பெண் காவலர்களுக்கு நடமாடும் கழிப்பறை வாகனத்தை அறிமுகப்படுத்தியது திமுக இல்லை !

பரவிய செய்தி

முதன் முதலாக தமிழ்நாட்டில் பெண் காவலர்களுக்கு நடமாடும் ரெஸ்ட் ரூம் உருவாக்கியது நம் தமிழ்நாட்டு முதல்வர் தளபதியார் அவர்கள்.

Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

தமிழகத்தில் பெண் காவலர்களுக்கு நடமாடும் கழிப்பறை(ரெஸ்ட்ரூம்) வாகனத்தை திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தி உள்ளதாக சாலையில் செல்லும் பெண்களுக்கான கழிப்பிட வாகனத்தின் ஓர் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

இதேபோல், ” தமிழ்நாட்டில் பெண் போலிஸாரின் நலனுக்காக நடமாடும் கழிவறை வாகனம் அறிமுகம் ” என தினகரன், கலைஞர் செய்திகள், ஜீ நியூஸ் உள்ளிட்ட நாளிதழ்களின் சமூக வலைதள பக்கங்களிலும் கூட அதே புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார்கள்.

Twitter link | Archive link 

Archive link 

Advertisement

Archive link 

பெண் காவலர்களுக்கு நடமாடும் கழிப்பறை வாகனம் ஏற்படுத்திக் கொடுத்ததற்கு தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்து, நன்றி தெரிவிப்பதும், திமுக அரசின் திட்டம் எனக் குறிப்பிட்டும் பதிவிட்டு வருவதால் அதன் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்து பார்க்கத் தீர்மானித்தோம்.

உண்மை என்ன ?

” மிக மிக அவசரம் ” எனும் திரைப்படம் பாதுகாப்பு பணியில் இருக்கும் பெண் காவலர்கள் இயற்கை உபாதைகளுக்கு படும் துயரம் பற்றி பேசியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. கடந்த அதிமுக ஆட்சியில் காவலர்களுக்கு நடமாடும் கழிப்பறை வாகனங்கள் அளிக்கப்பட்ட செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

2016-ம் ஆண்டு, ” ஆறு மாநகர போலீஸ் தவிர 31 மாவட்ட போலீசார் பயன்படுத்தும் வகையில் மாவட்டத்துக்கு தலா இரண்டு ஆண்கள், பெண்களுக்கு பிரத்யேகமாக நடமாடும் கழிப்பறை வாகனங்களை வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அதற்கான நிதி ஒதுக்கப்பட்டது. 31 மாவட்ட போலீசாருக்கு முதல் முறையாக 6.20 கோடி ரூபாய் செலவில் 62 நடமாடும் கழிப்பறை வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன ” என டைம்ஸ் ஆப் இந்தியா, தினமலர் உள்ளிட்ட  வெளியிட்ட செய்திகளில் கூறப்பட்டுள்ளது.

2020 ஜனவரியில் நியூஸ் 18 செய்தியில், ” சென்னை மாநகராட்சி பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் மகளிர் காவலர்களுக்காக நிர்பையா நிதியிலிருந்து 2 கோடி செலவில் நடமாடும் கழிவறை வாகனங்களை வாங்க நடவடிக்கை எடுத்து வருகிறது ” என வெளியாகி இருக்கிறது

அதன் பிறகு வழங்கப்பட்ட வாகனங்கள் குறித்து தேடுகையில், 2021 ஜனவரியில் அதிமுக ஆட்சியில் 12 மாவட்ட காவலர்களுக்கு 12 நடமாடும் கழிப்பறை வாகனங்கள் வழங்கப்பட்டு உள்ளதாக தற்போது வைரல் செய்யப்படும் வாகனத்தைப் போன்ற புகைப்படம் டைம்ஸ் ஆப் இந்தியாவில் வெளியாகி இருக்கிறது.

Twitter link | Archive link  

2021 ஜனவரி 11-ம் தேதி சேலம் நகர காவல்துறை உடைய ட்விட்டர் பக்கத்தில், ” முக்கிய பாதுகாப்பு அலுவலின் போது காவலர்கள் இயற்கை உபாதைகளை நிறைவேற்றிக்கொள்ள ஏதுவாக சேலம் மாநகர காவல் துறைக்கு வழங்கப்பட்ட நவீன நடமாடும் கழிவறை வாகனத்தை சேலம் மாநகர காவல் ஆணையாளர் திரு.T.செந்தில்குமார்,I.P.S., அவர்கள் இன்று 11.01.2021-ஆம் தேதி பார்வையிட்டார் ” என வாகனத்தின் புகைப்படங்கள் சில பதிவாகி இருக்கின்றன.

அந்த புகைப்படங்களில், ” வாகனத்தில் பெண்கள் கழிவறை காவலர்கள் மட்டும் ” என இடம்பெற்று உள்ளதை பார்க்கலாம். அந்த வாகனத்தின் அமைப்பும், வைரல் செய்யப்பட்டும் வாகனத்தின் அமைப்பும் கிட்டத்தட்ட ஒன்றாகவே இருக்கிறது. வாகனத்தின் பின்னால் ” பெண் காவலர்கள் கழிவறை ” என்பது ஆங்கிலத்தில் மாறி இருக்கிறது.

வைரல் செய்யப்படும் புகைப்படம் சென்னையில் எடுத்திருக்கக்கூடும். ஆனால், எங்கு எடுக்கப்பட்டது என உறுதியாக தெரியவில்லை. வாகனத்தின் பதிவு எண் தென்படவில்லை, ஆகையால் புதிய வாகனமாகக் கூட இருக்கலாம். இதுபோன்ற வாகனங்கள் தமிழ்நாட்டில் அதிகரிக்கப்பட வேண்டியது அவசியம்.

முடிவு : 

நம் தேடலில், முதன் முதலாக தமிழ்நாட்டில் பெண் காவலர்களுக்கு நடமாடும் கழிப்பறை வாகனம் உருவாக்கியது முதல்வர் மு.க.ஸ்டாலின் என்றும், திமுக அரசு என்றும் பரப்புவது தவறான தகவல்.

கடந்த அதிமுக ஆட்சியிலேயே பெண் காவலர்களுக்கான நடமாடும் கழிப்பறை வாகனங்கள் அளிக்கப்பட்டு இருக்கிறது. சென்னை மாநகராட்சி சார்பில் பெண் காவலர்களுக்கு நடமாடும் கழிப்பறை வாகனங்கள் வாங்குவதாகவும் 2020-ல் செய்திகள் வெளியாகி இருக்கிறது என அறிய முடிகிறது.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button