அண்ணாமலையின் யாத்திரையில் பெண்கள் மது அருந்துவதாகப் பரவும் ஆந்திரா வீடியோ !

பரவிய செய்தி
குடியும் கும்மாளமுமாக நடக்கும் அண்ணாமலையின் பாவ யாத்திரை..
மதிப்பீடு
விளக்கம்
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் பாதயாத்திரை இராமேஸ்வரத்தில் தொடங்கப்பட்டது. அக்கட்சியின் பாத யாத்திரையில் கலந்து கொண்ட பெண்கள் காரில் அமர்ந்து மது அருந்துவதாக 1:30 நிமிட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
குடியும் கும்மாளமுமாக நடக்கும் அண்ணாமலையின் பாவ யாத்திரை.. பாஜக பெண்கள் குடித்தால் பொங்க மாட்டாளா கஸ்தூரி மாமி. தமிழ்நாட்டின் மன்மதன்-அண்ணாமலை.
பாஜகவில் இருக்கும் பெண்கள் பாவம்@KasthuriShankar @khushsundar #ஆழ்ந்த_இரங்கல் #பாதயாத்திரை #பாவ_யாத்திரை #NeverVoteBJP #எழுவோம்_இணைவோம் pic.twitter.com/O4EC1Z4GLP— 🇮🇳I.N.D.I.A🇮🇳🖤Mr.MKN❤️ (@amMuthukumaran) August 1, 2023
இவனுங்க எப்ப சொகுசா பஸ் எல்லாம் வச்சிக்கிட்டு போனானுங்களோ அப்பவே தெரியும்இந்த மாதிரி எதாவது வில்லங்கம் செய்வானுங்கனு. இவன் நடக்கறதுக்காக இதை எல்லாம் செய்யல வேற என்னமோ பிளான் பண்ணி தான் இதை ஆரம்பிச்சிருக்கான் https://t.co/KSH6bZ5rwQ
— Sri Raman (@SriRama53404184) August 1, 2023
மேற்காணும் வீடியோவில், திறந்தவெளி பகுதியில் நிறுத்தப்பட்ட காருக்குள் 6 பெண்கள் அமர்ந்து கொண்டு மது அருந்துகின்றனர். காருக்கு அருகே சில ஆண்களும் நிற்பதை பார்க்க முடிகிறது. இந்த வீடியோவிற்கு தமிழ் திரைப்பட பாடல் ஒன்றை பின்னணியில் இணைத்து உள்ளனர்.
உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் வீடியோவில் இருந்து கீஃப்ரேம்களை எடுத்து ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2021 மார்ச் 11ம் தேதி பாலிமர் செய்தியில் ” ஆந்திராவில் விடுமுறை தினத்தை மது அருந்தி கொண்டாடிய தோழிகள் ” என அதே வீடியோ பதிவாகி இருக்கிறது.
மேலும் தேடுகையில், ” ஆந்திராவில் விடுமுறை நாளை கொண்டாடி மகிழ காரில் புறப்பட்ட பெண்கள் மது குடித்து அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதால் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. எனினும் வீடியோ வைரலாகியதால், போக்குவரத்து விதிகளை மீறியதால் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக ” சமயம் தமிழ் மற்றும் ஒன் இந்தியா தமிழ் உள்ளிட்ட இணையதளங்களில் இதே வீடியோவின் புகைப்படங்களும் செய்தி வெளியாகி இருக்கிறது.
எனினும், இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்பது தொடர்பான விரிவான தகவல்களோ, வீடியோவோ எந்த செய்தியிலும் வெளியிடவில்லை.
மேலும் படிக்க : அண்ணாமலையின் பாத யாத்திரை வாகனத்தின் படுக்கை வசதி எனப் பரவும் தவறான புகைப்படம் !
மேலும் படிக்க : இராமேஸ்வரத்தில் பிரியாணி அண்டா திருடும் பாஜகவினர் எனப் பரவும் எடிட் செய்யப்பட்ட செய்தி !
இதற்கு முன்பாக, அண்ணாமலையின் பாத யாத்திரை தொடர்பாக வேறு சில பொய் செய்திகளும் சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டன. அதுகுறித்தும் கட்டுரைகள் வெளியிட்டு இருக்கிறோம்.
முடிவு :
நம் தேடலில், பெண்கள் காரில் அமர்ந்து மது அருந்தும் வீடியோ அண்ணாமலையின் பாத யாத்திரை நிகழ்வில் எடுக்கப்பட்டதாகப் பரவும் தகவல் தவறானது. அந்த வீடியோ கடந்த 2021ல் ஆந்திராவில் எடுக்கப்பட்டதாக செய்திகளில் வெளியாகி இருக்கிறது என்பதை அறிய முடிகிறது.