கட்டணமில்லா பேருந்து ரத்து, அரசு பஸ் கட்டணம் உயர்வு என வதந்தி பரப்பும் தமிழக பாஜக பொருளாளர் !

பரவிய செய்தி

கட்டணமில்லா பேருந்து ரத்து, அரசு பஸ் கட்டணம் உயர்வு. அடுத்தடுத்து ஷாக் கொடுக்கும் விடியல் அரசு.

Archive link 

மதிப்பீடு

விளக்கம்

திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து சேவை திட்டம் ரத்து செய்ய உள்ளதாகவும், அதனுடன் அரசு பஸ் கட்டணமும் உயர்த்தப்பட உள்ளதாகவும் செய்தித்தாள் பக்கத்தின் ஸ்க்ரீன்ஷார்ட் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதை தமிழக பாஜகவின் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் உள்பட பாஜகவினரும், அதிமுகவினரும் ட்விட்டர் உள்ளிட்டவையில் பகிர்ந்து விடியல் அரசு என விமர்சித்து வருகின்றனர்.

Archive link 

உண்மை என்ன ? 

தமிழ்நாட்டில் பேருந்து கட்டண உயர்வு, பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயணம் ரத்து செய்யப்பட உள்ளதா எனத் தேடுகையில், அவ்வாறான செய்தியோ, அதிகாரப்பூர்வ அறிவிப்போ ஏதும் வெளியாகவில்லை.

டிசம்பர் 2ம் தேதி போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ” தமிழக மக்களின் பயன்பாட்டிற்காக புதிதாக 1000 பேருந்துகளை வாங்குவது தொடர்பாக கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழ்நாடு முதல்வர் அறிவிப்பு வழங்கினார். அந்த அறிவிப்பின்படி, பேருந்துகளை வாங்க ரூ.420 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டு இருக்கிறது.

ஏற்கனவே 40% பெண்கள் கட்டணமில்லா பேருந்தில் பயணித்து வந்தது தற்போது 69% அளவிற்கு சென்றுக் கொண்டிருக்கிறது. அதற்கு காரணம், இந்த திட்டத்தின் மூலம் ஏழை எளிய, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பெண்கள் மிகப்பெரிய பலனை அடைகிறார்கள். அதற்காக தான் மாநில திட்டக்குழு ஆய்வை மேற்கொண்டு அறிக்கையை முதல்வரிடம் அளித்துள்ளது.

புதிதாக 500 மின்சார பேருந்துகளை வாங்க முதல்வர் ஒப்புதல் அளித்து இருக்கிறார். அதில் முதற்கட்டமாக 1௦௦ வாங்கி சென்னையில் பயன்படுத்தப்பட இருக்கிறது ” எனப் பேசி இருக்கிறார்.

டிசம்பர் 8ம் தேதி நாமக்கலில் பேசிய அமைச்சர் சிவசங்கர், ” தமிழக அரசு போக்குவரத்து கழகம் மிகப்பெரிய கடனில் இருக்கிறது. காரணம் டீசல் விலை உயர்வு தான். இந்த டீசல் விலை உயர்வை ஒரு வகையிலும் கணக்கிட முடியாமலும், கட்டுக்கடங்காமல் உயர்த்தியதால் தான் மிகப்பெரிய நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறோம்.

பொதுமக்களுக்கு பாதிப்பு வரக்கூடாது என்று முதல்வர் பஸ் கட்டணம் உயர்வு கிடையாது  என ஏற்கனவே அறிவித்திருக்கிறார். அருகில் உள்ள மாநிலங்கள் பஸ் கட்டணத்தை உயர்த்தி இருந்தாலும், தமிழக மக்களுக்கு எந்த பாதிப்பும் இருக்கக்கூடாது என பஸ் கட்டணம் உயர்த்தக்கூடாது எனக் கூறி உள்ளார் ” என செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.

News link | Archive link 

பாஜக மற்றும் அதிமுகவினரால் வைரல் செய்யப்படும் செய்தி குறித்து தேடிய போது, ” கட்டணமில்லா பேருந்து ரத்து.. கட்டணம் உயர்வு? அடுத்தடுத்து ஷாக் கொடுக்கும் தமிழக அரசு! ” எனும் தலைப்பில் news4tamil எனும் இணையதளமே இச்செய்தியை இரு தினங்களுக்கு முன்பாக வெளியிட்டு இருந்துள்ளது.

இந்த செய்திக்குள் சென்று பார்க்கையில், அமைச்சர் பேருந்து கட்டணத்தை உயர்த்தப்படாது எனத் தெரிவித்ததை கூறிவிட்டு, ” விலைவாசியின் உயர்வை பார்த்து திக்கு முக்காடி போன மக்களுக்கு பேருந்து கட்டணமும் உயர்த்தினால் மிகவும் சிரம படக்கூடும்.

அதேபோல பெண்களுக்கு கட்டணம் இல்லாமல் பயணச்சீட்டு என்ற திட்டத்தை அமல்படுத்தியதிலிருந்து போக்குவரத்து கழக கடன் சுமையை சமாளிக்க முடியாமல்  திணறி வருகிறது. எனவே கூடிய விரைவில் அந்தத் திட்டத்தை ரத்து செய்யக்கூடும் என்று பலர் பேசி வருகின்றனர் ” என இடம்பெற்று இருக்கிறது.

அதாவது, அமைச்சரே பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது எனக் கூறிய பிறகும், பேருந்து கட்டணம் உயர்த்துவதாகவும், பெண்களுக்கான கட்டணமில்லா பயணத்தை ரத்து செய்ய உள்ளதாக சிலர் பேசி வருகின்றனர் எனக் கூறி பொய்யான தலைப்பில் செய்தியைப் பரப்பி உள்ளனர்.

மேலும் படிக்க : மே 18 முதல் உயரும் பேருந்து கட்டண விவரங்கள் எனப் பரவும் செய்தி உண்மையா ?

கடந்த மே மாதம் தமிழ்நாடு அரசு பேருந்து கட்டணம் உயர்வதாக வதந்தி செய்தி பரவியது குறிப்பிடத்தக்கது.

முடிவு : 

நம் தேடலில், கட்டணமில்லா பேருந்து ரத்து, அரசு பஸ் கட்டணம் உயர்வு எனப் பரப்பப்படும் செய்தி பொய்யானது, அப்படி எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader