கும்பமேளாவை அனுமதித்த அரசை கண்டித்த பெண் பத்திரிகையாளர் கொலை என வதந்தி !

பரவிய செய்தி
பத்திரிக்கை நிருபரை கொலை செய்யும் காவி பயங்கரவாதிகள் தப்ளிக் ஜமாத் மீது அவதூறை சுமத்திய காவி பயங்கரவாதிகள் இன்று கும்பமேளாவிற்கு அனுமதி கொடுத்து கோரானாவை பரப்பிய இந்த அரசை கண்டித்த பத்திரிக்கை நிருபர் கொலை !
மதிப்பீடு
விளக்கம்
கும்பமேளா விழாவால் கொரோனா பரவுவது தொடர்பாக கேள்வி கேட்ட பெண் பத்திரிகையாளரை காவி பயங்கரவாதிகள் கொலை செய்ததாக, சாலையில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட புகைப்படம், கொலை செய்யப்படும் வீடியோ மற்றும் பெண் பத்திரிகையாளர் பேசும் செய்தி வீடியோ ஆகியவற்றை ஒன்றிணைத்து வெளியிட்ட பதிவு சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டு வருகிறது.
வைரலாகும் பதிவுகளை பகிர்ந்த வாசகர்கள், இதன் உண்மைத்தன்மை குறித்து கேட்டு வருகிறார்கள்.
உண்மை என்ன ?
பெண் பத்திரிகையாளரை கொலை செய்ததாக பகிரப்பட்ட வீடியோ மற்றும் புகைப்பட பதிவில் இடம்பெற்ற கொலை செய்யும் வீடியோவை முன்பே, ” டெல்லியில் இந்து பெண்ணை லவ் ஜிகாத் கொலை செய்வதாக ” என்ற வதந்தியுடன் பரப்பி இருந்தனர்.
விரிவாக படிக்க : டெல்லியில் பெண்ணை கொடூரமாக கொலை செய்யும் வீடியோ.. லவ் ஜிகாத் என வதந்தி !
அந்த வீடியோவில் கொலை செய்யப்படும் பெண் டெல்லி சஃப்தார்ஜுங் மருத்துவமனையில் பணியாற்றும் 26 வயதான நீலு மேத்தா என்றும், கொலை செய்தவர் அவரின் கணவர் ஹரிஷ் மேத்தா எனும் தகவலை போலீசார் தெரிவித்தனர் என முன்பே கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.
அடுத்ததாக, சாலையில் கொலை செய்யப்பட்ட நிலையில் இருக்கும் பெண்ணின் புகைப்படமும் டெல்லியில் கொலை செய்யப்பட்ட அதே பெண்ணின் படமே.
கொலை செய்யப்பட்டதாக வைரல் செய்யப்படும் பெண் பத்திரிகையாளர் பிரயாக்யா மிஸ்ரா தன்னைப் பற்றி பரவும் வதந்தி குறித்து தெளிவுப்படுத்தி உள்ளார். ” நான் வீட்டில் நலமாக உள்ளேன். கோவிட்-19 காரணமாக வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டேன். நான் கொலை செய்யப்பட்டதாக வரும் தகவல் வதந்தியே ” என தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
முடிவு :
நம் தேடலில், கும்பமேளாவிற்கு அனுமதி கொடுத்து கொரோனாவை பரவிய அரசை கண்டித்த பெண் பத்திரிகையாளரை காவி பயங்கரவாதிகள் கொலை செய்ததாக பரவும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் தவறானவை. அது டெல்லியில் நடந்த வேறொரு கொலை சம்பவம். அந்த பெண் பத்திரிகையாளர் உயிருடன் இருக்கிறார் என அறிய முடிகிறது.