காயத்ரி ரகுராமின் வெள்ளை பலகை பேருந்து கேள்வி சரியானதா ?

பரவிய செய்தி
பெண்களுக்கு இலவச பஸ்- 1. வெள்ளை பலகை மட்டுமே இலவசம் ஆனாலும் பேருந்துகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. 2. வெள்ளை பலகை பஸ் ஒரு முறை வரும், அவசரமாக பஸ்ஸைப் பெற முடியாது. 3. நீங்கள் பஸ் டிப்போவிலிருந்து பஸ் எடுக்க வேண்டும். ஆனால் தாமதமாகிவிடும். சில பஸ் டிப்போ வீட்டிலிருந்து வெகு தொலைவில் உள்ளது எப்படி வருவார்கள்? “ நாங்கள் வெள்ளை பலகை பஸ்ஸை எதிர் பார்த்தால் எங்கள் வாழ்நாள் முழுவதும் காத்திருக்க வேண்டும்”இப்படிக்கு ஒரு பெண். CM இது பற்றி பேசுவீர்களா? – காயத்ரி ரகுராம்
மதிப்பீடு
விளக்கம்
தமிழக பாஜகவைச் சேர்ந்த காயத்ரி ரகுராம் தன் ட்விட்டர் பக்கத்தில், பெண்களுக்கான இலவச பேருந்து பயணம் குறித்து ஒரே ட்வீட் செய்து இருக்கிறார். அதில், வெள்ளை பலகை பேருந்துகளில் மட்டுமே இலவசம், பேருந்துகளின் எண்ணிக்கை குறைவு, அதுவும் ஒருமுறை தான் வரும், வெள்ளை பலகை பஸ்ஸை எதிர்பார்த்தால் எங்கள் வாழ்நாள் முழுவதும் காத்திருக்க வேண்டும் என ஒரு பெண் கூறுவதாக வாக்கிய பிழைகள் உடன் பதிவிடப்பட்டுள்ளது.
உண்மை என்ன ?
சென்னையை பொறுத்தவரையில் ஒயிட் போர்டு (காயத்ரி ரகுராம் குறிப்பிடும் வெள்ளை பலகை) எனும் பெயரில் பேருந்தை அடையாளம் குறிப்பிடுவது அதிகம் இருக்கும். ஒயிட் போர்டு எனும் பெயர் சாதாரண கட்டணப் பேருந்துகளையே குறிப்பிடுகின்றன. 2021 மே மாதம் வெளியான பாலிமர் செய்தியில், இன்றைய நிலவரப்படி சென்னையில் சுமார் 1000 ஒயிட் போர்டு எனும் சாதாரண கட்டண பேருந்துகள் இயக்கப்படுகின்றன எனக் கூறப்பட்டு இருக்கிறது.
தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையில் கூட, ” தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு போக்குவரத்துக் கழக கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில்(White Board) பணிபுரியும் மகளிர் மற்றும் உயர் கல்வி பயிலும் மாணவியர் உள்பட அனைத்து மகளிரும் கட்டணமில்லாமலும், பேருந்து பயண அட்டை இல்லாமலும் பயணம் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கி அரசு ஆணையிடுகிறது ” எனக் கூறப்பட்டுள்ளது.
கடந்த மாதமே தமிழக பேருந்துகளில் பெண்களுக்கான இலவச பயணம் தொடர்பாக மாரிதாஸ் வெளியிட்ட தவறான தகவல் உடனான வீடியோ குறித்து நாம் வெளியிட்ட கட்டுரையில் தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்துக் கழகம் வாரியாக இருக்கும் சாதாரண கட்டண பேருந்துகளின் எண்ணிக்கையை வெளியிட்டு இருந்தோம்.
விரிவாக படிக்க : பெண்களுக்கு இலவச பயணத்திட்டம் ஏமாற்றா ? மாரிதாஸ் மறைத்த உண்மை!
சென்னையில் மொத்தமுள்ள 3233 பேருந்துகளில் சுமார் 1362 சாதாரண கட்டண பேருந்துகள் உள்ளதாக சென்னை எம்டிசி இணையதளத்தில் கூறப்பட்டு உள்ளது. தமிழகத்தில் சாதாரண கட்டண பேருந்துகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க இருப்பதாகவும் கடந்த மாதமே தகவல் வெளியாகியது.
இதுதொடர்பாக வடபழனி போக்குவரத்து அலுவலக மேலாளரை தொடர்பு கொண்டு பேசுகையில், ” பெண்கள் சாதாரண கட்டணப் பேருந்துகளில்( White board) இலவசமாக பயணிக்கலாம் ” எனக் கூறி இருந்தார்.
தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு பேருந்துகளின் இயக்கம் தொடங்கப்பட்டு இருக்கிறது. அதுதொடர்பாக, ஜூன் 21-ம் தேதி நியூஸ் 18 செய்தியில் வெளியான காட்சிகளில், திருவள்ளூர் பகுதியில் இயக்கப்படும் டிஜிட்டல் போர்டு கொண்ட பேருந்துகளில் கூட சாதாரண கட்டணம் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருப்பதை காணலாம். பெண்கள், திருநங்கைகள் இலவச பயணம் மேற்கொண்டதாகவும் செய்தியில் வெளியாகி இருக்கிறது.
சென்னை போன்ற மாநகரங்களில் இயக்கப்படும் பேருந்துகளை பொறுத்தவரை சாதாரண (ordinary), எக்ஸ்பிரஸ், டீலக்ஸ் என வகைப்படுத்தப்படுகின்றன. சாதாரண கட்டண(Ordinary) பேருந்துகளை ஒயிட் போர்டு(White Board) பேருந்துகள் எனக் கூறுகிறார்கள். கொரோனா ஊரடங்கு காரணமாக குறைவான பேருந்துகள் மட்டுமே தற்போது இயக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
முடிவு :
நம் தேடலில், காயத்ரி ரகுராம் கூறும் வெள்ளை பலகை அல்லது ஒயிட் போர்டு என்பது சாதாரண கட்டண நகர பேருந்துகளையே குறிக்கின்றன. சாதாரண கட்டண பேருந்துகளின் எண்ணிக்கை குறைவு என காயத்ரி ரகுராம் கூறுவது தவறான தகவல். சென்னையை பொறுத்தவரையில் மட்டுமே சாதாரண கட்டண பேருந்துகளின் எண்ணிக்கை 1000-க்கும் மேல் உள்ளன. பெண்கள் இலவசமாக பயணிக்கும் சாதாரண கட்டண பேருந்துகளின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கின்றன என அறிய முடிகிறது.