ட வினா தொடர்பான வழக்கிற்கு ரவீந்தரநாத் தாகூர் என குஜராத் உயர் நீதிமன்றம் 1999ம் ஆண்டு தீர்ப்பளித்துள்ளது.
இவ்வாறாக இருப்பினும், டாக்டர்.பிரஞ்சிவன் மேத்தா என்பவர் கோபாலகிருஷ்ண கோகலேவுக்கு எழுதிய கடிதத்தில் காந்தியை முதன் முதலில் மகாத்மா எனக் குறிப்பிட்டுள்ளதாக ‘தி பிரிண்ட்’ இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.
1909ம் ஆண்டு, நவம்பர் 8ம் தேதி மேத்தா எழுதிய கடிதத்தில், “வருடம் வருடம் (நான் அவரை 20 வருடத்திற்கும் மேலாகக் காந்தியை அறிந்திருக்கிறேன்) அவர் (காந்தி) தன்னலமற்றவராக இருப்பதைக் காண்கிறேன். அவர் தற்போது ஒரு துறவி வாழ்க்கையை வாழ்கிறார். நாம் வழக்கமாகப் பார்க்கும் துறவி வாழ்க்கை போலல்லாமல், ஒரு மகாத்மாவின் வாழ்க்கையை வாழ்கிறார். அவரது மனதில் உள்ள ஒரே யோசனை அவரது தாய்நாடு பற்றியதே” என்றுள்ளது. (மகாத்மா அண்ட் தி டாக்டர், எஸ்.ஆர்.மெஹ்ரோத்ரா, வக்கீல்ஸ், ஃபெஃபர் அண்ட் சைமன்ஸ் பிரைவேட் லிமிடெட், மும்பை, 2014, பக்கம் 28) ” என இடம்பெற்று உள்ளது.
மேலும் படிக்க : காந்தியை தவறாகச் சித்தரிக்கும் படங்கள்.
மேலும் படிக்க : காந்திச் சுட்டுக் கொல்லப்பட்ட போது எடுக்கப்பட்ட அரியப் படமா ?
முடிவு :
நம் தேடலில், காந்திக்கு மகாத்மா எனப் பட்டத்தைப் பிரிட்டிஷ்காரர்கள் வழங்கியதாகப் பரவும் தகவல் உண்மையல்ல. குஜராத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் படி ரவீந்தரநாத் தாகூர்தான் காந்தியை முதன் முதலில் மகாத்மா என அழைத்துள்ளார் என்பதை அறிய முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.