சடலத்துடன் உடலுறவு கொள்வது குற்றமல்ல என கர்நாடகா உயர் நீதிமன்றம் கூறியதாக வெளியான தவறான செய்திகள் !

பரவிய செய்தி

சடலத்துடன் உடலுறவு கொள்வது குற்றமல்ல! பெண் சடலத்துடன் உடலுறவு கொள்வது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் குற்றமல்ல என கர்நாடக உயர்நீதிமன்றம் சர்ச்சை தீர்ப்பு! 

Twitter link 

மதிப்பீடு

விளக்கம்

ர்நாடகா மாநிலத்தில் கடந்த 2015ம் ஆண்டு இளம்பெண் ஒருவரைக் கொலை செய்து, அவரது சடலத்துடன் உடலுறவு கொண்டதற்காக ரங்கராஜன் என்பவனுக்குத் தண்டனை அளிக்கப்பட்டது. 

Archive link  

இதுகுறித்து கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்ட நிலையில், சடலத்துடன் உடலுறவு கொள்வது குற்றமல்ல எனத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக சன் நியூஸ், IBC தமிழ், ஹிந்துஸ்தான் டைம்ஸ் தமிழ், நியூஸ் 7 தமிழ் போன்ற ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. 

அதில், “பெண் சடலத்துடன் உடலுறவு கொள்வது இந்தியத் தண்டனை சட்டத்தின் கீழ் குற்றமல்ல எனக் கர்நாடக உயர்நீதிமன்றம் சர்ச்சை தீர்ப்பு!” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

உண்மை என்ன ? 

நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்குகள் குறித்து பிரத்யேகமாகச் செய்தி வெளியிடும் ‘Live Law’ இணையதளத்தில் இவ்வழக்கு குறித்துத் தேடினோம். அத்தளத்தில் ரங்கராஜன் வழக்கு தொடர்பாகக் கடந்த மே மாதம் 31ம் தேதி “Rape On Woman’s Dead Body Will Not Attract Section 376 IPC: Karnataka High Court” என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. 

நீதிபதிகள் வீரப்பா மற்றும் வெங்கடேஷ் நாயக் அடங்கிய அமர்வு குற்றவாளி ரங்கராஜின் மேல்முறையீட்டு வழக்கினை விசாரித்துத் தீர்ப்பு வழங்கியுள்ளனர். அதில், இந்தியத் தண்டனைச் சட்டம் 375 மற்றும் 377 ஆகிய பிரிவுகளைக் கவனமாக வாசிக்கும் போது, இறந்த உடலை மனிதராகவோ அல்லது நபராகவோ கருத முடியாது என்றுள்ளது. 

அதேபோல், பிரிவு 377ல் ஒரு ஆண், பெண் அல்லது மிருகத்துடன் இயற்கையின் ஒழுங்கிற்கு எதிராக உடலுறவு கொள்பவர்களுக்கே தண்டனை அளிக்க வழிவகை உள்ளது. அதில், ‘இறந்த உடல்’ என்ற வார்த்தை இடம்பெறவில்லை.

எனவே 375 மற்றும் 377 பிரிவுகளில் வரையறைப்படி இறந்த உடலுடன் உறவு கொள்வது பாலியல் குற்றம் அல்லது இயற்கைக்கு மாறான குற்றம் எனக் கருத முடியாது. எனவே இந்த வழக்கிற்கு இப்பிரிவுகள் பொருந்தாது. இதனை சாடிசம் (sadism), நெக்ரோபிலியா (necrophilia) என்று கருதலாம். ஆனால், அந்நபரை தண்டிக்க இந்தியத் தண்டனை சட்டத்தில் வழிவகையில்லை. இருப்பினும், சடலத்துடன் உடலுறவு கொள்வதைத் தண்டிக்க ஒரு சட்டத்தை திருத்தவோ அல்லது இயற்றவோ அரசு பரீசிலிக்க வேண்டும் என அந்த அமர்வு தெரிவித்துள்ளது. 

இதேபோன்று இறந்த உடலுடன் உடலுறவு கொள்வதைத் தண்டிக்க ஐ.பி.சி. பிரிவு 377ல் திருத்தம் செய்ய வேண்டும் எனக் கர்நாடகா உயர் நீதிமன்றம் ஒன்றிய அரசுக்குப் பரிந்துரைத்துள்ளதாக வேறொரு செய்தியும் வெளியிடப்பட்டுள்ளது. அதுவும் ரங்கராஜன் மேல்முறையீட்டு வழக்கு தொடர்புடையது.

அச்செய்தியில், “இறந்த நபர் அல்லது பெண்ணின் கண்ணியத்தைக் காக்க ஒன்றிய அரசு ஐ.பி.சி. 377வது பிரிவில் ஆண், பெண், விலங்கு மற்றும் இறந்த உடலுடன் உடலுறவு கொள்வது தொடர்பாகத் திருத்தம் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். 

மேலும், இறந்தவர்களின் உடல்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் வகையில், அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனை பிணவறைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படுவதை ஆறு மாதங்களுக்குள் உறுதி செய்யவும் மாநில அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 

அதாவது, இறந்த உடலுடன் உடலுறவு கொள்வது குறித்து தண்டனை அளிக்க இந்தியத் தண்டனை சட்டத்தில் இடமில்லை. எனவே ஒன்றிய அரசு அதற்கான திருத்தத்தைச் செய்ய வேண்டும் என நீதிபதிகள் கூறியுள்ளனர். ஆனால், தவறாக பொருள் கொள்ளவும் வகையில் தலைப்பிட்டு, பாதி செய்தியை மட்டும் ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

முடிவு : 

நம் தேடலில், சடலத்துடன் உடலுறவு கொள்வது குற்றமல்ல எனக் கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததாக வெளியான செய்திகள் உண்மை அல்ல. இறந்த உடலுடன் உடலுறவு கொண்டதற்குத் தண்டனை அளிக்க IPCல் வழிவகை இல்லை. எனவே இது தொடர்பாக ஒன்றிய அரசு சட்டத் திருத்தத்தினை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுதான் நீதிபதிகள் கூறியுள்ளனர் என்பதை அறிய முடிகிறது.

Please complete the required fields.
ஆதாரம்

Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader