அரசு பேருந்தில் பெண்களுக்கான இலவச பயணத் திட்டத்தை நிறுத்த உள்ளதாகப் பரவும் போலிச் செய்தி !

பரவிய செய்தி
நிதிநிலை பற்றாக்குறையால் விரைவில் அரசு பேருந்தில் பெண்கள் பயணிக்கும் இலவச திட்டம் நிறுத்தப்பட வாய்ப்புள்ளது – போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்.
மதிப்பீடு
விளக்கம்
தமிழ்நாட்டில் உள்ளூர் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் திட்டத்தை கடந்த ஆண்டு திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு அமல்படுத்தப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகிறது.
இந்நிலையில், நிதிநிலை பற்றாக்குறையால் விரைவில் அரசு பேருந்தில் பெண்கள் பயணிக்கும் இலவச திட்டம் நிறுத்தப்பட வாய்ப்புள்ளது என தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்ததாக ABP நாடு சேனலின் நியூஸ் கார்டு சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
பிப்ரவரி 19-ம் தேதி தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகளின் பிரச்சாரங்கள் நடைபெற்று வருகிறது. தேர்தல் களத்தில் அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர் கட்சிகள் திமுக அரசு தனது வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனக் கூறி பிரச்சாரம் செய்கின்றனர். அதற்கு, தேர்தல் வாக்குறுதிகள் பல நிறைவேற்றப்பட்டு உள்ளதாக திமுக தரப்பில் பட்டியலிடப்பட்டு எதிர் பிரச்சாரம் செய்கின்றனர்.
குறிப்பாக, இப்படியான தேர்தல் நேரத்தில் நடைமுறையில் இருக்கும் அரசின் முக்கிய திட்டங்கள் நிறுத்தப்படும் என அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பில்லை. அது தேர்தல் களத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என கட்சியினர் அறிவார்கள். ஆகையால், அரசின் நலத்திட்டங்களை குறித்த அறிவிப்புகளே பிரச்சார நேரத்தில் வெளியாகும்.
உண்மையில், அரசு பேருந்துகளில் பெண்களுக்கான இலவசப் பயணத் திட்டத்தை நிறுத்த உள்ளதாக ராஜகண்ணப்பன் தெரிவித்தார் என அறிவிப்புகளோ அல்லது செய்தியோ ஏதும் வெளியாகவில்லை.
இதுகுறித்து ABP நாடு சேனலின் முகநூல் பக்கத்தில் தேடுகையில், பிப்ரவரி 16-ம் தேதி அன்று அமைச்சர் ராஜகண்ணப்பன் குறித்து எந்த செய்தியும் வெளியாகவில்லை. நியூஸ் கார்டில் போலியான செய்தியை எடிட் செய்து பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
இதுகுறித்து, ABP நாடு சேனலின் ஆசிரியர் மனோஜ் தன் ட்விட்டர் பக்கத்தில், ” வைரல் செய்யப்படும் நியூஸ் கார்டு போலியானது. இது முடிவற்றதாகிவிட்டது. தயவு செய்து இதை தவிர்க்கவும் மக்களே ” எனப் பதிவிட்டு இருக்கிறார்.
முடிவு :
நம் தேடலில், நிதிநிலை பற்றாக்குறையால் விரைவில் அரசு பேருந்தில் பெண்கள் பயணிக்கும் இலவச திட்டம் நிறுத்தப்பட வாய்ப்புள்ளது என போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியதாக பரவும் செய்தி போலியானது. எடிட் செய்யப்பட்ட போலி நியூஸ் கார்டை தவறாகப் பரப்பி வருகிறார்கள் என அறிய முடிகிறது.