This article is from Mar 30, 2020

கொரோனா நிதியாக விப்ரோ நிறுவனர் 50,000 கோடி அளித்தாரா ?

பரவிய செய்தி

விப்ரோ குழுமத்தின் நிறுவனர் ஜனாப் முஹம்மது அஜீம் ஹாஷிம் பிரேம்ஜி தனது பங்காக 50,000 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.

மதிப்பீடு

விளக்கம்

இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிக அளவில் பரவி விடக்கூடாது என்பதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எனினும், மக்களின் தேவைகள், கொரோனா வைரசிற்கு எதிரான நடவடிக்கைகள், உணவு மற்றும் சுகாதார வசதிகள் ஆகியவற்றிற்கு அதிகளவில் நிதி தேவைப்படுவதால், பிரதமர் மோடி மக்களிடம் நிதியுதவி அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

Facebook link | archived link 

இதையடுத்து, தொழிலதிபர்கள், நடிகர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் நிதியுதவி அளித்து வருகின்றனர். இந்நிலையில், விப்ரோ குழுமத்தின் நிறுவனரும், நிர்வாக இயக்குனருமான அஜீம் பிரேம்ஜி கொரோனா வைரசிற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு 50,000 கோடி நிதியுதவி அளித்து உள்ளதாக வணக்கம் இந்தியா நியூஸ் கார்டு மற்றும் சில முகநூல் பக்கங்களில் வெளியாகி வருகிறது.

உண்மை என்ன ? 

விப்ரோ குழுமத்தின் நிறுவனர் தனது பங்காக 50,000 கோடி அளித்துள்ளார் என்ற செய்தி தமிழ் மட்டுமின்றி இந்திய அளவில் பல மொழிகளில் வைரலாகி வருகிறது என்பதை அறிந்து கொள்ள முடிந்தது. ஆனால், கொரோனா வைரசிற்கு எதிரான போராட்டத்திற்கு மிகப் பெரிய தொகையை விப்ரோ நிறுவனர் அளித்ததாக அதிகாரப்பூர்வ செய்திகளில் இடம்பெறவில்லை.

இது தொடர்பாக மேற்கொண்டு தேடுகையில், 2019 மார்ச் 15-ம் தேதி NDTV இணையதளத்தில் ” Azim Premji Does It Again – Donates Over 50,000 Crore To Charity ” எனும் தலைப்பில் வெளியான செய்தி கிடைத்தது. விப்ரோ குழுமத்தின் நிறுவனர் 7.5 பில்லியன் டாலர்கள் அல்லது 52,750 கோடி மதிப்புள்ள நிறுவனத்தின் 34% பங்குகளை செலுத்துவதன் மூலம் அவர் ஏற்கனவே நன்கொடையாக வழங்கிய பில்லியன் கணக்கான டாலர்களை சேர்த்துள்ளார் என வெளியாகி இருக்கிறது.

” விப்ரோ நிறுவனர் அஜீம் பிரேம்ஜி உடைய அறக்கட்டளை இந்தியாவில் உள்ள பின்தங்கிய பகுதிகளில் இருக்கும் அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்துவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள உதவி செய்து வருகிறார்கள். இந்த பணிகள் அனைத்தும் மாநில அரசுடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது. இவர்கள் கர்நாடகா, உத்தரகாண்ட், பாண்டிசேரி, தெலங்கானா, மத்திய பிரதேசம், சண்டிகர் உள்ளிட்ட மாநிலங்களில் களப்பணியை மேற்கொண்டு வருவதாக ” அஜீம் பிரேம்ஜி அறக்கட்டளை தெரிவித்து உள்ளது.

விப்ரோ நிறுவனர் அஜீம் பிரேம்ஜி 50,000-52,000 கோடியை நன்கொடையாக அளித்தது தொடர்பாக கடந்த  ஆண்டு மார்ச் மாதத்தில் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. ஆனால், சமீபத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீள்வதற்காக 50,000 கோடி நிதியுதவியை அஜீம் பிரேம்ஜி அளித்துள்ளதாக தவறான தகவலை இந்திய அளவில் பரப்பி வருகிறார்.

Updated : 

கொரோனா வைரஸ் நடவடிக்கை பணிக்காக விப்ரோ சார்பில் 1150 கோடி அளிப்பதாக தெரிவித்து உள்ளது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader