குழந்தையைக் கொடூரமாக தாக்கும் பெண் ?| தமிழகப் பள்ளி ஆசிரியரா?

பரவிய செய்தி
உங்களிடம் எந்த எண் மற்றும் குழு இருந்தாலும் ஒரு எண்ணை கூட தவறவிடக்கூடாது , இந்த வீடியோவை அனைவருக்கும் அனுப்புங்கள். அது சூசைநகர் செயின்ட் ஜோசப் பள்ளியின் ஆசிரியர் , எனவே இதைப் பகிர்ந்து கொள்ளுங்கள். இதனால் இந்த ஆசிரியர்கள் மற்றும் பள்ளிகள் இரண்டும் மூடப்படும்.
மதிப்பீடு
விளக்கம்
வயதான பெண் ஒருவர் பெண் குழந்தையை ஸ்கேல், கையால் கண்மூடித்தனமாக தாக்குவது, காலால் எட்டி உதைப்பது உள்ளிட்டவை இடம்பெற்ற 2.50 நிமிட வீடியோ முகநூல், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் இருப்பத கிறிஸ்தவ பள்ளியின் ஆசிரியர் என பரவுகிறது. இதன் உண்மைத்தன்மை குறித்து தெரிவிக்குமாறு யூடர்ன் ஃபாலோயர் தரப்பில் கேட்கப்பட்டது.
Facebook post link | archived link
இந்த வீடியோ குறித்து முகநூலில் தேடிய பொழுது videos veer vaniyar என்ற முகநூல் பக்கத்தில் 2019 நவம்பர் 4-ம் தேதி வீடியோ வெளியாகி இருக்கிறது. அதில், வீடியோவில் இருப்பது சூசைநகர் செயின்ட் ஜோசப் பள்ளியின் ஆசிரியர் , எனவே இதைப் பகிர்ந்து கொள்ளுங்கள். இதனால் இந்த ஆசிரியர்கள் மற்றும் பள்ளிகள் இரண்டும் மூடப்படும் ” எனக் குறிப்பிட்டு இருந்தது. இந்த பதிவு 3 லட்சத்திற்கு மேற்பட்ட பார்வைகள், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஷேர்களை பெற்று வைரலாகி வருகிறது.
உண்மை என்ன ?
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்து பார்க்க தீர்மானித்து தேடிய பொழுது, வீடியோவில் நடந்த சம்பவம் சமீபத்தில் நடந்தவை அல்ல என்பதும், சம்பவம் நடந்தது தமிழகமே இல்லை என்பதும் தெரிய வந்தது.
மலேசியாவின் புச்சாங் பர்டானாவில் குழந்தையை கொடூரமாக தாக்கும் சம்பவம் நிகழ்ந்ததாக கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் themalaysiantime என்ற செய்தி இணையதளத்தில் இடம்பெற்று இருக்கிறது.
செய்திகளில், எத்தனை முறை கூறியும் உணவை சிந்தாமல் உண்ணவில்லை எனக் கூறி 6 வயது குழந்தையை 62 வயதான தனவள்ளி என்பவர் கடுமையாக தாக்கியதாக வெளியாகி இருக்கிறது. வீடியோ முகநூல் உள்ளிட்டவற்றில் வைரலான பிறகு மலேசியன் போலீசார் அவரை கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர். நீதிமன்றத்தில் வழக்கும் நடைபெற்றுள்ளது.
குழந்தையின் தாய் இறந்த பிறகு தனவள்ளியின் பாதுகாப்பில் குழந்தை வளர்ந்து வருவதாகக் கூறப்பட்டு உள்ளது. எனினும், அனைவரும் கூறுவது போன்று குழந்தையை கொடூரமாக தாக்கவில்லை என தன் மீதான குற்றச்சாட்டை அவர் மறுத்து இருப்பதாகவும் செய்திகளில் வெளியாகி இருக்கிறது. கைது செய்யப்பட்ட புகைப்படங்கள், வழக்கு பதிவு செய்யப்பட்ட விவரங்கள் அனைத்தும் செய்திகளில் வெளியாகி இருக்கிறது.
முடிவு :
நம்முடைய ஆய்வில் இருந்து, குழந்தையை தாக்கிய சம்பவம் தமிழகத்தில் நடந்ததாகவும், அதுவும் சூசைநகர் செயின்ட் ஜோசப் பள்ளி ஆசிரியர் என்றும் பகிரப்படுவது முற்றிலும் தவறானது, வதந்தியே. அவர் பள்ளி ஆசிரியரும் அல்ல.
வீடியோவில் இருக்கும் வயதான பெண் சரளமாக தமிழில் பேசிய காரணத்தினால் தமிழகத்தில் நடந்ததாக பரப்பி உள்ளனர். மேலும், 2017-ல் வைரலான வீடியோவில் இருக்கும் பெண் மலேசிய போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு உள்ளார்.
2 ஆண்டுகளுக்கு முன்பு மலேசியாவில் நிகழ்ந்த சம்பவத்தை தமிழகத்தில் நிகழ்ந்ததாக வதந்திகளை பரப்பி வருகின்றன என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. இதுபோன்ற தவறான வீடியோக்களை பகிர வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.