குஜராத்தில் வாய்க்காலில் விழுந்தது மாவட்ட ஆட்சியரா ?| நகைப்பதற்கில்லை.

பரவிய செய்தி
மாவட்ட ஆட்சியர் சாக்கடையில் விழுந்தார் குஜராத்தில். வாழ்க மோடியின் சுவாச் பாரத் டிஜிட்டல் இந்தியா.
மதிப்பீடு
விளக்கம்
குஜராத் மாநிலத்தில் பெண் மாவட்ட ஆட்சியர் ஒருவர் கூட்டத்தில் நின்று பேசிக் கொண்டு இருக்கும் பொழுது சாக்கடையில் விழுந்ததாக வீடியோ பதிவு ஒன்று வைத்தியலிங்கம் நடராஜன் என்ற முகநூல் கணக்கில் ஜூலை 28-ம் தேதி பதிவிடபட்டது. அந்த வீடியோ பதிவு ஆயிரக்கணக்கில் ஷேர் செய்யப்பட்டு 22 ஆயிரம் பார்வைகளை பெற்றது. தற்பொழுது பல முகநூல் குரூப்களில் பகிரப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
சமீபத்தில் முகநூல் குரூப்களில் பரவி வரும் வீடியோ குறித்த நம்பகத்தன்மையை ஆராய்ந்தோம். அதில், பரவி வரும் வீடியோ சமீபத்தைச் சேர்ந்தவை அல்ல, 2016-ல் நிகழ்ந்த சம்பவம் என தெரிய வந்தது. மேலும், அந்த வீடியோவில் இருப்பது குஜராத் மாவட்ட ஆட்சியர் அல்ல, பிஜேபி எம்பி பூனம் மாதம் ஆவார்.
2016 மே மாதம் ஜாம்நகரில் உள்ள ஜலாராம் குடிசைவாழ் மக்கள்(Slum) வசிக்கும் பகுதியில் அரசு அதிகாரிகள் மேற்கொண்டு இருந்த இடிக்கும் பணிகளுக்கு அங்குள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, ஊழியர்களுடன் கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போழுது குஜராத்தின் ஜாம்நகர் தொகுதி எம்பி பூனம் மாதம் அங்குள்ள மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பொழுது அவர் நின்று கொண்டிருந்த சிமெண்ட் பலகைகள் இடிந்து வாய்க்காலில் விழுந்தார்.
8 அடிக்கும் அதிகமான உயரம் கொண்ட இடத்தில் இருந்து விழுந்த காரணத்தினால் பூனம் மாதம் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அந்த விபத்தில் அவர் அருகில் இருந்தவர்களும் கீழே விழுந்துள்ளனர். அவரை மீட்ட பிறகு அங்கிருந்து உடனடியாக மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு தலையில் 5 தையல்கள் போடப்பட்டன.
அப்போழுது எடுக்கப்பட்ட வீடியோவே தற்பொழுது பகிர்ந்து வருகின்றனர். வாய்க்காலில் இருந்து சிமெண்ட் பலகைகள் பாரம் தாங்காமல் இடிந்ததில் பிஜேபி எம்பி பூனம் கீழே விழுந்து காயமடைந்தார். அதனை குஜராத் மாவட்ட ஆட்சியர் என தற்பொழுது தவறாகப் பரப்பி வருகின்றனர்.
இதே வீடியோவை சில மாதங்களுக்கு முன்பு, கர்நாடகாவில் உள்ள குடகு மாவட்ட ஆட்சியர் வாய்க்காலில் விழுந்ததாக முகநூலில் தவறாக பரப்பி இருந்தனர்.
தமிழில் பதிவிடப்பட்ட வீடியோவிற்கு சிலர் நகைக்கவும் செய்திருக்கிறார்கள். அரசியல், ஆட்சியாளர்கள் என்பதை தாண்டி காயமடைந்தது ஒரு பெண் அல்லவா? இதற்கு எல்லாம் கூட நகைப்பு வருகிறதா ?. பழைய செய்தியை அரசியல் சார்ந்து பதிவிடுவதே தவறு. அதிலும், அதனை கேளிக்கையாக்கியது கண்டிக்கத்தக்கதே.